சோதனை எலிகளாக பலிக்கடாவாகும் யாழ் மக்களா?? அறை்ககுள் பதுங்கினார் மேயர்!! நடந்தது என்ன? (Video)
“5 G கோபுரங்கள் எமக்கு வேண்டாம்…பரிசோதனைக் கூடத்தின் எலிகள் நாமல்ல” எனும் கோஷத்தை முன்னிறுத்தி பொதுமக்கள், பொது அமைப்புக்கள், கட்சிகள் ஒன்றிணைந்து இன்று(18) முற்பகல் யாழ். மாநகரசபைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் “வேண்டாம்…வேண்டாம் 5 G ஐ அகற்று”, ” பெருத்த இலாபம் உங்களுக்கு….ஆபத்தெல்லாம் எங்களுக்கு!”, ” அழிக்காதே! அழிக்காதே!! மக்களை அழிக்காதே!!”, “ஏமாற்றாதே! ஏமாற்றாதே!! மக்களை ஏமாற்றாதே!!”, முட்டாளாக்காதே! முட்டாளாக்காதே! தமிழ்மக்களை முட்டாளாக்காதே!! உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியும், சுலோகங்கள் பலவற்றையும் தாங்கி கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் திடீரென்று முதல்வரே வெளியேறு! மக்களுக்குப் பதில் கூறு!!” எனத் தெரிவித்தவாறு யாழ்.மாநகர சபை வளாகத்துக்குள் உள்நுழைந்து முதல்வரின் அலுவலகம் முன்பாக நின்று உரத்துக் கோஷமெழுப்பினர்.
எனினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடடிருந்தவர்களின் கோரிக்கையை யாழ். மாநகர சபை முதல்வர் ஏற்க மறுத்துவிட்டார். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சார்பாக ஐவரை மாத்திரம் தாம் சந்தித்துப் பேசவிருப்பதாக அவர் யாழ். மாநகர சபையின் ஆணையாளர் மூலம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்குத் தகவல் அனுப்பியுள்ளார்.
ஆயினும், நாங்கள் பலபேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போது யாழ். மாநகரசபை முதல்வர் ஒரு சில குறிப்பிட்ட நபர்களை மாத்திரம் அழைத்துப் பேசுவதை எந்தவகையிலும் ஏற்க முடியாதென முதல்வரின் அழைப்பை ஆர்ப்பாட்டக்காரர்கள் அறவே நிராகரித்துவிட்டனர்.
பொதுமக்களின் வாக்குகளைப் பெற்று யாழ்.மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டவர் மக்களின் பிரச்சினைகளுக்கு மக்கள் முன் தோன்றிப் பதிலளிப்பதில் என்ன தயக்கமிருக்கிறது? என அவர்கள் கடும் ஆதங்கம் வெளியிட்டனர்.
இந்நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முதல்வர் வெளியே வர வேண்டுமெனவும், மக்களின் கருத்துக்களுக்கு உரிய பதிலளிக்க வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்தும் வலியுறுத்திய வண்ணமிருந்தனர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் யாழ். மாநகரசபை முதல்வர் வெளியே வருவதாகவில்லை.
அதனைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸார் யாழ். மாநகர முதல்வரால் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். மாநகர முதல்வரின் இத்தகைய செயல் வெயிலுக்கு மத்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது.
இதனையடுத்து முதல்வரின் குறித்த செயற்பட்டிற்கெதிராகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் தமது போராட் டத்தின் நியாயத் தன்மையைப் பொலிஸ் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்த்து சம்பவ இடத்தில் கூடியிருந்த பல எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் யாழ். மாநகர முதல்வரை அவரது அலுவலகத்தில் சந்திப்பதற்காகச் சென்றனர்.
