இந்தியச் செய்திகள்புதினங்களின் சங்கமம்

“10 பேர் எங்களை மாறி மாறி வன்கொடுமை செய்தார்கள்!”- மகள்களின் கதறலால் கண்ணீர் வடித்த தாய்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை ஒட்டிய கிராமத்தைச் சேர்ந்தவர், வள்ளி (பெயர் மாற்றம்). இவருக்குத் திருமணமாகி 7 மற்றும் 9 வயதில் 2 பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். கருத்து வேறுபாடுகள் காரணமாக கணவர் பிரிந்துவிட்ட நிலையில், 2 மகள்களையும் தனது பாட்டியின் பராமரிப்பில் விட்டுவிட்டு புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்று வந்தார் வள்ளி. அப்போது, அங்கு வேலைசெய்யும் ஒருவருடன் ஏற்பட்ட நட்பு காதலாக மாறியதால், புதுச்சேரி பகுதியிலேயே வாடகைக்கு வீடு எடுத்து அவருடன் தனிக் குடித்தனம் நடத்திவந்தார். 5 மாதங்களுக்கு முன்பு, வள்ளிக்கு இன்னொரு குழந்தை பிறந்த நிலையில் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில், சில நாள்களுக்கு முன் தனது மகள்களைப் பார்க்க திண்டிவனத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்றார் வள்ளி. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் பாலியல் ரீதியில் தங்களை துன்புறுத்துவதாகக் கூறி 2 சிறுமிகளும் தாயிடம் கதறி அழுதிருக்கின்றனர். இதில் அதிர்ச்சியடைந்த வள்ளி, தனது 2 மகள்களையும் புதுச்சேரிக்கு அழைத்துவந்து தன்னுடன் தங்க வைத்துக் கொண்டதோடு, கோரிமேடு பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றிலும் அவர்களைச் சேர்த்தார். சில நாள்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற 9 வயது சிறுமி அங்கேயே மயங்கி விழுந்திருக்கிறாள். உடனே அங்கிருந்த ஆசிரியர்கள் அந்தச் சிறுமியை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, அந்தச் சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, உடலில் பல இடங்களில் நகக் கீறல்களும் காயங்களும் இருந்ததோடு, பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து புதுச்சேரி குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுவுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதும், சேர்மன் ராஜேந்திரன் தலைமையிலான குழு, தாய் வள்ளியை அழைத்து விசாரணை செய்தது. அப்போது, ”அந்த 2 குழந்தைகளும் எனது முதல் கணவருக்குப் பிறந்தவை.

என்னைவிட்டு அவர் பிரிந்துவிட்ட நிலையில், புதுச்சேரியில் ஒருவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டேன். தற்போது அவருடன் எனக்கு 5 மாத கைக்குழந்தை இருக்கிறது. 2 மாதங்களுக்கு முன்பு என் பாட்டியின் பராமரிப்பில் இருந்த 2 குழந்தைகளையும் போய் பார்த்தேன். அப்போது, மிட்டாய் உள்ளிட்ட தின்பண்டங்களை வாங்கிக் கொடுத்து 10-க்கும் மேற்பட்டவர்கள் 5 மாதங்களாக தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்தார்கள் என்று என் குழந்தைகள் என்னிடம் கதறி அழுதார்கள்.

அதனால் அவர்களைப் பாதுகாப்பாக புதுச்சேரிக்கு அழைத்து வந்து என்னுடனே தங்க வைத்துக்கொண்டேன்” என்று தெரிவித்தார். உடனே சுதாரித்த குழந்தைகள் பாதுகாப்புக் குழு, மற்றொரு சிறுமியையும் மருத்துவப் பரிசோதனைக்கு ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றது. அப்போது, அந்தச் சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தாய் வள்ளியிடம் புகாரை எழுதி வாங்கிய புதுச்சேரி குழந்தைகள் நல பாதுகாப்புக் குழுவினர், அதை அறிக்கையாகப் பதிவுசெய்து, விழுப்புரம் குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழுவுக்கு அனுப்பிவைத்தனர்.

அதையடுத்து, புதுச்சேரிக்கு வந்த விழுப்புரம் குழுவினரிடம் தங்களைப் பாலியல் வன்கொடுமை செய்த 10 பேரின் பெயர்களையும் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள் சிறுமிகள். அந்த விவரங்களின் அடிப்படையில் சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதற்காக விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்குப் பரிந்துரைத்தது குழு. பாதிக்கப்பட்ட அந்த 2 சிறுமிகளுக்கும் ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அதிரடியாகக் களத்தில் இறங்கிய விழுப்புரம் மாவட்ட காவல்துறை, சிறுமிகள் தெரிவித்த பெயர்ப் பட்டியலில் 5 பேரைப் பிடித்து காவல் நிலையத்தில் விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர். மேலும், தலைமறைவாகியிருக்கும் மற்றவர்களைப் பிடிக்கவும் தேடுதல் வேட்டையை இறங்கியுள்ளனர்.