புதினங்களின் சங்கமம்

பேராசிரியர் விக்னேஸ்வரனைப் பதவி நீக்கியது சரிதான் – உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னை பதவி நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவு இரத்துச் செய்யும் கட்டளையை வழங்குமாறு கோரி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை வரும் செப்ரெம்பர் 27ஆம் திகதிவரை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரனைப் பதவி நீக்கியது உரிய சட்ட ஏற்பாடுகளைப் பின்பற்றிதான் என்பதை உறுதி செய்யும் வகையில் ஜனாதிபதி சார்பில் உத்தியோகபூர்வ
பிரதிநிதியிடமிருந்து சத்தியக் கடதாசியை சமர்ப்பிக்குமாறு சட்ட மா அதிபருக்கு உயர்
நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. வின்னேஸ்வரனை அந்தப்
பதவியிலிருந்து ஜனாதிபதி விலக்கியிருக்கிறார்.

இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரியாக பேராசிரியர்
கதிகாமநாதன் கந்தசுவாமி உயர் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன், தன்னை பதவி நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவு இரத்துச் செய்யும் கட்டளையை வழங்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை கடந்த மே மாதம் தாக்கல் செய்தார்.

தனது துணைவேந்தர் பதவியை நீக்கி ஜனாதிபதி வழங்கிய உத்தரவை நடைமுறைப்படுத்துவதை
இடைநிறுத்தவும் தற்போது தகுதிவாய்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர்
கந்தசாமியின் நியமனத்தை இடைநிறுத்தி வைக்கவும் இடைக்காலக் கட்டளை ஒன்றை வழங்குமாறு அந்த மனுவில் பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் கோரியிருந்தார்.

பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் சார்பில் சட்டவாளர் நிறுவனம் ஒன்று இந்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றில் கடந்த மே மாதம் சமர்ப்பித்தனர்.

மனுவில் பிரதிவாதிகளாக சட்ட மா அதிபர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அதிகாரி மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் பிரியந்த ஜெயவர்த்தன, எஸ்.துரைராஜா, இ.ஏ.ஜி.ஆர்.
அமரசேகர ஆகிய மூவர் கொண்ட அவர் முன் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி நிரான் அங்கிட்டல் முன்னிலையானார். எதிர்மனுதாரர்கள் சார்பில்
மேலதிக மன்றாடியார் அதிபதி விராஜ் தயாரத்ன முன்னிலையானார்.

“பேராசிரியர் விக்னேஸ்வரன் துணைவேந்தர் பதவியிலிருந்து ஜனாதிபதி நீக்கியமைக்கு சட்ட
ஏற்பாடுகளின் கீழ் அடிப்படைக் காரணங்கள் எவையும் இல்லை. மனுதாரர் புலமை வாய்ந்தவர்” என
மனுதாரரின் சட்டத்தரணி நீண்ட சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

மனுதாரர் என்ன நிவாரணத்தை கோருகின்றார் என்று நீதியரசர்கள் அமர்வு கேள்வி எழுப்பியது.

“மனுதாரர் சட்ட ஏற்பாடுகளுக்குப் புறம்பாக ஜனாதிபதியால் பதவி நீக்கப்பட்டுள்ளார். அதனால்
அவரது பதவி நீக்க உத்தரவை மன்று தள்ளுபடி செய்யவேண்டும்” என்று மனுதாரரின் சட்டத்தரணி
மன்றுரைத்தார்.

“மனுதாரர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியிலிருந்து சட்ட
ஏற்பாடுகளுக்கு அமையவே ஜனாதிபதியால் பதவி நீக்கம் செய்யப்பட்டார்” என்று மேலதிக
மன்றாடியார் அதிபதி விராஜ் தயாரத்ன மன்றுரைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் ஆராய்ந்த உயர் நீதிமன்ற அமர்வு, “பேராசிரியர் இரட்ணம்
விக்னேஸ்வரனைப் பதவி நீக்கியது உரிய சட்ட ஏற்பாடுகளைப் பின்பற்றிதான் என்பதை உறுதி
செய்யும் வகையில் ஜனாதிபதி சார்பில் உத்தியோகபூர்வ பிரதிநிதியிடமிருந்து சத்தியக்
கடதாசியை சமர்ப்பிக்கவேண்டும்” என்று மேலதிக மன்றாடியார் அதிபதிக்கு அறிவுறுத்தியது.

“எதிர்மனுதாரர்களால் சமர்ப்பிக்கப்படும் சத்தியக் கடதாசியின் பிரதி மனுதாருக்கும் அடுத்த
தவணைக்கு முன் சமர்ப்பிக்கவேண்டும். அப்போதுதான் அந்தச் சத்தியக்கடதாசி தொடர்பில் எமது
விளக்கத்தை முன்வைக்க இலகுவாக இருக்கும்” என்று மனுதாரரின் சட்டத்தரணி நிரான் அங்கிட்டல்
மன்றுரைத்தார்.

“மனுதாரருக்கு சத்தியக் கடதாசியின் பிரதி மட்டுமே வழங்க முடியும். அதனுடன் இணைந்து
மன்றுக்கு சமர்ப்பிக்கும் அந்தரங்க ஆவணங்களை வெளிப்படுத்த முடியாது” என்று மேலதிக
மன்றாடியார் அதிபதி மன்றுரைத்தார்.

“யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கோரல்
முன்னெடுக்கப்படவுள்ளது. எனவே மனுதாரரின் இடைக்கால நிவாரணமான அவரது பதவி நீக்கத்தை
இடைநிறுத்தி வைக்கும் கட்டளையும் தகுதிவாய்ந்த அதிகாரியின் நியமனத்தைத் தடுக்கும்
கட்டளையும் மன்று வழங்கவேண்டும்” என்று மனுதாரரின் சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கோரல்
முன்னெடுக்கப்படவுள்ளது என்ற விடயம் எனக்குத் தெரியப்படுத்தப்படவில்லை என்று மேலதிக
மன்றாடியார் அதிபதி பதிலுரைத்தார்.

அதனால் இடைக்காலக் கட்டளைக்கான விண்ணப்பத்தை ஏற்க மறுத்த உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு,
மனு மீதான விசாரணையை வரும் செப்ரெம்பர் 27ஆம் திகதிவரை ஒத்திவைத்தது.

பின்னணி
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் இ. வின்னேஸ்வரனை அந்தப்
பதவியிலிருந்து ஜனாதிபதி விலக்கியிருக்கிறார்.

ஏப்ரல் மாதம் 30ஆம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில், 1978 ஆம் ஆண்டின் 16
ஆம் இலக்க பல்கலைக்கழக சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரங்களைப்
பாவித்து, பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்
துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கடிதம்
மூலம் மே 5ஆம் திகதி அறிவித்திருந்தார். எனினும் பேராசிரியர் இ. விக்னேஸ்வரனைப்
பதவியில் இருந்து நீக்கியமைக்கான காரணங்கள் எதுவும் கடிதத்தில் கூறப்படவில்லை என்பது
குறிப்பிடத்தக்கது.