புதினங்களின் சங்கமம்

மெல்ல மெல்ல ஈ.பி.டி.பி உறுப்பினராக ஆக மாறும் வைத்தியர் அர்ச்சுனா!! வெங்காயமாக மாறப்போவது டக்ளசா? அர்ச்சுனாவா?

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சில வருடங்களாக நடந்து வரும் நிர்வாகச் சீர்கேடுகள், மருத்துவர்களின் அசண்டையீனங்கள் காரணமாக தென்மராட்சி மக்கள் மிகவும் விசனத்துக்கு உள்ளாகியிருந்தனர். குறித்த மக்கள் சாவகச்சேரி வைத்தியசாலை தொடர்பாக ஏற்கனவே பல்வேறுபட்ட கவனயீர்ப்புக்களைச் செய்தும் ஊடகங்கள் ஊடாக அறிக்கைகளை வெளியிட்டும் மாவட்ட அபிவிருத்திக்கூட்டங்களில் அவ் வைத்தியசாலை தொடர்பாக முறையிட்டும் எந்தவித அக்கறையும் அந்த வைத்தியசாலை தொடர்பாக எடுக்கப்படவில்லை.

சாவகச்சேரி வைத்தியசாலையில் நடக்கும் பிரச்சனைகள், அந்த வைத்தியசாலையில் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட அருச்சுனா அவர்களால் ஆக்ரோசமான முறையில் வெளிக்கொண்டுவரப்பட்ட போது ஏற்கனவே விரக்தியில் இருந்த மக்கள் அருச்சுனாவின் அந்த ஆக்ரோசமான, துணிச்சலான செயற்பாட்டால் அருச்சுனாவை ஒரு மீட்பராக கருதி கொண்டாடினர்.

அருச்சுனாவின் சாவகச்சேரி வைத்தியசாலைக் கிளர்ச்சிக்குப் பின் யாழ்ப்பாணத்துக்கே உரிய அமைச்சரவை அந்தஸ்துள்ள கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவை பிரபல ஊடகவியலாளரான கனகநாயகம் வேல்தஞ்சன் ஊடகம் ஒன்றிற்காக பேட்டி ஒன்றை எடுத்திருந்தார். அந்தப் பேட்டியில் ‘சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடக்கும் சீர்கேடுகள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக பல்வேறுபட்டவர்கள் எனக்கு ஏற்கனவே தெரியப்படுத்தியிருந்தார்கள். ஆனால் பல்வேறு வேலைப் பழு காரணமாக என்னால் அதை கவனிக்க முடியாது போய் விட்டது’ என்ற கருத்துப்பட அவர் குறித்த ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

டக்ளசிற்கு சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சனையை விட ஏராளமான பெரிய பிரச்சனைகள் இருந்திருக்கலாம். ஏனெனில் டக்ளஸ் மீன்பிடித்துறை அமைச்சர். மீனவர்கள் தொடர்பாக ஏராளமான பிரச்சனைகள் மற்றும் வேலைத்திட்டங்களில் அவர் மூழ்கியிருந்திருக்லாம். அத்துடன் அவரால் நேரடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சுக்குள் மூக்கை நுழைக்க முடியாது என்பதும் உண்மை.

டக்ளஸ், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் என்ற ரீதியில் மட்டுமே யாழ்ப்பாணத்தில் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களுக்குள் ஒரு சில வரைமுறையின் கீழ் தலையிடலாம். ஆனால் ஒரு வைத்தியசாலையின் நிர்வாகக் கட்டமைப்பில் டக்ளஸ்தேவானந்தாவால் எந்தவித மாற்றத்தையும் ஒரு போதும் செய்ய முடியாது. அதற்கு அவரிடம் அதிகாரம் இல்லை.

அருச்சுனாவை மீண்டும் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக நியமிக்க டக்ளசிற்கு முடியுமா?

ஒரு போதும் அப்படி நியமிக்க முடியாது. தற்போதுள்ள நிலையில் அருச்சுனாவை மீண்டும் சாவகச்சேரி ஆதாரவைத்தியசாலை பொறுப்பதிகாரியாக நியமிப்பதற்கு டக்ளசால் நுாறுவீதம் முடியாது. ஆனாலும் பல அப்பாவிகள் டக்ளஸ்தேவானந்தா மீண்டும் அருச்சுனாவை சாவகச்சேரி பொறுப்பதிகாரியாக மாற்றுவார் என சமூகவலைத்தளங்களில் பதிவுகளை இட்டுவருகின்றார்கள்.

