நாவற்குழி விகாரை திறப்பு- நடந்தது என்ன? வீடியோ இணைப்பு
குருநாகல், அனுராதபுரம், கண்டி, அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இருந்து விசேட பேருந்துகளில் பௌத்த சிங்கள மக்கள் அழைத்து வரப்பட்டனர். பெருமளவு பௌத்த குருமாரும் சிறுவா் பௌத்த பிக்குகளும் ஊர்வலமாக நாவற்குழிப் புதிய விகாரையை வந்தடைந்தனர்.
பெருமளவு இலங்கை இராணுவத்தினரும் காவல் துறையினரும் நாவற்குழிப் பிரதேசத்தில் கடந்த 48 மணி நேரமாகக் குவிக்கப்பட்டிருந்தனர்.
புதிய விகாரைத் திறப்பு விழாவை முன்னிட்டு இன்று காலை முதல் யாழ் நகரில் பெருமளவு இராணுவத்தினரும் காவல் துறையினரும் பிரதான சந்திகளில் குவிக்கப்பட்டிருந்தனர். நிகழ்வு பற்றிய செய்திகளைச் சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
இலங்கைப் புலனாய்வாளர்கள் தங்களைக் கண்காணித்தாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
கொழும்பில் உள்ள இலங்கைத் தேசிய வீடமைப்பு அதிகார சபை, நாவற்குழியில் இருந்த தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணியை குறித்த விகாரையைக் கட்டுவதற்காக இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டப்படி ஒதுக்கியிருந்தது.
இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் 1987 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் காணி அதிகாரம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்தது.
ஆனால் இதுவரை காணி அதிகாரம் மாகாண சபைகளிடம் குறிப்பாக வடக்கு- கிழக்கு மாகாண சபைகளிடம் கையளிக்கப்படவில்லை.
வடக்கு- கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் உள்ள காணிகளின் உரிமையை கொழும்பு ஒற்றையாட்சி நிர்வாகத்தின் கீழ் வைத்திருந்தே, புத்த விகாரைகள், புத்தர் வைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காகக் காணிகள் ஒதுக்கப்படுகின்றன. இதற்காக இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புகளும் பெறப்படுகின்றன.
2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் வடக்கு- கிழக்கு தாயகப் பிரதேசங்களில் விகாரைகள் கட்டுதல் புத்தர் சிலை வைத்தல், சைத்தியம் எனப்படும் புத்த தாதுக் கோபுரங்களைக் கட்டுதல் போன்ற நடவடிக்கைகளில் இலங்கைத் தொல்பொருள் திணைக்களம் ஈடுபடுகின்றது.