புதினங்களின் சங்கமம்

யாழில் அம்மாவைக் கொன்ற தொலைபேசி கேமுக்கு அடிமையான 16 வயதுச் சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்!!

யாழ்ப்பாணம், தெல்லிப்பளையில் குடும்பப் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், காணாமல் போன அவரது 16 வயது மகன் பொலிசாரிடம் சரணடைந்துள்ளார். தாயை தானே கொலை செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தெல்லிப்பளை, துர்க்காபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 4ஆம் திகதி இரவு இந்த கொலை நடந்தது.

கெனடி ஜஸ்மின் (37) என்ற 2 பிள்ளைகளின் தாயார் வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவரது 16 வயதான மகன் காணாமல் போயிருந்தார். அவர் உளநலச்சிக்கல்களுக்கு உள்ளானவர். அத்துடன் கையடக்க தொலைபேசி விளையாட்டுக்கு அடிமையானவர். கையடக்க தொலைபேசியை தருமாறு அடிப்படி வீட்டில் சண்டையிடுவதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் வாய், மூக்கால் இரத்தம் வெளியேறியிருந்தது. இரத்தத்தினால் வீட்டு சுவர்களில் சில வாசகங்களும் எழுதப்பட்டிருந்தன. Im killing family உள்ளிட்ட சில வாசகங்கள் வீட்டு சுவரில் எழுதப்பட்டிருந்தன.

குறிப்பிட்ட சிறுவன், கொலை மற்றும் தற்கொலை தொடர்பான குறிப்புக்களை சேகரித்து வைத்திருந்ததை, வீட்டில் சோதனையிட்ட பொலிசார் கண்டறிந்தனர்.

சம்பவ தினத்தன்றும் கையடக்க தொலைபேசிக்காக சிறுவன் சண்டையிட்டுள்ளார். பின்னர், சிறுவன் கத்தி, மற்றும் ஊசியை தனது படுக்கையில் வைத்திருந்ததை அவதானித்ததால், அவரது சகோதரியை அன்று இரவு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு தாயார் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில் காணாமல் போன சிறுவன் நேற்று தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்துக்கு சென்றார். தானே தாயாரை கொலை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலமளித்தார்.

தாயார் நித்திரை மாத்திரைகளை பாவித்து விட்டு உறக்கத்தில் இருந்த போது, அவரது கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிவித்தார்.

கொலையின் பின்னர் கொழும்புக்கு பேருந்தில் சென்றதாகவும், அங்கு இறங்கி சிறிது நேரம் உட்கார்ந்திருந்து விட்டு, மறுபடியும் பேருந்தில் ஏறி யாழ்ப்பாணம் வந்து, தெல்லிப்பளை வந்ததாகவும் தெரிவித்துள்ளார். வீட்டுக்கு சென்றபோது, தாயாரின் கண்ணீர் அஞ்சலி பதாதைகள் கட்டப்பட்டிருப்பதை பார்த்து விட்டு, நேராக பொலிஸ் நிலையம் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

சிறுவன் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, அச்சுவேலியிலுள்ள சிறுவர் சீர்திருத்த காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

May be an image of 1 person, child, clothes iron and towel rack