புதினங்களின் சங்கமம்

விகாரைகளை இலக்கு வைத்து 2ம் கட்ட தாக்குதல் நடாத்தவிருந்த தீவிரவாதிகள்!! அதிர்ச்சி வாக்குமூலம் இதோ!!

விகாரைகளை இலக்கு வைத்து இரண்டாம் கட்ட தாக்குதல்! – சாய்ந்தமருதில் நிர்மூலமாக்கப்பட்டது திட்டம்

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21 மற்றும் 30 ஆகிய திகதிகளில் பௌத்த விகாரை, தேவாலயங்கள் ஆகியவற்றை இலக்கு வைத்து இரண்டு கட்ட தற்கொலை தாக்குதலை நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு திட்டமிட்டிருந்தாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து சி.ஜ.டி.யினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக அந்த பொலிஸ் உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பில் முதலில் இணைந்த சிரியாவிலுள்ள கண்டியைச் சேர்ந்த இருவரின் ஆலோசனைக்கமைய இலங்கையில் சஹ்ரான் தலைமையில் இந்த இரண்டு கட்ட தற்கொலை தாக்குதல்களை நடத்த திட்டமிடப்பட்டிந்தன.

2015ஆம் ஆண்டு தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பை உருவாக்கி அதனூடாக மதப் பிரசாரங்களை முன்னெடுத்த நிலையில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி மாநாடு ஒன்றை நாடத்தியபோது அங்கு சுல்பி முஸ்லீம்களுக்கு இடையில் ஏற்பட்ட சண்டை ஒன்று காத்தான்குடி அலியார் சந்தியில் இடம்பெற்றது.

இதன்போது சஹ்ரானின் தந்தை உட்பட 11 பேரை பொலிஸார் கைது செய்த நிலையில் சஹ்ரான் தப்பி ஓடியுள்ளார். அவருக்கு நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு பொலிஸார் தேடிவந்தனர்.

இந்நிலையில் தப்பி ஓடிய சஹ்ரான் மாவனெல்லை பகுதியில் மறைந்திருந்துள்ளார். அதனைத் தொடர்ந்து முகமட் இப்ராஹீம், அப்துல் கரீம் ஆகிய இருவர் தலைமையில் மாவனெல்லை குறூப் என்ற அமைப்பொன்றை உருவாக்கி நடத்தி வந்துள்ளார்.

இதன்போது மாவெனெல்லை பகுதியில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதையடுத்து அங்கு ஏற்பட்ட அசாதாரண நிலைமையினால், முஸ்லிம் இளைஞர்கள் சிலர் மாவனெல்லை குறூப் என்ற அமைப்புடன் சேர்ந்து இயங்கி வந்துள்ளனர் .

அதனடிப்படையில் ஜமாத் மிலாக்கே இப்பிறகாம் (ஜே.எம்.ஜ) தேசிய தவ்ஹீத் ஜமாஅத் (என்.ரி.ஜே) மாவனெல்லை குறூப் அமைப்பு ஆகிய மூன்று அமைப்புக்களும் ஒன்றிணைந்த நிலையில் அந்த அமைப்புக்களின் தலைவராகவும் இலங்கையிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவராகவும் சஹ்ரான் நியமிக்கப்பட்டார்.

அதன்பின்னர் முதன்முதலாக இலங்கையிலிருந்து சிரியாவுக்கு சென்று ஜ.எஸ்.ஜ.எஸ் அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்ற கண்டி பெரலகம பிரதேசத்தைச் சேர்ந்த முகமட் முகைதீன் இர்ஷாத் அகமட், முகமட் முஹைதீன் சர்பாத் நிலாம் என்பவர்களுடனான தொடர்பு சஹ்ரானுக்கு ஏற்பட்டதுடன் பண உதவிகளும் அங்குள்ள அமைப்புகளூடாக கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனையடுத்து இலங்கையில் எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பது குறித்து சிரியாவிலுள்ள இருவரிடம் ஆலோசனைகளை, 2017ஆம் ஆண்டு சஹ்ரான் குழுவினர் பெற்றனர்.

