திருகோணமலையில் மார்படைப்புநோயினால் பாதிக்கப்படும் எத்தனை பேரை இன்னும் இழக்கப்போகின்றோம்?
உரிய நேரத்திற்குச் சிகிச்சை அளித்திருந்தால் உயிரைக் காத்திருக்கலாம் எனும் கூற்றுக்கு என்ன பதில் எம்மிடம் உண்டு.
திருகோணமலையின் இதயநோயாளிகளை வெளி மாவட்டத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கவேண்டிய தேவை என்ன?
உலகம் எவ்வளவோ வளர்ந்திருக்க ஒரு இருதயநோளாளியைப் பராமரிக்கும், சிகிச்சை அளிக்கும் வைத்திய வசதியை பெரும் பாரம்பரியத்தைக் கொண்ட திருகோணமலை கொண்டிருக்காதது ஏன்?
ஜப்பான் அரசின் JICA நிறுவனத்தினால் அமைக்கவிருந்த இதயசிகிச்சை பிரிவு பூர்த்தியாகாமைக்குக் காரணம் என்ன?
திருகோணமலை மக்களை விழித்தெழுங்கள்!
திருகோணமலையின் ஒரு இளம் தொழில் முயற்சியாளர் மாரடைப்பினால் அகாலமரணமானார் எனும் செய்தி திருகோணமலை மக்களை ஒரு கணம் கலங்கச் செய்திருக்கின்றது.
ஒரு சொட்டுக்கண்ணீர், இரந்து நாலுவார்த்தை, சமூகவலைத்தளத்தில் படத்துடன் கூடிய அஞ்சலி, அதன் கீழ் பிரதிசெய்த அனுதாபப் பகிர்வுடன் இந்த இழப்பைக் கடந்துசென்றிடுவோம்.
மரணம் என்பது தவிர்க்க முடியாதது எனத் தேற்றிக்கொண்டாலும், இறுதிவரை ஒரு உயிரைக் காக்க ஒவ்வொருவரும் போராடுவதும், தாங்க முடியாத பொருள் இழப்பைச் சந்திப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது.
ஒவ்வொன்றையும் கடந்துகொண்டுதான் இருக்கின்றோம்.
திருகோணமலை மாவட்டத்தைப் பொறுத்தவரை இதயநோய் காரணமாக பல உயிர்களை இழந்துகொண்டு இருக்கின்றோம். இதயம் தொடர்பான எந்த ஒரு நோய்க்கும் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை செய்யும் வசதி இல்லாமையினால் திருகோணமலை மாவட்டம் கடந்து அனுராதபுரம், பொலநறுவை என அரச வைத்தியசாலையின் ஊடான சிக்கிச்சைக்கும், பணவசதியுடையோர் கொழும்பு, கண்டி எனத் தனியார் வைத்தியசாலையினையும் நாடவேண்டிய நிலையே காணப்படுகின்றது.
மாதாந்தம் சுமார் 80 -90 பேர் Angiogram சோதனையினைச் செய்வதுடன் பெரும் பொருட்செலவுக்கும் உட்படுகின்றனர்.
இவ்வாறு இதயம் தொடர்பான சிகிச்சகைள் அனைத்திற்கும் வெளிமாவட்டத்தை நாடவேண்டியுள்ளதால் பல அநியாய மரணங்களையும் எமது மக்கள் எதிர்கொள்ளுகின்றனர்.
இக்குறைபாட்டுட்குத் தீர்வைத்தரும் வகையிலேயே ஜெய்கா திட்டத்தின் அதிநவீன வசதிகொண்ட Cardiology Unit அமைக்கத் திட்டம் அனுமதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் முன்னாள் கிழக்குமாகாண ஆளுநர் உட்பட இன்னும் சிலரால் இந்தத்திட்டம் திருகோணமலையில் இருந்து வேறொரு இடத்திற்கு மாற்ற முழு முயற்சி எடுக்கப்பட்டது. இருந்தும் திருகோணமலையில் பல தரப்பாலும் எடுத்த முயற்சினால் அது திருகோணமலையில், தற்போதைய வைத்தியசாலை வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தில் அமைக்க முடிவாகியது.
எமது துரதிஸ்டம் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக திட்டம் கடந்த இரண்டு வருடம் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
தற்போது திட்டத்தை ஆரம்பிக்க திட்ட அமைப்பு முடிவுசெய்துள்ளது.
ஆனால் திருகோணமலையில் இந்த இதயசிகிச்சை கட்டிடத்தொகுதி அமையக்கூடாது எனும் எண்ணம் கொண்டவர்கள் இன்னும் அதே செயலூக்கத்துடன் இருப்பதால் தொடர்சவால் இருக்கப்போகின்றது.
எனவே திருகோணமலை அரசியல் தலைமைகள், கட்சிகள், தன்னார்வ அமைப்புகள், மக்கள் அனைவரும் திரண்டு இத் திட்டத்தை துரிதப்படுத்தக் கோரவேண்டும்.
திருகோணமலையில் இதயம் தொடர்பான நோயினால் ஏற்படும் உயிரிழப்பையும், பொருளிழப்பையும் தடுக்க ஒவ்வொருவரும் முயற்சிக்வேண்டும்.
நன்றி.
க.துஷ்யந்தன்.

