யாழ்ப்பாண சமூகத்தின் “தான் தப்பத் தான் தப்பத் தாளத்தின்” சுய நலத்தை “நைசாக” வெளிப்படுத்திய குழந்தை விடைபெற்றார்… வீடியோ
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
யாழ்ப்பாண சமூகத்தின் “தான் தப்பத் தான் தப்பத் தாளத்தின்” சுய நலத்தை “நைசாக” வெளிப்படுத்திய எங்கள் நாடகத் துறைத் தந்தை குழந்தை ம.சண்முகலிங்கம் ஐயா எங்களிடமிருந்து விடைபெற்றார்…..
( “தான் தப்பத் தான் தப்பத்
தாளத்தில் வளர்ந்தவன் தான்
தமிழனடா தம்பி……”
என் தமிழாசிரியர் கவிஞர் பண்டிதர் இணுவில் சா.வே பஞ்சாட்சரம்)
“ஆரும்…… ஆரும் பெடியள் விளையாடட்டும்(போராடட்டும்)…… நாங்கள் விலத்தி நிண்டு(போராட்டத்தின் சரி பிழைகளைச் சொல்லாமலும் போராட்டத்தில் பங்குபற்றாமலும்)……. நெஞ்சில நோகாமல் விசிலடிச்சு…… நெஞ்சில நோகாமல் விசிலடிச்சு……..பாத்துக்கொண்டு நிக்கிறம்….”
குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் “மண்சுமந்த மேனியர்” நாடகத்தில் எழுதிய வரிகள்……
“ஆரும் பெடியள்” யார்………?
யாழ்ப்பாணத்தின் விவசாயிகள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்களின் பிள்ளைகள்….
தமிழ் போராட்ட இயக்கங்களில் 1980 களிலிருந்து இணைந்து மடிந்தவர்களில் 75 % இளைஞர் யுவதிகள் அவர்கள் தான்…..
சரி பிழைகளை போராட்ட இயக்கங்களுக்கு இடித்துரைக்காமல்….அவர்களுக்கு எடுத்துக் கூறாமல்…….போராட்டத்தில் எவ்விதத்திலும் பங்களிக்காமல்….. “விசிலடித்துப் பாத்துக் கொண்டிருந்தவர்கள்” யாழ். மேலோங்கிச் சமூகத்தினரும்( இவர்களில் சிலர் பிழையான செல் நெறிகளை தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கு வகுத்துக் கொடுத்தனர்) யாழ். மத்திய வர்க்கமும்…….
குழந்தை ம. சண்முகலிங்கம் ஐயா எம்மைவிட்டுப் பிரிந்தார் !
அவருக்கு என் அஞ்சலிகள் !
நாடகங்களினூடு இலங்கைத் தமிழரின் சமூக- அரசியல்- பண்பாட்டியலின் முரண் நிலைகளை சாதாரண மக்களும் புரியக்கூடியவகையில் ஒரு வகைக் கிண்டலுன் நகைச்சுவையுடன் பேசியவர் குழந்தை ம. சண்முகலிங்கம் ஐயா !
சமூகத்தின் வெகு ஜனங்கள் ‘தாமுண்டு தம்பாடுண்டு’ என்றுதான் இயங்கும்.
சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை கண்டும் காணாமல் வெகுசனங்கள் உறங்கும்.
அந்த உறக்கத்தைக் கலைத்து சமூக- அரசியல் விழிப்பை ஏற்படுத்த குழந்தை ம. சண்முகலிங்கம் ஐயா முயன்றார்.
அவரது “மண் சுமந்த மேனியர்” நாடகத்தை 1980 அல்லது 1981 இல் கந்தரோடை ஸ்கந்தவரோதயக் கல்லூரியின் அரங்கில் ‘முன்னுக்கு இருந்து’ பார்த்தேன். எனது சிறுவன் பருவத்தில் ஆழப்பதிந்த யாழ்ப்பாண சமூகவியல் தத்துவங்களை அவரது ‘ மண்சுமந்த மேனியரில்’
“புடுங்கி” எடுத்தேன்.
அதன் பின்னர் யாழ்ப்பாணத்தில் அவரது பல நாடகங்களைப் பார்த்தேன்.
