புதினங்களின் சங்கமம்

யாழ்ப்பாண பெண் பிரேமிலா வெள்ளவத்தை மாடிக் குடியிருப்பிலிருந்து குதித்து பலியாகியது ஏன்?

வெள்ளவத்தை பிரதேசத்தில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பாடசாலை ஆசிரியை ஒருவர் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று முன்தினம் (8) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கொழும்பு 6, வெள்ளவத்தை, தயா வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 49 வயதுடைய பிரேமிலா ஞானகணேசன் என்ற ஆசிரியையே உயிரிழந்துள்ளார். இவர் பம்பலப்பிட்டி ராமநாதன் இந்து கல்லூரியின் ஆசிரியை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

உயிரிழந்த ஆசிரியையின் கணவரான வர்த்தகர் கடந்த 7ஆம் திகதி தனிப்பட்ட தேவைக்காக யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தார்.

சம்பவத்தன்று இவரது மகன் வீட்டில் இருந்துள்ளார். இவர் தற்போது நடைபெறும் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் எனவும், அவர் வீட்டில் படித்துக் கொண்டிருந்த போது தாயார் வீட்டில் இருந்த நாற்காலியை எடுத்துக்கொண்டு அடுக்குமாடி குடியிருப்பின் 8ஆம் மாடிக்கு சென்றுள்ளதாகவும், அங்கிருந்து ஜன்னல் ஊடாக குதித்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மகன், தனது தாயின் மரணத்தினால் மிகவும் அதிர்ச்சியடைந்திருந்ததாகவும், ஆனாலும் மனதை திடப்படுத்திக் கொண்டு நேற்று (9) நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் பங்கேற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் என்பதும் தெரியவந்துள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை உயிரிழந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த களுபோவில தெற்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி ஜனக கொடிகார விசாரணைகளை மேற்கொண்டார்.