புதினங்களின் சங்கமம்

யாழ்.போதனா வைத்தியசாலையின் ஐ.சி.யு இல் பொன்ராசாவின் தாய்க்கு நடந்தது என்ன?

சைக்கிள் கட்சி உறுப்பினர் பிருந்தாபன் பொன்ராசா சமூகவலைத்தளத்தில் பதிவிட்ட தகவலை அப்படியே இங்கு தந்துள்ளோம்…
மருத்துவர்களை மாபியாக்கள் என வர்ணிக்கும் இந்தத் தேசத்தில், தன்னுயிர் வெறுத்து மன்னுயிர் காக்கும் மனிதநேயம்மிக்க மருத்துவர்கள் ஏராளமானோர் வாழ்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்த காலம் எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை அளித்தது.
தெய்வங்களை ஆலயத்தில் தேடாதீர்கள், அவர்கள் உங்கள் கண் முன்னே நின்று, உங்களோடே இருக்கின்றார்கள் என்பது ஞானம் பெற்ற சித்தர்களின் வாக்கு. அந்த உண்மையை உணர்ந்தவர்களில் நானும் ஒருவன். ஒரு நாள் இரு நாள் அல்ல, முப்பத்துமூன்று நாட்கள் தெய்வங்களை மனித வடிவில் கண்டேன். ஆம்… எங்கள் அன்னை கொடுமையான நோயால் பீடிக்கப்பட்டிருந்தபோது அவரை வைத்து பாதுகாத்து பராமரித்து சிகிச்சையளித்த யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவிலேயே கைகூப்பித் தொழக்கூடிய தெய்வங்கள் உறைவதைக் கண்டேன்.
எம் அன்னை திருமதி இராசமணி நல்லதம்பி அவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் மூன்று நாட்கள் சிகிச்சை பெற்றார். ஆனால் மூன்றாம் நாள் அவர் தீவிர நிலையை அடைந்தார். உடனடியாகவே நோயாளர் காவுவண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார். அங்கு விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இரவு 10 மணிவரை வைத்திருந்தார்கள். நிலமை மேலும் மோசமடைந்தது. உடனடியாகவே அதிதீவிர சிகிச்சைப் பிரிவிற்கு (அ.ழ ரnவை) இடமாற்றப்பட்டார். சுய நினைவின்றி அவர் முற்றுமுழுதாகவே செயலிழந்திருந்தார்.
அந்தச் சிகிச்சைப் பிரிவிற்கு மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி திரு.நவநீதன் வைத்திய கலாநிதி திருமதி மதுராதா ஆகியோர் பொறுப்பு வைத்திய அதிகாரிகளாக இருக்கின்றனர். மற்றும் மதிப்பிற்குரிய வைத்திய கலாநிதி சஞ்சீவன் உட்பட மேலும் சில மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு சிகரம் வைத்தாற்போல சிரேஷ்ட மருத்துவத் தாதி திருமதி கே.சந்திரகுமார் அவர்களின் தலைமையிலான பல தாதியர்கள். இவர்களில் எவருமே தரம் பிரித்து வேறுபடுத்தி பார்க்க முடியாத அளவிற்கு அர்ப்பணிப்போடு, தம்மை வருத்திப் பணியாற்றுகின்றனர். இவர்களின் பணி உண்மையிலேயே தெய்வீகப் பணி.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் எங்கள் அம்மா முப்பத்துமூன்று நாட்கள் சிகிச்சை பெற்றார். சிகிச்சை பெற்றார் என்பதற்கு அப்பால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார் எனச் சொல்வதே சரியானது. அங்கு அனுமதிக்கப்பட்டபோது அம்மாவின் கை, கால்கள் செயலிழந்துவிட்டன. வென்டிலேற்றர் செயற்கைச் சுவாசத்திலேயே அவரது உள் உறுப்புக்கள் இயங்கவைக்கப்பட்டன.