சிதம்பரநாதன், ரதிதரன், தேவா ஆகியோரின் நாடகங்களையும் பார்த்தேன். இவர்கள் குழந்தை ம.சண்முகலிங்கம் ஐயாவின் மாணவர்கள்…..இவர்கள் எல்லோரின் நாடகங்களிலிலும் தமது ஆசிரியரின் வாசனை தவிர்க்க முடியாமல் வீசும்….
வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பல தமிழர் ஆயுத இயக்கங்கள் போராடத் தொடங்கிய காலம் 1980 களின் ஆரம்பகாலம்.
ஆயினும் யாழ்ப்பாணத்தின் மேல் தட்டு வர்க்க மக்களும் மத்திய வகுப்பு மக்களும் போராட்டத்தினை எப்படி அணுகினர் என்பதை “மண் சுமந்த மேனியர்” நாடகம் அப்பட்டமாக வெளிப்படுத்தும்.
மண்சுமந்த மேனியர்களாக படை க் கப் பட்டவர்கள் உழைக்கும் உழைப்பாளி வர்க்கம்…..அந்த வர்க்கத்தின் குணமே வெளிப்படையான நேர்மையான குணம்….தீமைகளுக்கு எதிராக உரத்துக் குரல் கொடுத்தல்…..தம்மைப் போல கஸ்டப்படாமல் பிள்ளைகள் படிக்கவேண்டும் என்ற ஆதங்கம்…..உரத்த குரலில் தெளிவாகக் கதைத்தல்…..
குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்கள் யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1953 முதல் 1957 வரை இந்தியாவில் பட்டப்படிப்பை முடித்து செங்குந்த இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியிலமர்ந்தார். பின்னர் 1972 இல் பளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1976 இல் நாடகத்துறைக்கான டிப்புளோமா பட்டப்படிப்பை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு மீண்டும் பளை மகா வித்தியாலயத்தில் ஆசிரியப் பணியைத் தொடர்ந்தார். 1981 இல் மீண்டும் செங்குந்த இந்துக் கல்லூரிக்கு மாற்றலாகிச் சென்று, 1986 முதல் 2004 வரை கொழும்புப் பல்கலைக்கழகத்தில் நாடகக் கற்பித்தல் பணியில் முழுநேரமாக ஈடுபட்டார்.
இவர் இதுவரை நூற்றி இருபதிற்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியிருக்கிறார். இவற்றில் சில நூலுருவிலும் வந்திருக்கின்றன. நாடக ஆசிரியர்களான சோபாக்கிளிஸ், இப்சன், அன்ரன்-செக்கோவ், பேட்டல்-பிரக்சட், தாகூர் ஆகியோரின் நாடகங்களில் சிலவற்றையும் சில யப்பானிய நாடகங்களையும் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.
1978 சனவரி 23 இல் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரி ஒன்றை நிறுவி நாடகத்தை ஒரு பயிற்சி நெறியாக தமிழ் கலைஞர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார். இந்தப் பணி மூலமாக யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல இலங்கையிலேயே காத்திரமான நாடகத்துறை ஒன்று உருவாக இவர் காரணமாக இருந்திருக்கின்றார்.
1980களுக்குப் பின்னர் தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்திய இவர் ராணுவ அடக்குமுறை பெண்களுக்கெதிரான அடக்குமுறை மாணவர்களை அடக்கிய கல்வி அடக்குமுறை சாதிய அடக்குமுறை சமூகத்தின் போலித்தனங்கள் என்பவற்றையெல்லாம் தனது நாடகங்கள் மூலமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.