அருச்சுனா விடயத்தில் வெங்காயமாக மாறப்போவது யார்?

வைத்தியர் அருச்சுனா மெல்ல மெல்ல டக்ளஸ்தேவானந்தாவின் ஆதரவாளர் என்ற நிலைக்கு அப்பால் சென்று ஈ.பி.டி.பி உறுப்பினர் என்ற நிலைக்கு செல்லத் தொடங்கியுள்ளார். அவரது பேஸ்புக் பக்கங்களில் ஏற்கனவே டக்ளஸ் யார், யாரை குற்றம் கண்டு அறிக்கை விட்டுக் கொண்டிருந்தாரோ அதே செயற்பாட்டை அருச்சுனாவும் செய்து கொண்டிருப்பதுடன் டக்ளஸ்தேவானந்தாவின் உறுப்பினரான சட்டத்தரணி ஒருவரையும் தனது துணைக்கு வைத்துள்ளார் போல் தோன்றுகின்றது.

சாவகச்சேரி மக்களின் முக்கிய பிரச்சனையை தனது வேலைப்பளு காரணமாக அசண்டையினமாக விட்ட டக்ளசும், தற்போது அருச்சுனாவால் குற்றம்சாட்டப்படும் வடக்கு சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளும் ஒரே செயற்பாட்டையே செய்துள்ளார்கள்.

எழும் சில சந்தேகங்கள்

சாவகச்சேரி வைத்தியசாலையில் தான் கிளர்ச்சி செய்த போது, டக்ளஸ் தனக்கு ஆதரவாக செயற்பட்டு தன்னுடன் நேரடியாக தொடர்பு கொண்டு கதைத்தார், தனக்கு உறுதுணையாக நிற்கின்றார் என்ற காரணத்தால் வைத்தியர் அர்ச்சுனா டக்ளசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தாரா?

ஏற்கனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வைத்தியர் அர்ச்சுனா நட்புரீதியாக தொடர்பில் இருந்தாரா?

தனக்கு மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலை பொறுப்பதிகாரியாக பதவி பெற்றுத்தருவார் என்ற நப்பாசையில் அர்ச்சுனா டக்ளசுக்கு துதிபாடத் தொடங்கியுள்ளாரா?

அனைத்து தமிழ் அரசியல்கட்சிகளும் ஒரு புள்ளியில் இணைய வேண்டும் எனவும் சிஸ்டத்தை மாற்ற வேண்டும் எனவும் பல தடவைகள் தனது பேஸ்புக் ஊடாகவும் ஊடகங்களில் கொடுத்த பேட்டிகள் ஊடாகவும் அர்ச்சுனா வேண்டுகோள் விடுத்துள்ளார். அவ்வாறான ஒருவர் டக்ளஸ்தேவானந்தைவை மட்டும் துாக்கிப் பிடிப்பதன் நோக்கம் என்ன?

தற்போதுள்ள நிலையில் அர்ச்சுனா டக்ளசைப் பாவித்து தனது பதவியை மீண்டும் பெற்றுக் கொண்டால் சந்தோசமே. ஆனால் அந்தப் பதவியைப் பெறுவதற்காக டக்ளசை பயன்படுத்திவிட்டு பின் அவரைப் புறக்கணித்து தனது குணவியல்பான தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை மீண்டும் செய்யத் தொடங்கினால் டக்ளஸை வெங்காயமாக அர்ச்சுனா பாவித்துள்ளார் என கருதலாம்…….

சாவகச்சேரி பொறுப்பதிகாரி பதவியை மீளவும் அர்ச்சுனாவக்கு கொடுக்காது தனது அரசியல் செயற்பாட்டுக்காக அர்ச்சுனாவை தனக்கு பின்னால் வழமையாக திரியும் பைல்கள் காவும் கூட்டங்களில் உள்ளவர்களில் ஒருவராக டக்ளஸ் ஆக்கினால் அர்ச்சுனாவை டக்ளஸ் வெங்காயமாகப் பாவித்துள்ளார் என கருதலாம்.