அந்த அமைப்பின் கொள்கை பரப்புபவர்களாக நௌவ்பர் மௌலவி மற்றும் சஹ்ரானின் சகோதரர் செயின் மெளலவி ஆகியோரும், ஆயுதக்குழுவின் தளபதியாக அஹமட் மில்கான், வெடிபொருள் தயாரித்தல் தொழில் நுட்பத்திற்கு கயாத்து கஸ்தான் மற்றும் முகமட் ரில்வானும் ஆகியோரும் ஊடகத்திற்கு காத்தான்குடியைச் சேர்ந்த முகமட் பைருஸ் என்பவரும், ஆயுத பயிற்சிக்கு ஆமி முகைதீன் என்பவரும் நியமிக்கப்பட்டனர்.

சிரியாவிலுள்ள இருவரின் உதவி ஆலோசனையுடன் தாக்குதலுக்கான பல்வேறு திட்டங்களை தீட்டப்பட்டதையடுத்து முதலில் பயிற்சிக்காக நுவரெலியா அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து அவை மூளைச்சலவை மற்றும் வாள் பயிற்சியளிக்கும் முகாமாக்கப்பட்டதுடன் வனாத்தைவில்லில் ஆயத பயிற்சி முகாம் அமைக்கப்பட்டது.

அத்துடன் இவர்களது பாதுகாப்பிற்காக நீர்கொழும்பு, பாணந்துறை, மல்வானை, காத்தான்குடி ஓல்லிக்குளம், கொள்ளுப்பிட்டி லக்கி பிளாசா, வனாத்தை வில்லு, கல்கிசை விகாரை வீதி போன்று நாட்டின் பல பகுதிகளிலும் வீடுகளை வாடைகைக்கு எடுத்துள்ளனர். இதில் சில இடங்களில் தாக்குதலுக்கான வெடிபொருட்களை மறைத்து வைத்துள்ளனர்.

மேலும் நுவரெலியா, அம்பாந்தோட்டை பயிற்சி முகாமில் காத்தான்குடியைச் சேர்ந்த 40 பேர் உட்பட நாட்டில் ஏனைய பகுதியைச் சேர்ந்த சுமார் 120 பேருக்கு மூளைச் சலவை செய்யப்பட்டு அவர்களுக்கு அங்கு வாள் பயிற்சி வழங்கப்பட்டது.

இந்த வாள் பயிற்சி பெற்றவர்களுக்கு வழங்குவதற்காக மரண தண்டனைக்கு வெட்டுவதற்கு பாவிக்கப்படும் 1500 இங்கிலாந்து ரக சீன தயாரிப்பு வாள்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு பல இடங்களில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டு, இரண்டாம் கட்ட தாக்குதல் ஏற்பட்ட பின்னர் ஏற்படும் இன வன்முறையின் போது வன்முறையாளர்கள் மீது வாள் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டது.

சிரியாவில் இருந்து தாக்குதலுக்கு ஆலோசனை வழங்கி வந்த இருவரில் ஒருவரான முகைதீன் சர்பாத் நிலாம் 2018 ஜூலை 12ஆம் திகதி அங்கு இடம்பெற்ற விமானத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து சிரியாவில் இருக்கும் முகமட் முகைதீன் இர்ஷாத் அகமட், வழிநடத்தலில் தாக்குதலுக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய தாக்குதலுக்கு ஆயுதம் தேவையெனக் கருதி, அவற்றை பெற்றுக்கொள்வதற்கான தாக்குதலுக்கு திட்டமிட்ட நிலையில், இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் தலைவர் சஹ்ரான் வழிகாட்டலின் கீழ் சவுதியில் வைத்து கைதுசெய்யப்பட்ட அகமது மில்கான் தலைமையில் சஹ்ரானின் சாரதியான ஆதம்லெப்பை கபூர் உட்பட 4 பேர் கொண்ட குழுவினர் மட்டக்களப்பு, வவுணதீவு வலையிறவு பாலத்தில் கடமையில் இருந்த பொலிஸார் மீது கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி சுட்டும், கத்தியால் குத்தியும் படுகொலை செய்து அவர்களிடம் இருந்த கைதுப்பாக்கிகளை எடுத்துச் சென்றமை முதல் தாக்குதலாகும்.