இவர் எழுதி இயக்கிய மண் சுமந்த மேனியர் என்ற நாடகம் யாழ்ப்பாணத்தின் பட்டி தொட்டியெல்லாம் மேடையேற்றப்பட்டு மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தது. அத்துடன் இவரது ஏனைய நாடகங்களான அன்னை இட்ட தீ, எந்தையும் தாயும் ஆகிய நாடகங்களும் மிகவும் பிரபல்யம் ஆனவை. இவரது ஆர்கொலோ சதுரர் நாடகம் எல்லா நாடகங்களிலும் உச்சமானது.யுத்தத்தில் வெற்றி அல்லது முடிவு ஒன்றில்லை. தோற்பது மனிதம் தான் என்பதை பாரதப் போரின் 14ம் நாள் போரை மையப்படுத்திக் காட்டுகின்றார். இவர் மொழிபெயர்த்த வெண்கட்டி வட்டம் மக்கள்களரி தயாரிப்பில் 2016இல் தமிழ் சிங்கள மலையக முஸ்லிம் கலைஞர்களின் சங்கமிப்பில் யாழ்ப்பாணத்திலும் பண்டத்தரிப்பிலும் கொழும்பிலும் மேடையேறியமை குறிப்படத்தக்கது. நாடக அரங்கக் கல்லூரியின் தயாரிப்பாக உறவுகள் நாடகம் 2017இல் மீளவும் இரதிதரன் இயக்கி பண்டத்தரிப்பு, காரைநகர், புத்தூர், வவுனியா ஆகிய இடங்களில் தேசிய கலை இலக்கியப் பேரவையினால் மேடையேற்றப்பட்டது. அதேபோல் அவரது மொழிபெயர்ப்பில் தான் விரும்பாத் தியாகி நாடகமும் பல மேடையேற்றங்களைக் கண்டது. 1976 ஆம் ஆண்டில் வெளியான பொன்மணி இலங்கைத் திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார்.
இவர் மொழிபெயர்த்த கவிதைகள் சில தாயகம் இதழில் பிரசுரமானதுடன் தாயகம் இதழின் ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்தார். ஈழத்தின் சிறுவர் நாடகத்தின் முன்னோடியான இவர் சிறுவர் நாடகங்களையும், பாடசாலை நாடகங்களையும் எழுதி இயக்கியிருக்கிறார். கூடிவிளையாடு பாப்பா, காட்டுராஜா, முயலார் முயல்கிறார் போன்ற நாடகங்கள் அவர் எழுதிய சிறுவர் நடாகங்களில் சில.
நாடக வழக்கு (அரங்கியற் கட்டுரைகளும், நேர்காணல்களும்),
மாதொருபாகம்,
வேள்வித் தீ,
ஒரு பாவையின் வீடு ( மொழி பெயர்ப்பு நாடகம்),
அன்னை இட்ட தீ,
கோக்கேசிய வெண்கட்டி வட்டம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
ஈழத்து தமிழ் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற கலாநிதி ம.சண்முகலிங்கம்(குழந்தை) 2025.01.17 அன்று தனது 93வது வயதில் காலமாகியுள்ளார்.
இவர் 1931 ஒக்டோபர் 15ஆம் திகதி திருநெல்வேலியில் பிறந்தவர்.
நீர்கொழும்பில் தங்கொட்டுவ கிராமத்தில் தன் தந்தை வேலை செய்த தென்னை தோட்டத்தில் வளர்ந்தவர் ஆவார்.
இங்கு அடிநிலை சிங்கள தமிழ் மக்களோடு வாழ்ந்ததாக தனது எழுத்துக்களில் விளக்கியுள்ளார்.
தமிழில் நல்ல புலமையும், ஆங்கிலத்தில் நல்ல அறிவும், சிங்களம் தொடர்பாடல் செய்யக் கூடியவராகவும் மூன்று மொழிகளையும் பயன்படுத்தியவர். நூற்றுக்கு மேற்பட்ட சுயஆக்க நாடகங்களையும் அறுபதிற்கு மேற்பட்ட மொழிபெர்ப்பு நாடகங்களையும் தமிழ்நாடக உலகிற்கு தந்த பேராளுமை.
இவரது ஆற்றலும் ஆளுமையுமே நாடகமும் அரங்கியலும் என்ற பாடத்துறை தமிழில் வளர்ச்சியடையக்காரணமாக அமைந்தது. ஆசிரியராகப்பணியாற்றி ஓய்வு பெற்றதன் பின்னர் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் துறையை உருவாக்குவதில் பெரும் பணியாற்றியவர்.
திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தில் விதானை செல்வரத்தினத்துடன் இணைந்து நகைச்சுவை நாடகங்களை நடித்ததிலிருந்து இவரது நாடக வாழ்க்கை ஆரம்பமாகியது.
யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராய்ச்சி மகாநாட்டில் இவரது வையத்துள் தெய்வம் என்ற நாடகம் முதல்முதலில் மேடையேற்றப்பட்டது.
இதன் பின்னர் நாடகங்களை எழுத ஆரம்பித்த அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாடக டிப்ளோமா பயிற்சியை தனது 45வது வயதில் பெற்றுக்கொண்டார்.