ஓரு மின் இயந்திரத்தைப் போலவே உடலெங்கும் வயர்கள் பொருத்தப்பட்டிருந்தன. கழுத்தில் துவாரம் இடப்பட்டு அதனூடாக செயற்கைச் சுவாம். ஒரு நாளில் காலை, மதியம், மாலை என மூன்று வேளையும் மூன்று மணித்தியாலம் மட்டுமே அதுவும் ஒரு வேளை இருவர் என்ற ரீதியில் நாம் உள்ளே சென்று அம்மாவைப் பார்க்க முடியும். மிகுதி நேரம் முழுவதும் மருத்துவர்களதும் தாதியர்களதும் நேரடிக் கண்காணிப்பிலேயே அம்மா இருந்தார். ஐ.சி.யு இல் எம்.ஓ பிரிவில் இரண்டாவது கட்டில் அம்மாவுக்கென்றே சொந்தமாயிற்று.
யாழ்.போதனா வைத்தியசாலையிலேயே மிகவும் சிறப்பான சிகிச்சைப் பிரிவாக அதி தீவிர கிசிச்சைப் பிரிவை நான் கண்டேன். ஒவ்வொரு நோயாளிக்கு முன்பாகவும் ஒவ்வொரு தாதிக்கு இருக்கை போடப்பட்டு அவர்கள் இருந்தார்கள். நோயாளியில் ஏதாவது ஆட்டம், அசைவைக் கண்டால் உடனே எழுந்து சென்று அவரைப் பரிசோதிப்பார்கள். தீவிர நிலை எனில் மருத்துவர்களை அழைத்து உடனும் தீவிர கிசிச்சை. இவ்வாறே அம்மாவுக்கு முன்னேயும் கடமை நேரம் மாறி மாறி ஒவ்வொரு தாதியர்கள் இருந்தார்கள். அடிக்கடி மருத்துவர்கள் பரிசோதித்துக்கொண்டிருந்தார்கள். அனுமதிக்கப்பட்டு 15 நாட்கள் வரை அம்மாவில் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் உயிர் மட்டும் இருந்தது. மருத்துவர்களோ தாதியர்களோ சளைக்கவில்லை. உயிர் இருக்கும்வரை, அந்த உயிரைக் காப்பாற்ற சிகிச்சை செய்வோம் என அவர்கள் உறுதி எடுத்திருந்தார்களோ என்னவோ தொடர்ந்து சிகிச்சை செய்துகொண்டே இருந்தனர்.
அதி தீவிர கிசிச்சைப் பிரிவு என்ற நாமத்திற்கு ஏற்ப தீவிரமாகப் போராடி ஒருவாறு நோயைக் கண்டுபிடித்துவிட்டார்கள். நரம்புகளை ஒவ்வொன்றாகச் செயலிழக்கச் செய்து இறுதியில் இருதயத்தை செயலிழக்கச் செய்யும் நோய் அது. அந்த நோய்க்குரிய அத்தனை அறிகுறிகளும் அம்மாவிற்கு இருந்தன. நரம்புகள் செயலிழந்துகொண்டே சென்றன. அதற்குரிய மருந்துகளைச் செலுத்தினர். ஆனால், முன்னேற்றம் இல்லை. மருத்துவர்கள் சளைக்கவில்லை. தொடர்ந்தும் சிகிச்சை.
வைத்தியசாலையில் இருக்கும்போதே இரு தடவைகள் மாரடைப்பு வந்தது. இரண்டாவது தடவை மாரடைப்பு வந்தபோது வாயினால் குருதியும் வெளியேறியது. அந்த இரு சந்தர்ப்பத்திலும் மருத்துவர்கள் அ;ம்மாவைக் காப்பாற்றினர். ஆனால் மேலதிக முன்னேற்றம் இல்லை.
