புதினங்களின் சங்கமம்

130Km வேகம்… வீதியில் சிலமுறை சுழன்று, மோதிய வாகனம்: சனத் நிஷாந்த பலியான விபத்து பின்னணி!! வீடியோ

நேற்று அதிகாலை 2.05 மணியளவில் கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர்.

ஜெயக்கொடி அனுராத என்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அதிவேகமாக வந்த கார் ஒன்று அவர்களது ஜீப்பை முந்திச் செல்ல முற்பட்டதில் இந்த விபத்து நேர்ந்ததாக விபத்தைத் தொடர்ந்து உயிர் தப்பிய இராஜாங்க அமைச்சரின் வாகனத்தின் சாரதி பிரபாத் எரங்க தெரிவித்தார்.

“எங்கள் வாகனத்திற்கு முன்னால் ஒரு கொள்கலன் நகர்ந்து கொண்டிருந்தது. எங்கள் வாகனம் கொள்கலனை முந்திச் செல்லத் தயாராக இருந்தபோது, வலதுபுறத்தில் இருந்து வேகமாக வந்த கார் எங்களை முந்திச் சென்றது. கார் மோதாமல் இருக்க எங்கள் வாகனத்தை இடது பக்கம் திருப்பினேன். இந்த சந்தர்ப்பத்தில், எங்கள் எங்கள் வாகனம் பலத்த சத்தத்துடன் கண்டெய்னர் மீது மோதியது. வாகனம் சுழல்வது போல் இருந்தது. அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை“ என பொலிஸ் உத்தியோகத்தர்களும் சனத் நிஷாந்தவின் உறவினர்களும் வைத்தியசாலைக்கு சென்று என்ன நடந்தது என வினவிய போது தற்போது ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஆராச்சிக்கட்டுவ கலேகம அடிப்பல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதான பிரபாத் எரங்க இவ்வாறு தெரிவித்தார்.

இதுவரை இந்த சாரதியிடம் இருந்து போலீசார் வாக்குமூலம் பெறவில்லை. அவரிடம் வாக்குமூலம் பெற்று நீதிமன்றத்தில் சமர்பிப்போம் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விபத்துக்கு காரணமானவர் இந்த சாரதி எனவும் அதிகாரி தெரிவித்தார்.

WP-KP-7684 இலக்கம் கொண்ட அவரது லான்ட் குரூசர் வாகனம் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் நுழைந்து 10 முதல் 15 நிமிடங்களில் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற போது, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, வாகனத்தின் சாரதி இருக்கைக்கு அடுத்துள்ள இடது ஆசனத்தில் பயணித்துள்ளார். அமைச்சருக்கு இணையான பின் இருக்கையில் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரான, அமைச்சர் பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஜெயக்கொடி ஆராச்சிலாகே அனுராத ஜயக்கொடி (வயது 43) பயணித்துக் கொண்டிருந்தார். இவர் மஹவ, அடவர பிரதேசத்தில் வசிப்பவர். இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப், ஜகத் எதிரிசிங்க நிறுவனத்திற்கு சொந்தமானது என கூறப்படும் கொள்கலனுடன் மோதியுள்ளது.

விபத்து தொடர்பில் விசாரணை மேற்கொண்ட அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவின் பொலிஸார், இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப்பின் இடது பக்கம் கொள்கலனின் பின்புறத்தின் வலது மூலையில் மோதியதையும், வாகனம் சுழன்று இடதுபுறத்தில் உள்ள நெடுஞ்சாலை இரும்பு வேலியில் மோதியதையும் கண்டறிந்தனர்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் வாகனத்தின் இடது பக்கம் அமர்ந்திருந்ததால், விபத்தில் அவர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகினர். வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கிய இராஜாங்க அமைச்சரை மீட்க அதிவேக நெடுஞ்சாலை ஊழியர்களும், காவல்துறையினரும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வீதியில் பயணித்த வாகனத்தை நிறுத்துவதற்கு கூட தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், விபத்து நடந்த போது, ​​இராஜாங்க அமைச்சர், தான் அமர்ந்திருந்த இருக்கையை மடித்துக் கொண்டு தூங்கியதாகவும், போலீசாருக்கு தெரியவந்துள்ளது. குருநாகலில் நடந்த தனது அமைச்சில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் மகனின் திருமண வைபவத்தில் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கலந்து கொண்டு அவர்களை வேறு வாகனத்தில் கொழும்புக்கு அனுப்பி வைத்த அமைச்சர், ஆராச்சிக்கட்டில் இடம்பெற்ற உறவினர் ஒருவரின் மற்றுமொரு திருமண வைபவத்திற்கு சென்று சுமார் 10 நிமிடங்கள் வரை அங்கிருந்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான வாகனத்தில் இருந்து மூன்று துப்பாக்கிகளையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அவற்றில் இரண்டு ஆயுதங்கள் இராஜாங்க அமைச்சருக்குச் சொந்தமான உரிமம் பெற்ற ஆயுதங்கள் எனவும் மற்றைய ஆயுதம் பொலிஸாரால் அவரது MSD பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு வழங்கப்பட்டதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விபத்து ஏற்படும் போது இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் மணிக்கு 130 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் ஓடியதாகத் தோன்றுவதாக இந்த அதிகாரி தெரிவித்தார்.

கன்டெய்னரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ராகம போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், அனுமதிக்கப்பட்ட போது ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். ஜா-எல இன்டர்சேஞ்சை கடந்து 11.1 கிலோமீற்றர் தூரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம், பண்டாரவத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள விழா மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு இராஜாங்க அமைச்சர் திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மூன்று மகள்கள் மற்றும் ஒரு மகனின் தந்தையான இராஜாங்க அமைச்சர், இறக்கும் போது 49 வயதாகும். அமைச்சர் பயணித்த ஜீப் கன்டெய்னரின் பின்பகுதியில் மோதியுள்ளதாகவும், ஆனால் விபத்துக்கு கொள்கலனின் சாரதி பொறுப்பல்ல எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்விபத்து உணர்வுபூர்வமான சம்பவம் என்பதால் கொள்கலன் சாரதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் சடலத்தை நேற்று பிரேத பரிசோதனை செய்த ராகம போதனா வைத்தியசாலையின் பிரதம நீதித்துறை வைத்திய அதிகாரி டொக்டர் ரமேஷ் அழகியவண்ண, இராஜாங்க அமைச்சரின் இடது கால், தலை, மார்பு மற்றும் பல இடங்களில் ஏற்பட்ட காயங்களினால் ஏற்பட்ட உள் இரத்தக் கசிவு காரணமாக அவரது மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ராகம வைத்தியசாலையின் பிரதம நீதி வைத்திய அதிகாரி டொக்டர் ரொமேஷ் அழகியவண்ண மற்றும் ஆலோசகர் வைத்தியர் வியானி டயஸ் ஆகியோரினால் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ராகம வைத்தியசாலையின் திடீர் மரணங்கள் தொடர்பில் விசாரணையாளர் சுதர்சன திஸாநாயக்க தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சருக்கு தீராத நோயோ அல்லது வேறு எந்த நோயோ இல்லை என பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளதாக அவர் கூறினார். இராஜாங்க அமைச்சரின் சகோதரர் ஜகத் சமந்தவினால் சடலம் அடையாளம் காணப்பட்டதை அடுத்து நேற்று காலை 10 மணியளவில் பிரேத பரிசோதனை ஆரம்பமானது.

இராஜாங்க அமைச்சரின் சகோதரர் மற்றும் நண்பர் ஒருவர் உள்ளிட்ட குழுவிடமிருந்தும் ஆதாரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது மரணத்தில் தங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.