இதன்போது யாழ். மாநகரசபையின் முதல்வர் இ. ஆர்னோல்ட் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
மக்களுக்கும், சகல ஊடகங்களுக்கும் நாங்கள் தெரிவித்துக் கொள்ள விரும்புவது யாதெனில். சிமாட் போல், லாண்ட் போல் கடந்த ஓராண்டுக்கு மேலாக குடித்த நிறுவனத்தின் கோரிக்கையை கொண்டு வந்து சபையில் குறிப்பிட்டுச் சபையின் அங்கீகாரத்துக்கமைய சகல கூட்டங்களையும் நாம் கூடியிருக்கின்றோம். இந்தக் கூட்டங்களில் ஒவ்வொரு விடயங்களையுயம் ஆராய்ந்து இறுதியில் எட்டப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த சிமார்ட், லாண்ட் போலை நிறுவுவதற்கான நடவடிக்கையை நாம் ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
போல் தொடர்பாக சில அனுமதிகளை நாம் பெறவில்லை எனக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவ்வாறான அனுமதிகள் அனைத்தையும் நாங்கள் பெற்றிருக்கின்றோம். 16 இடங்களையும் நாங்கள் இனங்கண்டு எங்களுடைய பொறியிலாளர்களுடன் RDA இன் பொறியலாளர்கள், இலங்கை மின்சார சபை உள்ளிட்ட சகலதுறை சார் திணைக்களங்களுடன் நாங்கள் தொடர்ப்பு கொண்டு யாழ்ப்பாணப் பொதுநூலகத்தில் ஒன்றுகூடினோம். அதன்பின்னர் குறித்த இடங்களை நாம் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் சென்று பார்வையிட்டு எந்தெந்த இடங்களில் அவர்கள் கம்பங்களை நாட்டவிருக்கிறார்கள் என்ற விளக்கமும் கையேடு போன்று தொகுத்து எங்களுக்கு வழங்கப்பட்டது.
நல்லூர்க்கந்தசுவாமி ஆலயத்தை அண்டியுள்ள பகுதிகளில் சிமார்ட் கம்பங்களை நாட்டுவதால் சுவாமி வீதிவலம் வரும் போது சுவாமி மீது கொண்டுள்ள பக்தி திசை திருப்பப்பட்டு விடும் என்ற காரணத்துக்காக அங்கு நாட்டப்பட்டிருந்த கம்பங்களை நாங்கள் பின்னோக்கி நகர்த்தியிருந்தோம். ஆனால், ஏனைய விடயங்களை நாம் ஒப்பந்தத்தின் முறைப்படி நாம் செயற்பட்டு வருகிறோம்.
ஆனால், 5 G புரளி தொடர்பாக நாம் எந்தவொரு உடன்படிக்கையையும் மேற்கொள்ளவில்லை.ஆனால், நாம் உரிய நடைமுறைகளைப் பின்பற்றவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்கள். இதில் எமது கெளரவ உறுப்பினர்களும் உள்ளடங்கியிருப்பது தான் வேதனை. என்ன அரசியல் நோக்கத்திற்காக அவர்கள் இவ்வாறு செய்கிறார்கள் என எனக்குத் தெரியவில்லை எனவும் கடுமையாக குற்றம்சாட்டினார்.
இதேவேளை, நீண்டநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை நீங்கள் சந்திக்க மறுத்தது ஏன்? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என்ன உணர்வுடன் வந்துள்ளார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆகவே, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சார்பாக இந்தவிடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நான் ஐவரை அழைத்திருந்தேன். அவர்களுடன் கலந்துரையாடி இந்த விடயம் தொடர்பாக அறிந்த பின்னர் மக்களுக்கு முன் தோன்றி அவர்களின் கேள்விக்கு என்னால் பதில் வழங்க முடியும். என்னை நீங்கள் தனிப்பட்ட ஆர்னோல்டாக பார்க்க முடியாது. நானொரு மாநகர முதல்வர் என அவர் பதிலளித்தார்.
அப்போது அங்கு நின்ற ஊடகவியலாளரொருவர் நீங்கள் மக்களின் வாக்குகளைப் பெற்று யாழ். மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள். இவ்வாறான நிலையில் மக்கள் முன்தோன்றி அவர்களுக்கு விளக்கமளிப்பதில் உங்களுக்கு என்ன தயக்கமிருக்கிறது? என ஊடகவியலாளரொருவர் கேள்வியெழுப்பினார்.
குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், ஒரு தயக்கமுமில்லை. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான கேள்விகளை எழுப்பும் போது நாங்கள் பதில் கூற முடியாதென மழுப்பலாகப் பதிலளித்தார்.
இந்நிலையில் யாழ். மாநகரசபை முதல்வர் தெரிவித்த கருத்துக்கள் ஊடகவியலாளர்களால் வெளியே நின்ற ஆர்ப்பாடடக்காரர்களுக்குத் தெரியப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து தற்போது 4 G நாங்கள் பயன்படுத்தும் போது சிறிய கோபுரங்கள் ஏன் அமைக்கப்படுகிறது? இது 5 G இற்குரிய கோபுரங்கள் தானென அங்கு நின்ற கல்வியலாளரொருவர் அடித்துக் கூறினார். இவ்வாறான கோபுரங்கள் எம்மக்குத் தேவையில்லை. குறித்த கோபுரங்கள் மூலம் கடத்தப்படும் கதிர்வீச்சுக்களால் கருச் சிதைவு மற்றும் எங்களுடைய பரம்பரை அலகுகளைப் பாதிக்கின்றது. அதுமட்டுமன்றி எங்கள் சின்னப் பிள்ளைகளின் மூளைவளர்ச்சிகளைப் பாதிக்கிறது எனவும் அவர் எடுத்துக் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்கள் தற்போது வீதியோரமாக நாட்டப்பட்டு வரும் கம்பங்களில் கமராக்கள் பொருத்தப்படுவது எதற்காக? வீடுகளில் குளிப்பவர்களைப் படமெடுப்பதற்காகவா? எனக் கேள்வியெழுப்பினர். அத்துடன் இவ்வாறான கமராக்கள் மூலமாக சுதந்திரமான குடும்ப வாழ்வு பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் கடுமையாகச் சாடினர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக வருகை தந்த யாழ்.மாநகர சபை ஆணையாளருடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்கின்ற அனைத்து உறுப்பினர்களும் வெளியே வருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களின் அழைப்பை ஏற்றுத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, ஈபிடிபி, ஐக்கியதேசியக்கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் 26 பிரதிநிதிகள் வருகை தந்தனர்.
அவர்களுக்கு தற்போது அமைக்கப்பட்டு வரும் சிமார்ட் கோபுரங்கள், கம்பங்கள் தொடர்பாகவும், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் தொடர்பாகவும், 5 G தொழில்நுட்பத்தால் ஏற்டக் கூடிய பாரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும் சில சான்றாதாரங்களுடன் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
யாழ்.மாநகர சபை உறுப்பினர்களின் அனுமதி இன்றி இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில் யாழ். மாநகர முதல்வர் தன்னிச்சையான செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார். ஆகவே, மாநகரசபை உறுப்பினர்களாகிய நீங்கள் எங்கள் சந்ததியினரின் நலன் கருதி ஆக்கபூர்வமானதொரு முடிவை எடுக்க வேண்டுமெனவும், அவ்வாறு நீங்கள் சம்மதித்தால் நாங்கள் இன்றைய ஆர்ப்பாட்டத்தை இத்துடன் நிறைவு செய்வோம் எனத் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டக்காரர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு பதிலளித்த யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் 12 தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள், ஈபிடிபி- சுதந்திரக் கட்சி கூட்டு 12 பேர், ஐக்கியதேசியக் கட்சி இரண்டு பேர் என மொத்தமாக 26 பேர் இங்குள்ளோம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைத் தவிர்த்துப் பெரும்பான்மை உறுப்பினர்களாகவுள்ள நாங்கள் குறித்த செயற்பாட்டிற்கு எங்களுடைய பூரண எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம் என்றனர்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற யாழ். மாநகர சபை அமர்வில் மேற்படி விடயம் தொடர்பாக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
{நேரடி ரிப்போர்ட்: யாழ். மாநகர சபை வளாகத்திலிருந்து செ. ரவிசாந்-}

