யாழில் பெரும் சத்தத்துடன் வெடித்த மின்மாற்றி: இருளில் மூழ்கிய கிராமங்கள் (Video)
யாழ். மயிலங்காட்டுப் பகுதியில் மின்மாற்றி வெடித்தமையால் குப்பிழான், ஏழாலையின் ஒரு பகுதி, மயிலங்காடு, சூராவத்தை உள்ளிட்ட கிராமங்கள் இருளில் மூழ்கின.
நேற்றிரவு(19) பலத்த காற்றுடன் திடீர்மழை பெய்த போது மேற்படி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மின்மாற்றி பெரும் சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது.
இதன்காரணமாக நேற்றிரவு-07.15 மணி முதல் மேற்படி கிராமங்களில் நீண்டநேரமாக மின்சாரம் தடைப்பட்டிருந்தது. இதனால், மேற்படி கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மின்சாரமில்லாமல் தமது நாளாந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் இடர்பாடுகளை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் உடனடியாக மேற்படி விடயம் தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
எனினும், இன்று காலை-09 மணியின் பின்னரே மின்சாரசபை ஊழியர்கள் குறித்த மின்மாற்றியை திருத்தும் பணிகளை ஆரம்பித்திருந்தனர். சற்றுமுன்னர் திருத்த வேலைகள் நிறைவுற்ற நிலையில் குறித்த பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.