“இரவிரவாக விழித்திருந்து சிகிச்சையளித்து நோயைக் குணமாக்கி வீட்டுக்கு அனுப்பினோமே .. ஒரு தாதியின் ஆதங்கம்!!
சமூகவலைத்தளத்தில் வந்த பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
இரவிரவாக விழித்திருந்து சிகிச்சையளித்து நோயைக் குணமாக்கி வீட்டுக்கு அனுப்பினோமே ..
எல்லாவற்றையும் சரியாக நிறைவேற்றினோமே …
போகும்பொழுது ஒருதரம் நன்றி என்று கூறாவிட்டாலும் பரவாயில்லை …
இப்படி சமூகவலைத் தளங்களில், ஊடகங்களில் எம்மைப்பற்றி விமர்சிக்கின்றார்களே…
இதற்கு மேலாக எப்படி எம்மால் தரமான சேவையை வழங்கமுடியும் …. ”
இது மருத்துவப் பணியாளர்கள் பலரின் அண்மைக்கால அங்கலாய்ப்பு
எல்லோரும் கொஞ்சம் கவனியுங்கள்
நோயாளிகளும், உறவினர்களும், பொதுமக்களும் எதனை தரம் என்று உணர்கின்றார்கள்
அவர்களால் உணரப்படும் தரமான சேவை அவர்களுக்கு கிடைக்கின்றதா?
அவர்கள் உணரும் தரத்திற்கும் நாங்கள் வரைவிலக்கணப்படுத்தும் தரத்திற்கும் இடையில் ஏதாவது வித்தியாசமுள்ளதா?
ஆம் …
தரத்தில் இருவகைகள் உள்ளன. முதலாவது தொழிநுட்பத் தரம் (Technical Quality), மற்றையது செயன்முறைத் தரம் (Functional Quality).
வேலைத்தலத்தில் அணிவதற்காக உங்களுக்கு சேலையொன்றை வாங்க கடைக்குச் செல்வதாக எண்ணிக்கொள்ளுங்கள். உங்களுக்கு, நீங்கள் வாங்க விரும்பும் சேலை தொடர்பில் சகல நியமங்களும் தெரிந்திருக்கும். இது நீங்கள் எதிர்பார்க்கும் சேலையின் தொழிநுட்பத்தரமாகும்.
இப்பொழுது நீங்கள் கடை A யிற்கு செல்கின்றீர்கள். அங்கு பணியாளர்கள் உங்களை சிறந்த முறையில் கவனிக்கின்றார்கள். உங்களுக்கு பிடித்தமான சேலையைத் தெரிவு செய்ய நீங்கள் காட்டும் அத்தனை சேலையையும் தட்டில் இருந்து இறக்கி மேசையில் போடுகின்றார்கள். இது நீங்கள் கடை தொடர்பில் உணரும் செயன்முறைத் தரமாகும்.
இப்பொழுது நீங்கள் உங்களுக்கு பிடித்த சேலையைத் தெரிவு செய்து விலையைக் கேட்க்கின்றீர்கள். 15000 ரூபா என்று கூறுகின்றார்கள்.
உங்களுக்கு விலை அதிகம் என்று தோன்றியதால் கடை B யிற்கு செல்கின்றீர்கள். அங்கு உபசரிப்பு சரியில்லை. உங்களுக்கு போதியளவில் சேலையைத் தெரிவு செய்யப் பணியாளர்கள் உதவவில்லை. எப்படியோ கடை A யில் நீங்கள் தெரிவுசெய்த அதே சேலையை நீங்கள் கடை B யிலும் கண்டுபிடிக்கின்றீர்கள். இங்கே அதன் விலை 10000 ரூபா.
இப்பொழுது எந்த கடையில் நீங்கள் சேலையை வாங்குவீர்கள்?
நிச்சயாமாக எனது விடை B ஆகும்.
உங்களில் பெரும்பாலானோரின் விடையும் அதுவாகவே இருக்கும்.
இரு கடைகளிலும் தொழிநுட்பத்தரம், அதாவது சேலையின் தரம் ஒரே அளவிலானது.
ஆனால் கடை A யின் செயன்முறைதரம் B யை விட உயர்ந்தது..
அவ்வாறாயின் ஏன் நாங்கள் எல்லோரும் கடை B யில் சேலையை வாங்கவேண்டும்?
உங்களுக்கு தொழிநுட்ப தரம், செயன்முறைதரம் இரண்டையும் மதிப்பிட முடியுமாயின் உங்கள் முன்னுரிமை எப்பொழுதும் தொழினுட்பத் தரத்திற்கே வழங்கப்படும். செயன்முறை தரம் நன்றாக இருந்தமைக்காக 5000 ரூபாவை கூடுதலாகக் கொடுத்து சேலை வாங்க நீங்கள் தயாரில்லை.
இப்பொழுது வைத்தியசாலைக்கு வரும் நோயாளர், உறவினர்களை எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு சேலையின் தொழினுட்பத் தரம் தெரிந்தமை போன்று அவர்களுக்கு வைத்தியசாலையில் வழங்கப்படும் சிகிச்சைகள், அதனால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் தொடர்பில் விளங்கிக்கொள்ளும் மருத்துவ அறிவு இருக்காது. அதாவது மருத்துவ சேவைகளின் தொழினுட்ப தரத்தை மதிப்பிடும் இயலுமை அவர்களிடம் இருக்காது.
எனினும் அவர்கள் நீங்கள் அவர்களுடன் தொடர்பாடும் முறைமை, பராமரிக்கும் விதம், அவர்களுக்கு தேவையான நோய் தொடர்பான தகவல்களை வழங்கும் உங்களின் ஆற்றல் என்பவற்றில் இருந்து உங்களின் செயன்முறைத்தரத்தை மதிப்பிடுகின்றார்கள்.
உங்களின் செயன்முறைத்தரத்தை வைத்து உங்களினதும் வழங்கப்படும் சிகிச்சையினதும் தொழினுட்ப தரத்தை மதிப்பிட முயற்சிக்கின்றார்கள்.
இப்பொழுது உங்கள் கேள்விகளுக்கான விடை கிடைத்திருக்கும் என நினைக்கின்றேன்.
உங்களுக்கு எத்தனை PhD கள் உள்ளன, நீங்கள் எத்தனை மணிவரை விழித்திருந்து சிகிக்சை வழங்கினீர்கள் என்பது நோயாளருக்கும், உறவினர்களுக்கும் சிகிச்சையின் பெறுமதியையும் உங்களின் திறமை, தியாகத்தையும் உணர்த்தாது.
மாறாக உங்களின் தொடர்பாடல் திறன், ஒத்துணர்வு (Empathy), பிரதிபலிக்கின்ற பரிவான சேவை (Responsiveness) போன்ற செயன்முறைத் தரத்தை அதிகரிக்கும் செயற்பாடுகளே நோயாளர்கள் மற்றும் உறவினர்கள் மத்தியில் உங்களின் சேவையின் மதிப்பினை உணர்த்திடும்.
சுருங்கச் சொல்வதாயின் மருத்துவப் பணியாளர்கள் வெறும் கேக் ஆக இருக்காமல் ஐசிங் கேக்காக மாறினால் உங்களின் சேவையின் தரம் உலகால் உணரப்படும்.
Functional quality, but not the technical quality is perceived by the patients and relatives. Hence while keeping your technical quality in higher level, improving functional quality will make the patients and relatives value your services more at your hospital

