மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு!
புத்தளம் – மஹகும்புக்கடவல , கிவுல பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் மின்சாரம் பழுது பார்க்கும் ஊழியர் ஒருவர் சடலமாக நேற்று முன்தினம் இரவு (19) மீட்கப்பட்டுள்ளார்.
புத்தளம் வடக்கு, அட்டவில்லு பகுதியில் வசித்து வந்த ஜயசிங்க முதியன்சேலாகே ஜயந்த குமார அதுலசிறி பண்டார ( வயது 56) எனும் ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றின் பின்பக்கமாக சடலம் ஒன்று கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்தனர்.
கிவுல பகுதியில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் இருந்தே குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி தேசமான்ய பதுர்தீன் முஹம்மது ஹிசாம் சம்பவ இடத்தில் மரண விசாரணைகளை முன்னெடுத்ததுடன், சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று (20) முன்னெடுக்கப்பட்டதுடன், திறந்த தீர்ப்பு வழங்கி சடலம் உயிரிழந்தவரின் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் மரணம் குறித்து புத்தளம் தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.