புதினங்களின் சங்கமம்

சிறையில் இருந்து வெளியேறிய நளினி – ஆர்த்தி எடுத்து வரவேற்ற தாய்

பாதுகாப்பு காரணங்களால் நளினி பரோலில் வெளியே வருவதில் காலதாமதம் ஆன நிலையில், மகளின் திருமணத்திற்காக சிறையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் பெண்கள் தனிச்சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

மகளின் திருமண ஏற்பாடுகள் செய்வதற்காக நளினி 6 மாதம் பரோல் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கில் அவரே ஆஜராகி வாதாடினார். அதை தொடர்ந்து நளினிக்கு ஒருமாதம் பரோல் வழங்கி உத்தரவிடப்பட்டது.

10 நாட்களுக்குள் பரிசீலித்து நளினியை பரோலில் விடவேண்டும். அரசியல்வாதிகள் இயக்கவாதிகளை சந்திக்க கூடாது பேட்டியளிக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நளினிக்கு அவரது தாயார் பத்மா மற்றும் காட்பாடியை சேர்ந்த பெண் ஒருவரும் ஜாமீன் வழங்கியுள்ளனர். நளினி வேலூர் ரங்காபுரம் புலவர் நகரில் உள்ள திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில துணை பொது செயலாளர் சிங்காராயர் வீட்டில் தங்குகிறார். 2 பேர் ஜாமீன் மற்றும் வேலூரில் தங்கும் இடம் குறித்த ஆவணங்களை நளினி சமர்ப்பித்துள்ளார்.

இதற்கிடையில், நளினி கடந்த 16ஆம் திகதி பரோலில் வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் வரவில்லை. இன்று பரோலில் வெளியே வருவார் என்று கூறப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் நளினி பரோலில் வெளியே வருவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

10 நாட்களில் நளினியை பரோலில் விட வேண்டும் என கோர்ட்டு விதித்த கெடு கடந்த 22ம் தேதியுடன் முடிந்தது. இந்நிலையில், தற்போது நளினி வேலூர் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்துள்ளார்.