யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிப் பாடசாலை உள்ளிட்ட வடக்கு மாகாணத்தின் வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 350 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு (SKS) நியமனக் கடிதங்கள் நாளை (18) வழங்கப்படவுள்ளன.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் ஆகியோரின் தலைமையில், காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள திவியா மஹாலில் நாளை பிற்பகல் இந்த நியமன நிகழ்வு நடைபெறவுள்ளது. இதன்படி, மத்திய சுகாதார அமைச்சின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 50 பேரில் 45 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கும், 5 பேர் யாழ்ப்பாணம் தாதியர் பயிற்சிப் பாடசாலைக்கும் நியமிக்கப்படவுள்ளனர்.
மேலும், வடக்கு மாகாண சபையின் கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 300 சுகாதாரப் பணி உதவியாளர்கள், வடக்கு மாகாணத்தின் ஏனைய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ளனர்.
நாட்டின் இலவச சுகாதார சேவையின் தரத்தை உயர்த்துவதுடன், வைத்தியசாலை நிர்வாகம் மற்றும் நோயாளர் பராமரிப்பு சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக, மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் இணைந்து மனித வள மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, நீண்ட காலத்திற்குப் பின்னர் சுகாதாரப் பணி உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காணப்படும் பணியிட வெற்றிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களுக்கு 1,860 சுகாதாரப் பணி உதவியாளர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அண்மையில் நடைபெற்ற கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகளின் மூலம் திறமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கே இந்த நியமனக் கடிதங்கள் வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டாக்டர் எஸ். ஸ்ரீ பவானந்தராஜா, மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், டாக்டர் செல்லத்தம்பி திலகநாதன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண பிரதம செயலாளர், வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிராந்திய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.





