புதினங்களின் சங்கமம்

க.பொ.த உயர்தர பரீட்சை: விவசாய விஞ்ஞான வினாத்தாள் கசிந்தது இப்படித்தான்!

2023 (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானம் II பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் மொரட்டுவையில் உள்ள பரீட்சை நிலையத்தின் தலைவருக்கு உதவிய அலுவலக உதவியாளர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர்.

அலுவலக உதவியாளர் சம்பந்தப்பட்ட வினாத்தாள் மூட்டையின் சீல்களை உடைத்து வினாத்தாள் ஒன்றை எடுத்து தனது கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை வட்ஸ்அப் ஊடாக மாணவருக்கு அனுப்பி வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த மாணவர் வினாத்தாளை வட்ஸ்அப் மூலம் பல மாணவர்களுக்கு அனுப்பியுள்ளார், பின்னர் அது மாணவர்களிடையே பரவலாக பகிரப்பட்டது.

ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற பாடம் தொடர்பான முதலாவது வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் ஊடாகவும் இந்த நபர் அனுப்பியுள்ளதாகத் தெரிகின்றது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இருப்பினும், இது இரண்டாவது வினாத்தாள் போன்று பரவலாக பகிரப்படவில்லை.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொலைபேசி வலையமைப்பை ஆராய்ந்து முதலில் வினாத்தாளை வெளியிட்ட நபரை அடையாளம் கண்டுள்ளனர்.

மொரட்டுவையில் உள்ள பாடசாலை ஒன்றில் அலுவலக உதவியாளராக கடமையாற்றும் சந்தேகநபர் மொரட்டுவை பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடையவராவார். இந்த நபர் பணத்துக்காக செய்தாரா அல்லது நட்பின் அடிப்படையில் செய்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.

தாளைப் பகிர்ந்த அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், உயர்தரப் பரீட்சை முடிந்ததும் அவ்வாறான மாணவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் தல்துவ மேலும் தெரிவித்தார்.