மூளை பாதிக்கப்பட்டிருக்குமா என்பதைக் கண்டறிய தலை முழுவதும் சி.ரி.ஸ்கான் செய்தனர். அப்படி ஏதும் இல்லை. பின்னர் உடலின் ஏனைய பகுதிகளையும் சி.ரி.ஸ்கான் செய்தனர். பிறப்புறுப்பில் புற்றுநோய்க் கட்டி இருக்குமா என மருத்துவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாகவே துறைசார்ந்த மருத்துவரை அழைத்து அது குறித்து ஆலோசனை பெற்றனர். இறுதியில் அது இல்லை என உறுதியானது. ஈரல் பாதிக்கப்பட்டிருக்குமா என சந்தேகித்தனர். அதற்கான இரத்தப் பரிசோதனை செய்தனர். அதுவும் இல்லை என உறுதியானது. இருதயம் பலவீனமாக இருந்தமையால்தான் நரம்புகள் இயங்கவில்லையா எனச் சந்தேகித்தனர். அதற்காக நுஊர்ழு செய்தனர். இருதயமும் உரிய தகைமையில் இருந்தமையை உறுதிப்படுத்தினர்;.
குருதியில் உள்ள கிருமித்தொற்றினால் பாதிப்பு ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு உடனடியாகவே இரத்த வங்கியின் வைத்திய அதிகாரிகளை வரவழைத்து ஆலோசித்து பல்வேறு நாட்களில் ஐந்து தடவைகள் குருதிச் சுத்திகரிப்பைச் செய்தனர்.
எதைச் செய்தாலும் அம்மாவின் உடலில் குறிப்பிடத்கத்க முன்னேற்றம் ஏற்படவில்லை. இறுதியாக, ஒருவகை மருந்தைச் செலுத்தினர். முன்னர் செய்த சிகிச்சைகளுடன் அந்த மருந்தும் சேர்ந்து அம்மாவின் உடலில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டது. அந்த சிறு முன்னேற்றத்தை தக்கவைத்து பெரும் முன்னேற்றமாக்கும் முயற்சியில் மருத்துவர்களும் தாதியர்களும் வெற்றி கண்டனர்.
20 நாட்களுக்கு மேலாக ஆட்டம், அசைவின்றி படுத்த படுக்கையாகக் கிடந்த அம்மாவின் கை, கால்களை தாங்களாகவே தூக்கி அசைத்து அசைத்து இயக்க நிலைக்குக் கொண்டுவந்தனர். அவரை தூக்கி நிமிர்த்தி கதிரையில் இருக்க வைத்தனர். வைத்தியர்களும் தாதியர்களுமாக தாமே அம்மாவைத் தூக்கி நிற்கவைத்து தமது தோளில் கைகளைத் தாங்கவைத்து ஒரு குழந்தையைப் போன்று நடை பழக்கினர்.
பம்பஸ் மாற்றுவது, உடலைச் சுத்தம் செய்வது, மூக்கில் பொருத்தப்பட்ட வயர்களினூடாக நீர் மற்றும் தேநீர், இளநீர் போன்றவற்றை பருக்குவது உட்பட அனைத்தையும் தாதியரே செய்தனர். சில சந்தர்ப்பங்களில் ஒரு நாளில் நூறு தடவைகளுக்கு மேல் சளி எடுக்கவேண்டி இருந்தது. தாதியர்கள் சளைக்காமல் அதைச் செய்தனர். தலை வாரிக் கட்டுதல், முகத்தை அழகுபடுத்தல், பொட்டு வைத்தல் உட்பட அனைத்தையும் தாதியரே செய்தனர். அம்மாவின் உடலில் தொட்டுப்பார்க்கக்கூட நாம் அனுமதிக்கப்படவில்லை. காரணம் எம்மிடம் உள்ள கிருமி தொற்றிவிடும் என்பதற்காக.
அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அத்தனை மருத்துவர்கள் தாதியர்களும் தெய்வங்கள்தான். வைத்திய கலாநிதி திரு.நவநீதன் சேர் அவர்கள் பார்ப்பதற்கு மிக அமைதியானவர். மிகச்சிறந்த வைத்தியர். ஏனைய வைத்தியர்களை வைத்து நோயாளிகளைக் கவனிப்பதில் மிகவும் கைதேர்ந்தவர். இடையிடையே எம்மை அழைத்து அம்மாவின் நிலை தொடர்பாக உரையாடுவார். வைத்திய கலாநிதி திருமதி மதுராதா அவர்களும் மிகத் திறமையானவர். வைத்தியர் அறைக்கு அவ்வப்போது எங்களை அழைத்து அம்மாவின் உடல்நிலை தொடர்பாக அறியத்தருவார். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள ஒரு நோயாளியின் உறவினர்கள் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப அவர்களை ஆற்றுப்படுத்தும் திறன் அவரிடம் உள்ளது. அம்மா ஐ.சி.யு இல் இருந்த 33 நாட்களும் தினந்தோறும் நாம் துடித்துக்கொண்டிருந்தோம். ஒவ்வொரு விநாடியும் எங்களைக் கொன்றது. அந்த தருணங்களில் மதுராதா மிஸ் அவர்களுடனான உரையாடல் எங்களை ஓரளவு அமைதிப்படுத்த உதவியது.
