யாழில் காணி மோசடி!! நில அளவையாளர் உட்பட 3 பேருக்கு நடந்த கதி!!
காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நில அளவையாளர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.
வெளிநாடொன்றில் வசிக்கும் தம்பதியினர் , மருதங்கேணி பகுதியில் உள்ள தமது காணி ஒன்றிக்கு ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு அற்றோணி தத்துவத்தை வழங்கியுள்ளார்.
குறித்த நபர் தனக்கு அற்றோணி தத்துவம் ஊடாக கிடைக்கப்பெற்ற காணியை சூழ உள்ள காணிகளையும் அடாத்தாக கையகப்படுத்தி நில அளவையாளர் ஊடாக காணி வரைபடத்தினை கீறி அற்றோணி தத்துவ காணியை பிறிதொரு நபருக்கு மோசடியாக விற்பனை செய்துள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினரால் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , காணி மோசடியில் ஈடுபட்டவர் , நில அளவையாளர் மற்றும் காணியை கொள்வனவு செய்த நபர் ஆகிய மூவரையும் கைது செய்திருந்தனர்.
கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் , அவர்களை நீதிமன்றில் முற்படுத்திய போது , அவர்களை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது.