புதினங்களின் சங்கமம்

யாழிலிருந்து சென்று லண்டன் வீதிகளில் அலைந்து திரிந்து நிம்மதியை இழந்த இளைஞனின் கண்ணீர் கதை!

ந்த உலகத்தில் சாதிக்க எத்தனையோ விடயங்கள் இருக்கின்றது, உலகத்து இளைஞர்கள் பல கனவுகளுடன் பல துறைகளில் சாதித்து வருகிறார்கள், ஆனால் ஈழத்தை பொறுத்த வரையில் அதுவும் யாழ்ப்பாணத்து இளைஞர்களை உங்களின் எதிர்கால கனவு என்ன? லட்சியம் என்ன என்று கேட்டால் அவர்கள் சொல்லும் ஒரே பதில் ஜரோப்பாவிலிருக்கும் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்ல வேண்டுமென்பதுதான்.

இது சரியா? தவறா? ஆரோக்கியமானதா? இலையா? என்பதை கடந்து வெளிநாடு என்றால் அங்கு சொகுசு வாழ்க்கைதான், பணத்தில் மிதக்கிறார்கள் என்ற எண்ணம்தான் ஈழத்திலிருக்கும் தமிழ் இளைஞர்கள் மனதில் உயர்ந்திருக்கின்றது.

உண்மையில் வெளிநாட்டு வாழ்க்கையில் உள்ள துன்ப, துயரங்களை அங்கு சென்றால் மட்டுமே உணர முடியும்.

இப்படி வெளிநாடு என்றால் அங்கு சொகுசு வாழ்க்கைதான், சொர்க்கம்தான் என்று எண்ணி யாழிலிருந்து லண்டன் சென்ற கஜன் என்ற இளைஞனின் துயரம் கலந்த வாழ்க்கையின் சிறிய அனுபவ பகிர்வு பின்வருமாறு..

எனது சொந்த ஊர் மானிப்பாய், எனது ஊரில் நண்பர்களுடன் அழகான வாழ்க்கை வாழ்ந்து வந்தேன், அப்போதுதான் எல்லோருக்கும் வரும் வெளிநாட்டு மோகம் எனக்கும் வந்தது, வெளிநாட்டில் இருப்பவர்கள் எங்கள் ஊருக்கு வரும்போது சொகுசு வாகனங்கள், உயர் தர தொலைபேசி, உடம்பு நிறைய நகைகள் என வருவார்கள் எங்களுக்கு பார்க்கும் போது நாமும் இப்படி வரவேண்டும் என நினைத்து வெளிநாட்டுக்கு செல்ல தயாரானேன்.

தந்தை, தாய், சகோதரிகள் என அனைவருடனும் சண்டை போட்டேன், அடம்பிடித்து வெளிநாடு செல்லத்தான் வேண்டுமென்று சொன்னேன் எனது தொந்தரவு தாங்காமல் வீட்டில் உள்ள சொத்துக்கள், நகைகள் என்பவற்றை விற்று எனக்கு லட்ஷக்கணக்கான ரூபாய் பணத்தை தந்தார்கள், நான் முகவர் ஊடக நாலு நாடுகள் கடந்து ஒரு வழியாக லண்டன் வந்து சேர்ந்தேன்.

அதற்கு பின்புதான் எனது வாழ்க்கையில் துயர நாள் ஆரம்பமானது, தங்க இடமில்லாமல், சாப்பாடு இல்லாமல் தவித்து, கஸ்ரப்பட்டு சொல்லனா துன்பங்களை அனுபவித்தேன், இரவுகளில் தூக்கம் வராது கண்ணீர்தான் வரும், ஏண்டா வந்தோம் என ஒவ்வொரு வினாடியும் தோன்றும், நான் அனாதையாகிவிட்டேனே என அழுவேன் அதற்கு பின்பு பல போராட்டங்களின் பயனாக இளமையை தொலைத்து தற்போதுதான் ஒரு நிலைக்கு வந்திருக்கிறேன்.

எனக்கு லண்டன் வரும் போது வயது 26 தற்போது 33 வயது கிழவன் மாதிரி ஆகிவிட்டேன் என்னோடு படித்த நண்பர்கள் எல்லோரும் யாழில் திருமணம் முடித்து குழந்தைகளை பெற்று சொந்தங்களுடன் சொந்த ஊரில் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

நான் இங்கு தனிமரமாக இயந்திர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இப்பத்தான் எனக்கு திருமணம் செய்ய பெண் தேடுகிறார்கள்.

இப்போது இங்கிருந்து சொந்த ஊரில் இருக்கும் நண்பர்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது, அப்படி வாழவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது.

இப்போதுதான் தெரிகிறது வாழ்க்கையென்றால் என்ன? நிம்மதி எங்கிருக்கிறது என்று.. தாயகத்திலிருந்து வெளிநாடு வருவோருக்கு நான் சொல்வது ஒன்றே ஒன்றுதான் சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரை போல் வருமா..

தொகுப்பு; நடராசா ஜெயகாந்தன்.