முல்லைத்தீவில் காணாமல் போன இளம் குடும்பப் பெண் சடலமாக புதைகுழியிலிருந்து மீட்பு!! கணவன் கொலை செய்தது ஏன்? Video
முல்லைத்தீவு நீராவிபிட்டி கிழக்கு கிராமத்தில் காணாமல் போயிருந்த குடும்பப் பெண், வீட்டின் மலசலகூடத்திற்கு அருகே குழியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம்(24) சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தினை சேர்ந்த த.கீதா எனும் 23 வயதுடைய குடும்பப் பெண்னே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு நீராவிபிட்டி பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்த தனது மகளையும் மருமகனையும் காணவில்லை எனவும், வீட்டின் பின்புறத்தில் புதிய குழி இருப்பதால் அதை தான் சந்தேகிப்பதாகவும் தாயார் ஒருவர் நேற்றையதினம் முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் கணவனை வெல்லப்பிட்டிய பகுதியில் இன்று(24) காலை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் அவர் தனது மனைவியை கொலை செய்து வீட்டில் குழிவெட்டி புதைத்தமை தெரியவந்துள்ளது.
அதனடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் அவர்கள் வசித்த வீட்டின் பின்புறமாக உள்ள மலசலகூடத்திற்கு அருகே குழி தோண்டி புதைக்கப்பட்டிருந்த சடலம் இன்று மாலை தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.
மனைவிக்கு இன்னொருவனுடன் தொடர்பு என சந்தேகித்ததால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.