புதினங்களின் சங்கமம்

இராணுவத்தைக் காப்பாற்றிய சுமந்திரன்!! கடுப்பில் விக்கி!! நடந்தது என்ன?

சர்வதேச விசாரணை பொறிமுறையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதற்கே இந்தியாவின் முன்னாள்
பிரதம நீதியரசர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன குழுவை நேற்று
சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உதாரணம் காட்டியுள்ளதாக வட மாகாண முன்னாள்
முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன்
விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் மக்களை இனப்படுகொலைக்கு உள்படுத்தி நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வல்லுறவுக்கு
உட்படுத்திய இலங்கை இராணுவத்தை காப்பாற்றும் வகையில் மனித உரிமைகள் சபையில் தமிழ்
தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் செயற்பட்டார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை தொடர்பில் விளக்கம் ஒன்றை அளித்து நீதியரசர்
விக்னேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றம் ஒன்றை சட்டரீதியாக அமைக்க
முடியாது என்ற இலங்கை அரசின் வாதம் தவறானது என்பதை சுட்டிக்காட்டுவதற்காகவே நீதியரசர்
பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன குழுவை ஒரு உதாரணமாக நான் நேற்று
சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அறிக்கையின் எந்த இடத்திலும் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை போன்ற ஒரு
குழுவை அமைக்க வேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை. இலங்கையில் உள்நாட்டில் அமைக்கப்பட்ட
உள்ளக ஆணைக்குழுவான உடலகம விசாரணை ஆணைக்குழுவை மேற்பார்வை செய்வதற்காக அமைக்கப்பட்டதே
பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழு என்றும் சர்வதேச தராதரங்கள் மற்றும் விதி
முறைகளுக்கு அமைவாக இந்த உள்ளக ஆணைக்குழு செயற்படவில்லை என்று பகவதி தலைமையிலான
குழு தன்னைத் தானே கலைத்தமை இலங்கையில் ஏன் சர்வதேச விசாரணை அவசியம் என்பதையும்
எடுத்துக் காட்டுகின்றது என்றும் தெளிவாக எனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன்.

ஆகவே, பகவதி ஆணைக்குழுவின் உதாரணம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சர்வதேச
விசாரணை பொறிமுறையையே எடுத்துக்காட்டுகிறது.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு சர்வதேச விசாரணை
பொறிமுறை ஒன்றே தீர்வு என்பதில் நான் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறேன். இதனை பல
சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி அதற்கான பணிகளையும் ஆரம்பித்துள்ளேன். இலங்கையை சர்வதேச
குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லவேண்டும் என்று செப்டெம்பர் 2018 இல் நான்
முதலமைச்சராக இருந்தபோது வட மாகாண சபையில் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளேன்.

இவ்வாண்டு மார்ச் மாதம் மனித உரிமைகள் சபை அமர்வுகளுக்கு முன்னதாக வடக்கு கிழக்கில்
மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளிலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு
இலங்கையைக் கொண்டு செல்லவேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டன. நானும் இந்த அனைத்து
ஆர்ப்பாட்டங்களிலும் கலந்துகொண்டேன்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கையை கொண்டுசெல்ல வேண்டும் என்று நான் எனது
அறிக்கைகளிலும் திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளேன். அத்துடன் ஐ. நா மனித உரிமைகள்
சபை ஆணையாளருக்கு எழுதிய கடிதத்திலும் இதனை வலியுறுத்தியுள்ளேன்.

திடீரென்று சூனியத்தில் மூழ்கிக் கிடந்த ஒருவர் விடுபட்டு வந்தது போல் தான் இதுகாறும்
கூறியதை மறந்து எம்மைக் குற்றம் சாட்டுகிறார் ஒருவர்.

இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்பதை தொடர்ந்து மறுத்துவரும் தமிழ் தேசிய
கூட்டமைப்பின் பேச்சாளரான இவர் இந்த இனப்படுகொலையை நடத்தி, நூற்றுக்கணக்கான எமது
பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை இராணுவத்தை காப்பாற்றும் வகையில்
ஜெனீவா மனித உரிமைகள் சபையில் செயற்பட்டுள்ளமை எனக்கு கவலையையும் வருத்தத்தையும்
அளிக்கிறது.

இதனை எமது மக்கள் மன்னிக்கமாட்டார்கள். சர்வதேச விசாரணை எப்பொழுதோ முடிந்துவிட்டது
என்று வாதிட்டுவந்தமையையும் எமது மக்கள் மறந்துவிட மாட்டார்கள்- என்றுள்ளது.