பின்னர் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக்கல்லூரியை உருவாக்கிய இவர் புகழ்பெற்ற நாடகர் தாஸிசியஸ் உடன் இணைந்து ஈழத்து நாடகர்களுக்கு தொடர்பயிற்சியை வழங்கியவர். நாடகம் கல்வியாக வரவேண்டும் அதனைக்கற்றறிந்து செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தியவர்.
க.பொ.த உயர்தரத்தில் நாடகத்தை ஒரு பாடமாகக் கொண்டுவர அவரது பங்களிப்பு முக்கியமானது. இதற்காக இலவசமாக நாடகத்தை பல ஆண்டுகள் கற்பித்தவர்.
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பாடம் ஒரு துறையாக வளர்ச்சியடைந்துள்ளதென்றால் அதற்கு மூலகாரணமானவர் குழந்தை ம. சண்முகலிங்கம். மாணவர்கள் கற்பதற்காக ஏராளமான ஆங்கில நூல்களை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
யாழ்ப்பாண தேசிய கல்வியியல் கல்லூரியில் நாடகமும் அரங்கியலும் பாடத்தை ஆரம்பிக்க இவரது பணிமுக்கியமானது. ஆசிரியர்களுக்கான நாடகக்களப்பயிற்சிகள் பலவற்றை நடத்தி ஆசிரியர்களை நாடகத்துறையில் உருவாக்கியவர். இவருக்கு நீண்ட மாணவர் பரம்பரை உண்டு.
இவரது தனி முயற்சியால் பல இளைஞர்கள் நாடகத்தைக்கற்று தேர்ந்து ஆசிரியர்களாகப் பணியாற்றுகிறார்கள். இவரது நாடகங்கள் சமூக அரசியல் நிலைமைகளைப் பேசியிருக்கின்றன.
தனது கருத்துக்களை நாடகத்தினூடாக சொல்வதில் எந்த சமரசத்துக்கும் செல்லாதவர். இவரது முக்கியமான நாடகங்களாக மண்சுமந்த மேனியர், எந்தையும் தாயும், அன்னையிட்ட தீ, ஆர்கொலோ சதுரர், கூடிவிளையாடு பாப்பா, பஞ்சவர்ணநரியார் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம்.
இவரது நாடகப்பணியைப் போற்றி கிழக்குப்பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ கலாநிதி பட்டம் வழங்கி கொளரவித்துள்ளது.
இவரது இழப்பு ஈழத்து நாடக உலகிற்கு ஈடுசெய்ய முடியாதது. தனிமனிதனாக தன்னலம் கருதாது நாடகமும் அரங்கியலும் துறைக்கு அளப்பெரிய பணியை ஆற்றியிருப்பதோடு, பல்கலைக்கழக நாடகத்துறையை உருவாக்கி வளர்த்த பெருமைக்குரியவர்.
ஐயா !
இந்த உலகம் ஒரு நாடகமேடை….
எல்லா ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்கள்…..
“All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts…..”
ஐயா ! நீங்கள் விரும்பிச் சொல்லும் ஆங்கில நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் கவிதா நாடகத்தின் ஒரு பகுதியுடன்….உங்களுக்கு என் கண்ணீர் அஞ்சலிகளைச் செலுத்தி நிறைவு செய்கிறேன்……
The Seven Ages of Man
All the world’s a stage,
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts,
His acts being seven ages. At first the infant,
Mewling and puking in the nurse’s arms.
Then, the whining school-boy with his satchel
And shining morning face, creeping like snail
Unwillingly to school. And then the lover,
Sighing like furnace, with a woeful ballad
Made to his mistress’ eyebrow. Then, a soldier,
Full of strange oaths, and bearded like the pard,
Jealous in honour, sudden, and quick in quarrel,
Seeking the bubble reputation
Even in the cannon’s mouth. And then, the justice,
In fair round belly, with a good capon lined,
With eyes severe, and beard of formal cut,
Full of wise saws, and modern instances,
And so he plays his part. The sixth age shifts
Into the lean and slippered pantaloon,
With spectacles on nose and pouch on side,
His youthful hose, well saved, a world too wide
For his shrunk shank, and his big manly voice,
Turning again toward childish treble, pipes
And whistles in his sound. Last scene of all,
That ends this strange eventful history,
Is second childishness and mere oblivion,
Sans teeth, sans eyes, sans taste, sans everything.
(Jaques, Act 2 Scene 7)

