சாராய வெறியில் வந்தீர்களா?? காணாமல் போனவர்களின் தாய்மாரை கேவலமாக ஏசிய தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்!!
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மது போதையில் வந்தே போராட்டத்தில் ஈடுபட்டனர் என
தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்தியமை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்
மத்தியில் கொதி நிலையை ஏற்படுத்தி இருந்தது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்றைய தினம் தமிழ் அரசு கட்சியின் 16ஆவது தேசிய
மாநாடு நடைபெற்றது. அதன் போது மண்டபத்தின் வெளியே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவ்வேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வந்த தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ,
சிவசக்தி ஆனந்தனின் தூண்டுதலில்தானே இங்கே வந்தீர்கள், அவரின் மண்டையன் குழுவால் எத்தனை
பேர் காணாமற்போனார்கள் என உங்களுக்கு தெரியாதா ? அவரிடம் சென்று அவர்களால்
காணாமற்போனவர்கள் பற்றி கேளுங்கள் என கூறினார்கள்.
அத்துடன் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவினால் எவ்வளவு பேர்
காணாமற்போனார்கள். அவர்கள் அலுவகத்தின் முன்னால் சென்று போராட்டத்தை நடத்துங்கள் எனக்
கூறினார்கள்.
அதேவேளை அரசுடன் இணைந்திருக்கும் அங்கஜன் இராமநாதன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன்
ஆகியோரிடம் போய் காணாமற்போனோர் தொடர்பில் கேளுங்கள் எனவும் தமிழ் அரசுக் கட்சியினர்
கூறினார்கள்.
அதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்களிடம் நாம் ஏன் போய் கேட்க வேண்டும்.
நாங்கள் கூட்டமைப்புக்கே வாக்களித்தோம். கூட்டமைப்பே எங்கள் உறவுகளின் தகவல்களையும் அரசியல்
கைதிகளின் விடுதலையையும் சாத்தியமாக்குவோம் என கூறி வாக்கு கேட்டார்கள். அவர்களே செய்ய
வேண்டும்.
உள்ளூராட்சி சபைகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் அரசுடன் இணைந்து ஆட்சி அமைத்தது
கூட்டமைப்பே. அப்போது அவர்களுடன் கூடி குழாவிவிட்டு தற்போது எங்களை அவர்களிடம் போங்கள்
என அனுப்புகிறீர்களா ? என பதில் கேள்விகள் கேட்டனர்.
அதனால் அவ்விடத்தில் இரு தரப்புக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டது. அதன் போது
தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த பெண்களை நோக்கி மது
போதையில் போராட வந்தீர்களா? என கேட்டனர். அதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கடும்
கோபத்திற்கு உள்ளாகி கடுமையான வாய் தர்க்கத்தில் ஈடுபட்டனர். அதன் போது அவ்விடத்திற்கு
வந்த சிலர் கட்சி உறுப்பினர்களை அங்கிருந்து அழைத்து சென்றனர்.
அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தொடர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுத்தனர்.
மதியம் 12 மணி முதல் 2 மணி வரையில் கடுமையான வெயிலுக்கும் மத்தியில் வீதியில் நின்று
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.