வைத்திய கலாநிதி சஜீவன் அவர்கள் அம்மாவிற்கு மிகவும் பிடித்தவரானார். அம்மா சுய நினைவிற்கு திரும்பிய பின்னர் அடிக்கடி அம்மாவால் தேடப்படும்; வைத்தியராக அவர் இருந்தார். அன்பான உரையாடல், வாஞ்சையோடு கையால் வருடுதல் போன்ற அவரது செயற்பாடு அம்மாவைக் கவர்ந்திருந்தது. நோயாளியான அம்மாவால் தங்கப்பவுண் என விழிக்கும் அளவிற்கு சிறந்த வைத்தியராக அவர் விளங்கினார். இதேபோன்றே இங்கு பெயர் குறிப்பிடாத பல சிறந்த மருத்துவர்கள் ஐ.சி.யு இல் கடமையாற்றுகின்றனர்.
தலைமைத்துவத் தாதி திருமதி கே.சந்திரகுமார் அவர்கள் தாதிக்கே உரிய இயல்புமிக்கவர். அவரது சிரிப்பு நோயாளிகளை மாத்திரமன்றி அவர்களின் உறவினர்களையும் ஆற்றுப்படுத்தும். தாய்மைக்குணமும் மனிதநேயமும் அவரிடம் நிறையவே உள்ளது. அவரது தலைமையிலான தாதியர்கள் ஒவ்வொருவரும் மனிதநேயம் மிக்கவர்கள். வைத்தியர்களின் எண்ணத்திற்கு செயல்வடிவம் கொடுக்கும் ஐ.சி.யு இல் உள்ள தாதியர்கள் போற்றப்படவேண்டியவர்கள். இதிலும் தென்னிலங்கையில் இருந்து வந்து பணியாற்றும் தாதியர்கள் மொழி தெரியாவிட்டாலும் மிகச் சிறந்த மனிதநேயம் மிக்கவர்கள். அம்மாவிற்கு சிகிச்சையளித்தவர்களில் அனேகமானோர் தென்னிலங்கையைச் சேர்ந்த தாதியர்கள்.
ஏனைய விடுதிகளில் கடமையாற்றும் தாதியர்களை விடவும் ஐ.சி.யு இல் கடமையாற்றும் தாதியர்களிடம் வேறுபட்ட குணாதிசயங்கள் நிறையவே இருக்கின்றன.
ஓரு நோயாளியை 33 நாட்கள் ஐ.சி.யு இல் வைத்துச் சிகிச்சை அளிப்பதென்பது சாதாரண விடயமல்ல. அம்மாவிற்கு செய்யப்பட்ட அத்தனை சிகிச்சைகளின்போதும் எமது விருப்பம் பெறப்பட்டது. சிகிச்சை முறைகள், அதில் உள்ள பாதிப்புக்கள், ஏற்படும் முன்னேற்றங்கள் தொடர்பாக மருத்துவர்கள் எமக்கு விளக்கம் அளித்தார்கள்.
இத்தனைக்கும், ஐ.சி.யு இல் பணியாற்றும் எந்த வைத்தியருக்கும் என்னைத் தெரியாது. எனக்கும் அவர்களில் எவரையும் இதற்கு முன்னர் தெரியாது. எனது அம்மா என்பதற்காக அவர்கள் சிறந்த சிகிச்சை வழங்கினார்கள் எனவும் கூற முடியாது. எந்தவித செல்வாக்கிற்கும் அங்கு இடமில்லை. அங்குள்ள அத்தனை நோயாளிகளையும் அவர்கள் இவ்வாறுதான் கவனிக்கிறார்கள்.
