மன்னார் வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்த தாயின் கொடூரச் சாவின் பின்னணி!! அதிர்ச்சித் தகவல்கள் இதோ!!
ஒரு சில வைத்தியர்களும் வைத்தியத்துறை சார்ந்த உத்தியோகத்தர்களும் நடந்து கொள்ளும் அலட்சியப் போக்கினால் பல உயிர்கள் பலியாகி உள்ளள..
இதன் காரணமாக ஏற்படும் விமர்சனங்கள் உண்மையிலேயே மனித நேயத்தோடும் கடமை பொறுப்போடும் கடமையாற்றும் வைத்தியர்களுக்கும், வைத்திய துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கும் மிகுந்த மன உளைச்சலையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்துகின்றன,
மன்னார் வைத்திய சாலையில் உயிரிழந்த இளம் தாய் சம்பந்தமாக இன்று அநேகர் மனதில் உள்ள உள்ளக்குமுறல் இது.
மன்னார் முருங்கன் பிரதேசத்திலுள்ள தம்பனை என்ற கிராமத்துப் பெண் திருமதி.சிந்துஜா தனது முதலாவது பிரசவத்தை மன்னார் பொது மாவட் வைத்தியசாலையில் பலத்த போராட்டத்தின் பின்னர் சிசேரியன் சத்திர சிகிச்சை மூலம் குழந்தையினைப் பெற்றுக் கொண்டார்.
திருமதி.சிந்துஜா பட்டப் படிப்பினை மேற்கொண்டு முடிக்கும் தறுவாயில் உள்ள வேளையில் தனது எதிர்கால கனவுகளுடன் தாயாகும் பாக்கியம் பெற்றிருந்தார்.
வைத்தியசாலையிலிருந்து தாயும் குழந்தையும் சுகமாக வெளியேறி தங்களது வீட்டில் தனது தாயாரின் அரவணைப்பில் இருந்த நிலையில் 5வது நாள் மட்டில் அசாதாரணமாக பெண்ணுறுப்பின் வழியில் இரத்தம் கசிவதை அவதானித்துள்ளார். மாலை நேரம் நெருங்கும் போது, கூடுதலான இரத்தம் வெளியேறத் தொடங்கிய நிலையில், அசிரத்தையாக இருந்ததை உணர்ந்து, தாயாரினதும் மற்றும் உறவினர்களின் வற்புறுத்தலின் முடிவில் 1990 அம்புலன்ஸ் வண்டியை வரவழைத்து பிரதேச வைத்தியசாலை முருங்கனிற்குக் கொண்டு சென்று அங்கு காலதாமதமின்றி மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு அவர்களால் அனுப்பி வைக்கப்பட்டார்.
தயார் மிகவும் நம்பிக்கையுடன் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு இரவு 2.00 மணியளவில் கொண்டு சென்று தனது மகளை விடுதி இலக்கம் 06 இல் அனுமதித்தார்.
அங்கு கடமையில் இருந்த தாதிகள் கொண்டுவரப்பட்ட நோயாளியை குளியலறைக்குச் சென்று இரத்தம் தோய்ந்திருந்த உடுப்புக்களை கழுவிவரும்படி பணித்துள்ளனர். அதன் படி கழுவிவிட்டு வந்த நோயாளியை கட்டிலில் படுக்கவைத்துவிட்டு ஏதோ ஒரு கருவியைக் கையில் பொருத்திவிட்டு தங்களது ஓய்வு அறைக்குச் சென்றுவிட்டனராம்.
தனது மகளிற்கு ஏதாவது பரிகாரம் நடக்கும், வைத்தியர் வருவார் என ஏக்கத்துடன் இருந்த தாய் பொறுக்கமுடியாது தாதியர்களின் ஓய்வு அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு தாதியர்கள் கைத்தொலைபேசியை வைத்து நோண்டிக் கொண்டிருந்ததை அவதானித்தார். தயார் பொறுத்துக் கொள்ள முடியாது ‘மகளின் நிலையைப் பாருங்கள்’ என்று அழுத போது, தாதியர்கள் அதட்டலான குரலில் ‘கையில் கருவி பொருத்தியுள்ளோம். நாங்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்’ என்று தாயாரை விரட்டியுள்ளனர்.
‘கையில் பொருத்திய கருவியை கைத்தொலைபேசியில் பார்த்தால் மட்டும் போதுமா? மகளின் உடம்பிலிருந்து வெளியேறும் இரத்தத்தை பார்க்க முடியுமா?’ என்று தாயார் தனக்குத்தானே கூறிக்கொண்டு வந்து, மீண்டும் மகளின் கட்டிலருகில் வந்து கடவுளை வேண்டிக் கொண்டு கையில் மகளின் சிறு குழந்தையையும் வைத்துக் கொண்டு காலை வரையும் இருந்ததாகவும் தயார் கூறுகிறார்.