அதனைத் தொடர்ந்து தாக்குதலுக்கு இரு திகதிகள் தீர்மானித்திருக்கின்றனர். அதில் உயிர்த்த ஞாயிறு 21ஆம் திகதி, முதலாவது தாக்குதல் சஹ்ரான் தலைமையில் திட்டமிடப்பட்டது. அந்தவகையில், மட்டக்களப்பு சீயோன் தேவாயத்திற்கு காத்தான்குடியைச் சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத், நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாயத்தின் மீது வாழைச்சேனை- ஓட்டமாவடியைச் சேர்ந்த முகமது கஸ்தூன், கொழும்பு- கொச்சிக்கடை தேவாலயம், ஹோட்டல் உள்ளிட்ட பகுதிகளிலும் தற்கொலைத் தாக்குதலுக்குத் திட்டமிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டத் தாக்குதல் மட்டக்களப்பு தேற்றாத்தீவு தேவாலயம். கண்டி தலதா மாளிகை, மட்டு-அம்பாறை மாவட்டத்தில் ஏதாவது ஒரு விகாரை ஆகிய மூன்று இடங்களில் சஹ்ரானின் தம்பி றில்வான் தலைமையில் மகேந்திரன் புலேந்தினி (சாரா), சஹ்ரானின் சகோதரரான செயினி மௌலவியின் மனைவியான ஆதம்பாலெப்பை ஆபரித், மட்டக்களப்பு சீயொன் தேவாலயத்தில் தாக்குதல் மேற்கொண்ட முகமது ஆசாத்தின் மனைவி அப்துல் ரகீம் பைரூசா, சஹ்ரானின் மூத்த சகோதரி முகமது காசீம் ஹிதாயா என திட்டமிடப்பட்டது. இந்த இரண்டாம் கட்டத் தாக்குதலை 30ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டது.

இந்நிலையில் முதலாவது தற்கொலை குண்டுத்தாக்குதல் சஹ்ரான் தலைமையில் இடம்பெற்ற பின்னர் கல்முனையில் சியாம் தலைமையிலான முபாசித், காலித், சலீம், சப்றாஜ் ஆகிய சஹ்ரானின் குழுவொன்று இரண்டாம் கட்டத் தாக்குதலை நடத்த இருக்கின்ற தற்கொலை குண்டுதாரிகளின் உறைவிடம் உணவு போன்ற தேவைகளை ஏற்பாடு செய்து தயார் நிலையில் வைத்திருந்துள்ளனர்.

நாட்டில் பல இடங்களில் இருந்த தற்கொலை குண்டுதாரிகள் ஒன்று சேர்ந்து கல்முனை சியாம் அணியினரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிந்தவூருர் வீட்டிற்கு வந்தடைந்தனர். இதேவேளை, இரண்டாம் கட்டத் தாக்குதலுக்குத் தேவையான வெடிபொருட்கள் சம்மாந்துறை செந்நெல் கிராமத்தில் பாதுகாப்பாக ஏற்கனவே வைக்கப்பட்டிருந்தது.

நிந்தவூருக்கு வந்தடைந்த அவர்கள், அங்கிருந்து சாய்ந்தமருதில் ஏற்கனவே வாடகைக்கு எடுத்துவிடப்பட்ட வீட்டிற்கு சாய்ந்தமருதில் குண்டு வெடித்த தினத்தன்று வானில் வரும்போது சாராவும் சஹ்ரானின் மூத்த சகோதரி ஹிதாயா ஆகியோர் தமது உடல்களில் தற்கொலை வெடிகுண்டை கட்டிக் கொண்டு சென்றுள்ளனர். இடையில் பொலிஸார் வாகனத்தை நிறுத்தினால் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துவதாக இருந்துள்ளனர்.

எனினும் வீதி சோதனையில் இந்த வாகனம் அகப்படாதமையினால் சாய்ந்தமருது வீட்டிற்கு பாதுகாப்பாக வந்தடைந்தனர். பின்னர் குறித்த வீட்டை பொலிஸார் சுற்றிவளைத்ததையடுத்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் சாரா மலசலகூடத்தில் வைத்து தற்கொலை குண்டுத் தாக்குதலை நடத்தியதும், அங்கிருந்த சஹ்ரானின் மனைவி மற்றும் குழந்தை ஆகிய இருவரும் உயிர் தப்பிய நிலையில் ஏனைய தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.

அக்கரைப்பற்று பாலமுனை களப்பில் இருந்து மீட்கப்பட்ட சஹ்ரானின் மடிக் கணனியின் தரவுகள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களிடம் அரச புலனாய்வு சி.ஜ.டி.யினர் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் இவை தெரியவந்துள்ளன” என்று தெரிவித்துள்ள பொலிஸ் அதிகாரி, தொடர்ச்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.