எனது பார்வையில் யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஒரு புனிதப் பிரதேசம். அது ஒரு ஆலயத்தின் கருவறை. அங்கே தெய்வங்கள் வாழ்கின்றனர்.
33 நாட்களின் பின்னர், அம்மாவின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர் முதலாம் விடுதிக்கு இடம்மாற்றினர். அது வைத்திய கலாநிதி கௌரி அம்மாவின் விடுதி. அங்கு அனுமதிக்கப்பட்ட முதல் நாள் ஒருசில தாதிகளின் செயற்பாடு விரக்தியைத் தந்தது. எனினும், பின்னர் சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டது.
தற்போது அம்மா ஓரளவு சுகதேகியாக மாறிவிட்டார். அம்மாவிற்கு மறுபிறப்பை வழங்கி எங்களிடம் ஒப்படைத்தவர்கள் ஐ.சி.யு இல் பணியாற்றும் மருத்துவர்களும் தாதியர்களுமே என்பதை நாம் மனத் திருப்தியுடன் கூற விரும்புகின்றோம்.
கடந்த வாரம் கிளினிக் சென்றபோது அம்மாவின் விருப்பத்திற்கு இணங்க அவர் கிசிச்சை பெற்ற ஐ.சி.யு இற்கு அழைத்துச் சென்றபோது அத்தனை மருத்துவர்களும் தாதியர்களும் ஓடிவந்து அம்மாவை வாஞ்சையோடு அணைத்துக்கொண்டனர். இதுதான் உண்மையான மருத்துவத்துறை.
எனது அம்மாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை தொடர்பாகவும் அம்மா காப்பாற்றப்பட்டமை தொடர்பாகவோ மருத்துவர்கள் தொடர்பாகவோ இவ்வாறு நாம் வெளிப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. ஆனால், உயிர்காக்கும் மருத்துவத்துறை இன்று இழிவாக பேசப்படும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. ஒருசில மருத்துவர்கள் விடுகின்ற தவறுகளுக்காக ஒட்டுமொத்த வைத்தியர்களையும், நோயாளிகள், பொதுமக்களுக்கான அவர்களின் அர்ப்பணிப்புக்களையும் எள்ளி நகையாடி அவர்களை மன உளைச்சலுக்கு உட்படுத்துவது நாகரிகம் மிக்க சமூகத்திற்கு இழுக்கு.
அதற்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. தமது பொறுப்பையும் கடமையையும் மறந்து நோயாளிகள் மீதும் உறவினர்கள் மீதும் சீறிப்பாயும் மருத்துவர்களும் தாதிகளும் அங்கு இருக்கத்தான் செய்கின்றார்கள். அவர்கள் திருந்த வேண்டும். இல்லையேல் பொதுமக்களும் சமூகத்தை நேசிப்பவர்களும் அதற்கான வழிமுறையில் திருத்தவேண்டும்.
குழந்தை தாயின் வயிற்றில் கருவாக உருவாகுவதற்கு முன்பே, ஒரு பெண்ணுக்கும் திருமணமானவுடன் அவள் வயிற்றில் குழந்தை கருவாகி, உருவாகுவதற்கான மாத்திரைகளை வழங்குவதில் தொடங்கி குழந்தை பிறந்து வளர்ந்து வாழ்ந்து முடித்து இறக்கும் வரை மருத்துவர்களே ஒரு மனிதனுக்கு பாதுகாப்பை வழங்குகின்றனர். இவ்வாறான மருத்துவர்கள் இறைவனுக்கு நிகரானவர்கள்.
எமது தமிழ்ச் சமூகத்தில் உள்ள பெரும்பாலான மருத்துவர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாக, மனிதநேயப் பண்பாளர்களாக, மனிதத்துவத்தை மதித்துப் போற்றும் மாண்புக்குரியவர்களாக இருக்கின்றனர் என்பதை பொதுமக்கள் மறந்து செயற்படுவது வேதனைக்குரியது.