காலை ஏழு மணியளவில் புதிய தாதியர்கள் கடமைக்கு வந்ததும் மீண்டும் தாதியர்களிடம் அணுகி தனது மகளின் பரிதாப நிலையை சொல்லி அழுதுள்ளார்.
நிலைமையினை உணர்ந்த புதிய தாதியர்கள் மீண்டும் மகளை பாத்றூம் போய்க் கழுவிவிட்டு வரும்படி கூறியுள்ளார்கள். தாயார் மிகவும் கஷ்டப்பட்டு கைத்தாங்கலாக மகளைக் கூட்டிக்கொண்டு சென்று கழுவிவிட்டு மீண்டும் கட்டிலடிக்கு வரும் வழியில் மகள் தலைசுற்றுவதாகக் கூறி திடீரெனக் கீழே விழுந்துவிட்டார். இந்நிலையில் தாயார் போட்ட கூக்குரலில் எல்லோரும் ஓடி வந்து கீழே கிடந்த மகளைத் தூக்கி கட்டிலில் வளர்த்தினார்கள். பின்பு ஏதோ ஏதோவெல்லாம் செய்தார்கள்.
காலை 7.30 மணியளவில் மூன்று வைத்தியர்கள் அவசர அவசரமாக வந்து மயக்க நிலையில் இருந்த மகளை தள்ளு வண்டிக்கு மாற்றி வைத்து தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு ஒப்பரேசன் அறைக்குக் கொண்டு சென்றனர்.
தாயார் மகளின் கைக்குழந்தையுடன் காவல் இருந்ததாகவும், 11 மணியளவில் ஒரு வைத்தியர் வந்து தாயாரைப் பார்த்து பெரிய ஐயா கதைக்க வரும்படி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பெரிய ஐயா பின்வருமாறு தயாரிடம் கூறினாராம். “அம்மா உங்கள் மகளிற்கு நிறைய இரத்தம் போய்விட்டது. இப்போது மூச்சுவிட முடியாது கஷ்டப்படுகிறா. நாங்கள் குழாய் போட்டு சுவாசிக்க காற்று கொடுக்கிறோம். இனி அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப் போகிறோம்” என்றாராம்.
அதற்குத் தாயார் “நாங்கள் நடுச்சாமத்தில் இங்கு கொண்டுவந்தோம். மகள் மயங்கி விழும்வரை ஏன் ஐயா நீங்கள் ஒருத்தரும் வந்து பார்க்கவில்லை” என்று கூறி அழுததாகவும் தயார் கூறுகிறார்.
அவ்வேளையில், அங்கு வந்த இன்னுமொரு டொக்டர் ஏதோ இங்கிலீசில் பெரிய டொக்டருடன் கதைத்த முறையை அவதானித்த போது, ஏதோ விபரீதமாக மாறுவதை தான் உணர்ந்ததாகத் தாயார் கூறுகிறார். அவ்விடத்தை விட்டு உடனே டொக்டர்மார் உள்ளே சென்று விட்டனராம்.
ஏறத்தாழ அரைமணித்தியாலம் கழித்து பெரிய டொக்டர் மீண்டும் வந்து தாயாரிடம் இவ்வாறு கூறினாராம். “உங்கள் மகளைப் போய்ப் பாருங்கள். நாங்கள் என்ன செய்ய முடியும்” என்றாராம். தாயார் மிகவும் ஆத்திரப்பட்டு “அடப்பாவிகளா! எல்லோரும் சேர்ந்து எனது மகளைக் கொன்று விட்டீர்களா? எனறு அழ மட்டுமே செய்யக் கூடியதாக இருந்ததாம்.
தன் மகளின் உயிர் மீண்டும் வருமா? சிறு கைக்குழந்தை தன் தாயின் பாலைக் குடிக்குமா? அதற்கு என்ன பதில்? பணிப்பாளர் வந்து கூறுகிறார் தாய் இறந்ததற்குக் காரணம் தெரியாதாம். பிணப்பரிசோதனை செய்துவிட்டுத்தான் கண்டுபிடிக்க வேண்டுமாம்.
