மன்னார் சிந்துஜாவுக்கு நீதி கோரி யாழ் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி செந்துாரன் உண்ணாவிரதம்!!
மன்னார் வைததியசாலையில் வைத்திய கவலையீனம் காரணமாக உயிரிழந்த அப்பாவி இளம் தாய் சிந்துஜாவுக்கு நீதி கோரி,யாழ் கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியான செந்துாரன் கணேசதாசன் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மன்னாரில் ஆரம்பித்துள்ளார். சாவகச்சேரியின் முன்னாள் வைத்திய அதிகாரியாக இருந்த அர்ச்சுனாவுக்கு அடுத்து மருத்துவத் தவறுகளுக்காக முதன் முதலில் களத்தில் குதித்துள்ளார் இன்னொரு வைத்திய அதிகாரி செந்துாரன். கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரியாக இருந்து சிறப்பான முறையில் அப்பகுதி மக்களுக்கு சேவையாற்றி வந்த செந்துாரன், அண்மையில் சாவகச்சேரி வைத்தியசாலை சம்பவத்தில் குறித்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக இருந்த அர்ச்சுனாவுக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்து பலரின் விசனத்துக்கு உள்ளாகியிருந்தார்.
அத்துடன் மன்னாரில் சிந்துஜா இறந்த போது அங்கு சென்ற வைத்தியர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டமை மக்களைக் கொந்தளிக்க வைத்தது. அந் நிலையில் வைத்தியர் செந்துாரன் சிந்துஜாவுக்கு நீதி கோராது அர்ச்சுனாவை கேலி செய்யும் விதமாக கடிதம் எழுதியது மக்களை கடும் கோபத்துக்குள்ளாக்கியது. வைத்தியர்கள் செய்யும் தவறுகளை மூடி மறைத்து அவர்களுக்கு ஆதரவாக செந்துாரன் செயற்படுவதாக மக்கள் சமூகவலைத்தளங்களில் தமது விசனத்தை பதிவு செய்தார்கள். ஆனால் அர்ச்சுனாவின் விசுப்புளாத்திதனமான பேஸ்புக் பதிவுகளுக்கும், அர்ச்சுனாவின் பொய்க் குற்றச்சாட்டுக்கள் சிலவற்றுக்குமே செந்துாரன் தனது கருத்தை பதிவு செய்திருந்ததாக செந்துாரனின் சிறப்பான மருத்துவ சேவையை அறிந்தவர்கள் பலரும் கருத்துத் தெரிவித்திருந்தார்கள்.
இந் நிலையிலேயே வைத்தியர் செந்துாரன் மன்னார் இளம் தாயின் மரணத்துக்கு நீதி கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தனது மருத்துவ ஆளுமையை இதில் அவர் நிரூபித்துள்ளார். செந்துாரனின் செயற்பாட்டுக்கு சமூகவலைத்தளங்களில் பலரும் நன்றி தெரிவித்துள்ளதுடன் செந்துாரனைப் போன்ற மக்களுக்கு சிறந்த சேவையாற்றும் மருத்துவர்களும் வைத்தியசாலைகளில் நடக்கும் வைத்தியத் தவறுகளுக்கு எதிராக செயற்பட வேண்டும் எனவும் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்கள்.

