புதினங்களின் சங்கமம்

யாழில் 17 வயது தர்மிகா துாக்கில் தொங்கி இறந்தமை தொடர்பாக சந்தேகித்த சமூக ஆர்வலர் பொன்ராசா மீது வழக்கு!!

சமூக ஆர்வலரும் ஊடகவியலாளருமான பொன்ராசா அவர்களின் பேஸ்புக் பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்….
தர்மிகா தொடர்பான பேஸ்புக் பதிவு;
நீதிமன்றில் ஆஜராக எனக்கு அழைப்பு!
வட்டுக்கோட்டை முதலிகோயிலடியைச் சேர்ந்த கேதீஸ்வரன் தர்மிகா என்ற சிறுமி கல்வியங்காட்டிலுள்ள வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்டமை குறித்து நான் முகப்புத்தகத்தில் தரவேற்றிய பதிவு தொடர்பாக விசாரணை செய்வதற்கு யாழ்ப்பாண நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் மரணத்திலுள்ள உண்மைத்தன்மையை ஆராய்ந்து அறிக்கையிடுமாறு ஊடகவியலாளர்களிடம் வேண்டுகோள் விடுத்து நான் பதிவொன்றைத் தரவேற்றியிருந்தேன்.
இதே செய்தியை வெளியிட்ட சமூகம் மீடியாவுக்கும் எனக்கும் எதிராக யாழ்.போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி.யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
கடந்த 10 ஆம் திகதி யாழ்.பொலிஸ் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது.
இது தொடர்பாகவே எதிர்வரும் 5 ஆம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
{எனது பதிவு இணைக்கப்பட்டுள்ளது}
ஊடக நண்பர்களுக்கு….
வட்டுக்கோட்டையை சேர்ந்த சிறுமி ஒருவர் அண்மையில் பலியான விடயம் தொடர்பாக இதுவரை உங்களால் ஏன் உண்மையைக் கொண்டுவர முடியவில்லை?
குறித்த சிறுமி எங்கு வேலைக்கு அமர்தப்பட்டிருந்தார்? சிலர் வைத்தியர் வீடு எனக் கூறுகின்றனர், சிலர் விரிவுரையாளர் வீடு எனக் கூறுகின்றனர், இதுவரை அது தொடர்பாக கண்டறிந்து ஏன் உண்மை வெளிப்படுத்தப்படவில்லை?
இந்த விடயத்தில் மரண விசாரணை அதிகாரி குறித்த சிறுமியின் சம்பளம் பணத்தை வீட்டு உரிமையாளர்களிடம் பெற்று பெண்ணின் தாயாரிடம் ஒப்படைத்த காரணம் என்ன?
நீதிமன்றம் செய்யவேண்டிய பணியை அவர் ஏன் செய்தார்? அவருக்கு அந்த அதிகாரததை வழங்கியது யார்?
சிறுமியின் மரணத்தில் மர்மம் இருந்த நிலையிலும் சடலத்தை எரிக்குமாறு உத்தரவிட்டது யார்?
தயவுசெய்து இந்த விடயங்களை வெளிக்கொண்டு வாருங்கள்.
நானும் ஒரு ஊடகவியலாளன்தான்.. ஆனால் தற்போது களத்தில் இல்லை… களத்தில் நின்றபோது எப்படிப் பணியாற்றினோம் என்பதை அறிந்தவர் சிலருளர்.
களத்தில் நின்றால் உங்களிடம் இதை எதிர்பார்க்கவேண்டிய தேவை வந்திருக்காது என நம்புகின்றேன்.