தவறிழைக்கும் வைத்தியர்களை இனம் கண்டு அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க சட்டத்தில் இடம் உண்டு. சுகாதாரத்துறை அமைச்சரையே இன்று சட்டம் சிறையில் அடைத்திருக்கின்றது. அதில் அரசியல் காழ்ப்புணர்வுகள் இருந்தாலும் மருத்துவத்துறையில் தப்புச் செய்பவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு வெளிப்படுத்த பல்வேறு வழிகள் உள்ளன. அதை விடுத்து அனைத்து மருத்துவர்களையும் மருத்துவ மாபியா என விழிப்பது எம்மை நாமே இழித்துரைப்பதற்கு சமனானது.
எமது இனிய உறவுகளே…. ஏற்கனவே இங்கு படித்து பட்டம் பெற்ற பலர் சொத்து சுகங்களுக்கு ஆசைப்பட்டு வெளிநாடுகளுக்கு சென்றிருக்கின்றனர். ஏதோ எமது தேசத்தின் மீதும் மக்கள் மீதும் அக்கறை உடையவர்களே எஞ்சியிருந்து எமக்காக பணியாற்றுகின்றனர். அவர்களையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்காமல் பார்த்துக்கொள்வோம்.
இன அழிப்பு யுத்தத்தில் எம்மீது ஏவப்பட்ட கொத்துக் குண்டுகளுக்கும் இரசாயனக் குண்டுகளுக்கும் இரையாகி இலட்சக்கணக்கான எமது உறவுகள் படுகொலை செய்யப்பட்ட போது, எஞ்சியிருக்கும் எங்களைக் காத்தவர்கள் ஒருசில மருத்துவர்களே என்ற உண்மையை இலகுவில் எமது இனம் மறந்துவிட்டதா?
பெயர் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய பல தமிழ் மருத்துவர்கள் தற்போதும் வட,கிழக்கில் இருந்து பணியாற்றுகின்றனர் என்பதை மறந்து, அத்தனை மருத்துவர்கள் மீதும் மாபியா பட்டம் சுமத்தத் துணிந்தமைக்கு காரணம் என்ன?
தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அரசியல்வாதிகள் கூட, இனத்தின் பெயரால் முப்பது வருட காலம் தங்களை அர்ப்பணித்து ஆகுதியாக்கியவர்களையே பிழை எனச் சித்தரிக்கும் நபருக்கு சாமரம் வீசுகின்ற அதிசயத்தை எமது தேசத்தில் பார்க்க முடிகின்ற பரிதாபத்தை என்னவென்று சொல்வது?
உண்மையைத் தேடி அறிந்து மக்களுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டும் பொறுப்பில் இருக்கும் ஊடகங்கள்கூட அனைத்து மருத்துவர்களும் மாபியாக்கள் என ஏற்றுக்கொள்;கின்றதா? உண்மையான மருத்துவ மாபியாக்களை மக்களுக்கு இனங்காட்டி, ஏனைய மருத்துவர்கள் மன நிறைவுடனும் மன நிம்மதியுடனும் பணியாற்றக்கூடிய வழியை ஏற்படுத்த வேண்டாமா?
பாமர மக்கள் மட்டுமன்றி, படித்து பெரும் பதவிகளில் இருப்பவர்களின் முகப்புத்தகங்கள் கூட உயிர்காக்கும் மருத்துவர்களை வதைக்கும் வகையில் கருத்துரைப்பதைப் பார்க்க வேதனையாக உள்ளது. நிலமை இப்படியே சென்றால், எமது தேசத்தில் உள்ள மருத்துவர்கள் அனைவரும் மனம் உடைந்து வெளிநாடுகளுக்கு சென்ற பின்னர் கடந்த காலங்களைப் போல சாதாரண சத்திரசிகிச்சைக்கு கூட கொழும்புக்குச் செல்லவேண்டிய நிலையே ஏற்படும். அல்லது, எமது வைத்தியசாலைகளை சிங்கள மருத்துவர்கள் ஆக்கிரமிக்கவேண்டிய நிலை ஏற்படும்.
பிருந்தாபன் பொன்ராசா
பொன்னாலை.