புதினங்களின் சங்கமம்

கிளிநொச்சியில் அரிய மீனைப் பிடித்தவர் கதறி அழுகின்றார்!! எதற்காக?? நடந்தது என்ன?

20 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் கையகப்படுத்தப்பட்டது: தானாக வந்து சிக்கியதற்கு இந்த
தண்டனையா?… கதறுகிறார் புள்ளிசுறா பிடித்தவர்

கிளிநொச்சி இரணைதீவு கடல் பரப்பில் அரியவகை புள்ளி சுறாவை வேட்டையாடிய குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளி நான்கு ஆட்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

13 இலட்சம் பெறுமதியான அவரது படகு, இயந்திரம், மற்றும் ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான
வலைகள் என்பன கடற்படையினரின் கட்டுபாட்டில் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக கடற்றொழிலாளர்கள்
தெரிவிக்கின்றனர்.

புள்ளிசுறாவை வேட்டையாட கூடாதென தமக்கு தெரியாதென்றும், அதிகாரிகள் அது தொடர்பான
விழிப்புணர்வை ஊட்டவில்லையென்றும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“வழமை போன்று தொழில் நடவடிக்கைகளுக்காக நேற்று முன்தினம் இரவு சனிக்கிழமை வலை
விரித்து விட்டு வந்த பின்னர், நேற்று அதிகாலை சென்று வலையை இழுத்த போது சுமார் 1200
கிலோ கிராம் புள்ளி சுறா சிக்கியுள்ளது. இது தடை செய்யப்பட்ட மீனினம் என்று எங்களுக்குத்
தெரியாது.

இதுவரைக்கும் நீரியல் வளத் திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கு இவ் வகை சுறா மீன்
தடைசெய்யப்பட்டது என்று எந்த தகவலையும் தரவில்லை.

எங்களை பொறுது்தவரை ஆமை, கடற்பன்றி, டொல்பின், திமிங்கலம், ஓங்கில் போன்ற கடற்வாழ்
உயிரினங்களே பிடிக்க முடியாது என்று தெரியும்“ எனத் தெரிவித்துள்ளனர் அந்த பகுதி
கடற்றொழிலாளர்கள்.

“15 அடி ஆழமான இந்த கடற்பரப்பில் இவ்வகை சுறா மீன்கள் வருவது கிடையாது. அதற்கான
சாத்தியம் இல்லை. இந்த சுறா மீன் ஏற்கனவே பாதிக்கப்பட்டு, அல்லது கப்பல்களில் தாக்கப்பட்டு
கரையொதுங்கிய போது எங்களது சாதாரண வலையில் சிச்சியிருக்கிறது.

இது வழமை போன்று ஆரோக்கியமாக காணப்பட்டிருக்குமானால் எங்களது படகு மற்றும் வலை
என்பவற்றுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றிருக்கும். எனவே ஆரோக்கியமற்ற
நிலையில் கரையொதுங்கிய போதே எமது வலையில் சிக்கியிருக்கிறது“ என்றும் தெரிவித்தனர்.

“இதற்காக அதிகாரிகள் எங்களது கடற்றொழிலாளர்களை கைது செய்து அவர்களை நீதிமன்றில்
முற்படுத்தி தற்போது நீதிமன்றம் பிணையில் விடுவித்திருக்கிறது.

அத்தோடு 13 இலட்சம் பெறுமதியான படகு, இயந்திரங்கள் என்பன கடற்படையின் கட்டுப்பாட்டில்
உள்ளது. ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான வலைகளை அதிகாரிகள்
கையகப்படுத்தியிருக்கின்றார்கள் என கவலை தெரிவித்த கடற்றொழிலாளர்கள், தானாக வலையில்
சிக்கிய மீனுக்காக தண்டனைகளை அனுபவிப்பதோடு, தொழில் ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனர்.

வலையில் சிக்கிய புள்ளி சுறா தற்போது கடற்கரை பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளது.