மன்னாரில் இளம் தாய் கொலையில் நீதியை நிலைநாட்டுவது எப்படி? வைத்திய நிபுணர் பரபரப்பு தகவல்!!
தமது கடமையைச் செய்யத் தவறிய அரச பணியாளர்களை உடனடியாகப் பணி நீக்கம் செய்யத் தேவையான பிரிவுகள் ஸ்தாபன விதிக் கோவையில் இருந்தும், அவர்கள் எவரும் இதுவரை பணிநீக்கம் செய்யப்படாத நிலையில் மன்னார் பொதுஜன அமைப்புகள் பணிநீக்கத்தை வலியுறுத்திய போராட்டத்தை நாளை ஆரம்பிக்க இருப்பது ‘நீதி மன்னாரில் நிலைநாட்டப்படும்’ என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் நீதியை நிலைநாட்டுவதற்கு இந்தக் கோரிக்கை மாத்திரம் போதுமானதல்ல.
கடந்த காலத்தில் மருத்துவக் கவனக்குறைவால் (medical negligence) நோயாளி இறந்த சந்தர்ப்பங்களில், அவ்வேளையில் கடமையிலிருந்த வைத்தியர்கள் மற்றும் ஏனைய வைத்தியசாலை ஊழியர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். (இணைக்கப்பட்டுள்ளது )
இருப்பினும், இதுவரை இந்த அநியாய சாவு இடம்பெற்றபோது கடமையிலிருந்த பெருங்குடி மருத்துவர் உட்பட எவரும் இதுவரை கைது செய்யப்படாததை அடுத்துக், ‘காவல்துறையினர் , மன்னாரில் உள்ள சட்டத்தரணிகள் மற்றும் தொழில் சங்க மாபியாக்கள் அனைவரும் இணைந்து இறப்பிற்குப் பதில் கூறவேண்டியவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்களா?’ என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்க வைத்தியசாலையில் மருத்துவக் கவன குறைவால் உயிரிழப்பு ஏற்பட்டால் 4 முனைகளில் அதை எதிர்த்து போராடவேண்டும்
1. வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் சுகாதார திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுத் திணைக்கள விசாரணை மூலம் கடமை தவறியவர்கள் இனங்காணப்பட்டு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.
2. போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். நோயாளி மருத்துவக் கவலையீனத்தால் இறந்திருப்பின், காரணமானவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். தொடர்ந்து குற்றவியல் [criminal] விசாரணைகள் முன்னேடுக்கப்பட வேண்டும்
3. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் நட்டஈடு கோரி கடமை தவறியவர்கள்,, வைத்தியசாலை மற்றும் சுகாதார திணைக்களத்துக்கு எதிராகச் சிவில் வழக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
4. பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் இலங்கை மருத்துவச் சபையில் கடமை தவறிய மருத்துவர் /மருத்துவர்களின் உரிமத்தை இரத்து செய்யுமாறு சத்தியக் கடதாசி சமர்ப்பித்து ஏனைய நோயாளிகளுக்கு இது போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்.
மன்னாரில் உள்ள பெரும்பாலான சட்டத்தரணிகள் தனியார் துறையிலேயே மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக் கொள்கிறார்கள். அவர்களுடைய தேவை மன்னாரில் தனியார் வைத்தியசாலைகள் பல மருத்துவ நிபுணர்களுடன் இயங்கவேண்டும் என்பது தான். அவர்களுக்கு அரசாங்க வைத்தியசாலையில் இடம்பெற்ற சிந்துஜாக்களின் மரணமோ அல்லது மருத்துவர்கள் மாதத்தில் 2 வாரம் மட்டும் வேலை செய்வதானால் நீண்ட வரிசையில் நிற்கும் ஏழை நோயாளிகளைப் பற்றிய கரிசனை எதுவும் இருக்க போவதில்லை. கரிசனை இருந்திருந்தால் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இந்த சட்டவிரோத விடயங்களை அறிந்திருந்தும் எதுவும் செய்யாமல் இருந்திருப்பார்களா?
மன்னார் பாராளுமன்ற உறுப்பினர்களும் தனியார் வைத்தியசாலையை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். நீண்ட காலமாக அரசாங்க வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் கவனக்குறைவால் ஏற்படும் சாவுகள் நோயாளிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் பாலியல் இலஞ்ச கொடுமைகள் பற்றி இவர்கள் இதுவரை அறிந்து இருக்கவில்லையா ? அறிந்திருந்தும் அக்கறை காட்டவில்லை என்பதே உண்மை.
இதுபோல் கத்தோலிக்க திருச்சபை இப்போது மன்னாரில் தனியார் வைத்தியசாலை ஒன்றை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதால் இனிமேல் ஏழை நோயாளிகளுக்கு இழைக்கப்படும் அநியாயங்கள் குறித்து வாய் திறக்க போவதில்லை. கடந்த காலங்களில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற மாவட்டங்களில் திருச்சபையினால் பரிபாலிக்கப்படும் வைத்தியசாலைகளில் ஊழியர்களின் கவனக்குறைவு காரணமாக கர்ப்பிணி தாய்மார் இறந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் திருச்சபை குற்றம் சாட்டப்பட்ட ஊழியர்களை பாதுகாப்பதற்கே முயன்று வந்துள்ளன.
இந்த சதிச் செயல்கள் அனைத்தையும் கவனத்தில் எடுத்து மக்கள் இன மத பேதங்களை மறந்து ஒற்றுமையாக போராடினால் நீதியை நிலைநாட்டும் முயற்சி வெற்றி பெறும்
நன்றி
Dr முரளி வல்லிபுரநாதன்
சமுதாய மருத்துவ நிபுணர்
12.8.2024