இது என்ன கதை? எங்களுக்கே தெரியும். இரத்தம் வெளியேறுவதை எப்படி நிற்பாட்டுவது என்று தெரிந்தால் நாங்கள் ஏன் இங்கு கொண்டு வரவேண்டும்? இரத்தம் ஓடுவதை நிற்பாட்ட அதைக் கண்டுபிடிக்க பிணப்பரிசோதனை செய்து தான் கண்டுபிடிக்க வேண்டும் என்றால் வைத்தியசாலையை சுடலையாக மாற்றுங்கள். பிணப்பரிசோதனை செய்பவர் உடல் பாகங்களை வெட்டியெடுத்து கொழும்புக்கு அனுப்புவார். அதற்கான பதில்கள் கொழும்பிலிருந்து கடைசி வரை வராது. வரும், வரும் என்று கடைசி வரை கூறி எங்களை இப்படி ஏமாற்றிக் கொண்டிருக்க, அலுத்துப்போய் நாங்களாகவே விலகிச் செல்வதற்கு செய்யும் தந்திர வேலைகைள் தான் என அறியாமல் போவதற்கு மன்னார் காட்டில் வாழும் நரிக் கூட்டமோ அல்லது கழுதைக் கூட்டமோ அல்ல நாங்கள்.
இவ்விடயம் தொடர்பாக கடந்த நான்கு நாட்களாக நாம் பல்வேறுபட்டவர்களிடம் ஆலோசனை நடாத்தியிருந்தோம். அதன் தொகுப்பை இங்கு முன்வைக்கிறோம்.
1. வைத்தியசாலையிலிருந்து பிரசவத்தின் பின் தாய் வீடு திரும்பியிருந்தால் உடனடியாகவும்மேலும், ஐந்து தடவைகள் அடுத்துவரும் பத்து நாட்களிற்குள் பிரதேச குடும்பநலமாது கள விஐயம் செய்து தாயினதும், சிசுவினதும் சுகாதார நிலைமைகளை அவதானித்து அப்பகுதிக்குரிய சுகாதார வைத்திய அதிகாரிக்கு அறிக்கையிடல் வேண்டும் என கடமை அறிவுறுத்தல் பட்டியல் உள்ளது என்று சொல்லப்படுகிறது. இது நடைமுறைப்படுத்தப்பட்டதா?
2. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்படுத்தப் பட்ட தாய் இரத்தப் பெருக்கு ஏற்பட்டு வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டார். விடுதியில் அனுமதிக்கப்படும் நோயாளரை உடனடியாகக் கவனித்து அது பற்றி கடமை வைத்தியருக்கு அறிவிக்க வேண்டிய கடமைப் பொறுப்பினை தாதியர்கள் மேற் கொண்டனரா? (எந்நிலையில் நோயாளர் வருகை தந்தாலும் உடனடியாக அவ்வேளையில் பொறுப்பிலுள்ள வைத்தியருக்கு அறிவிக்க வேண்டும்)
3. புதிதாக விடுதிகளுக்கு அனுமதிக்கப்படும் நோயாளர்களை 15 நிமிடங்களிற்குள் வைத்தியர் பார்வையிடல் வேண்டும் என்ற கடமைப் பட்டியல் உள்ள போதும், ஏன் வைத்தியர் இரவு 2.00 மணிக்கு வந்து நோயளரைப் பார்வையிடாது காலை 7.30 மணிக்கு வந்தார்?
4. விடுதி 06 இற்குரிய இரவுக் கடமைக்குரிய வைத்தியர் அன்றைய தினம் கடமைக்கு வந்திருந்தாரா? அவர் இரவு வைத்தியசாலையில் தங்கியிருந்தாரா?
5. சிசேரியன் சத்திரசிகிச்சைக்குட்பட்ட நோயாளி இரத்தப் பெருக்குக் காரணமாக விடுதிக்கு வந்த போது, தாதியர்கள் நடந்து கொண்ட கடமைப்பொறுப்பு நடவடிக்கைகள் ஏற்புடையதா?
மேற்படி இளம் குடும்பப் பெண் வைத்தியசாலையில் வைத்து மனிதப் படுகொலைக்குட்படுத்தப்பட்டதற்கு சமூகம் எடுக்கும் நடவடிக்கைகள் தான் என்ன?
இச்சம்பவத்தில் வைத்தியசாலைச் சமூகம் நடந்து கொண்டுள்ள முறைமை வைத்தியசாலை முறைமைக்கு உட்பட்டதா?
இதுதான் இலங்கை மாவட்ட வைத்தியசாலைகளின் சாதாரண நடைமுறைகளா?
இவை பொதுமக்களிற்குத் தெரியாதா?
நோயாளிகளுடனான தொடர்பாடல்களில் அரச வைத்தியசாலைகளின் பொதுவான நடைமுறைகள் என்ன?
சாதாரண பொதுமக்கள் தொடக்கம் மதப் பெரியார்களே!, கற்றோரே!, இளம் குடும்பத் தலைவர்களே!, எதிர்காலத்தில் தாயாகக் காத்திருக்கும் இளம் பெண்களே! நீங்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறீர்கள்? நேற்று சிந்துஜா. நாளை யாரோ?