வவுனியா ”தாதா” சுகந்தன், மனைவியை எரித்துக் கொன்றவர்களில் 5 பேர் கைதானது எப்படி?
வவுனியா தோணிக்கல், சேக்கிழார் வீதியில் வீடொன்றிற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தி, வீட்டிற்கு தீ வைத்து எரித்த சம்பவத்தில் கணவன்-மனைவி உயிரிழந்ததுடன், எட்டுப் பேர் காயப்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை வவுனியா பொலிஸார் தடுத்து வைத்து விசாரித்து வருகிறார்கள்.
இரண்டு குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் முரண்பாட்டின் காரணமாக சந்தேகநபர்கள் குழு மிகவும் கவனமாக ஏற்பாடு செய்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தாக்குதலில் சுமார் பத்து பேர் ஈடுபட்டுள்ளதாகவும், இந்தத் தாக்குதல் பல நாட்களாக திட்டமிடப்பட்டதாகவும், தாக்குதலுக்காக கொண்டு வரப்பட்ட வாள்கள் மற்றும் பொல்லுகள் அப்பகுதியில் உள்ள குளத்தில் வீசப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா ஓமந்தையில் வசிக்கும் பாத்திமா சமீமா சாஹிதி (21) மற்றும் அவரது கணவர் சற்குணகுலசிங்கம் சுகந்தன் (35) ஆகிய இருவருமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த சுகந்தன் அந்த பகுதியின் வன்முறை கும்பல் தலைவனாகவும், மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களிலும், வட்டித் தொழிலும் ஈடுபட்டு வந்ததாக குறிப்பிடப்பட்டது. அவர் மிரட்டி பணம் பறிக்கும் காட்சிகளும் ஊடகங்களில் வெளியாகியிருந்தது.
உயிரிழந்த பாத்திமாவின் ஒன்றுவிட்ட சகோதரனான சுரேஸ் என்ற ரெலோ இயக்க பிரமுகரான வர்த்தகரின் வீட்டில் சில நாட்களாக தங்கியிருந்த போது, இந்த தாக்குதல் நடந்தது.
கடந்த 23ஆம் திகதி அதிகாலை அந்த வீட்டு உரிமையாளரான சுரேஸின் மூத்த மகளின் பிறந்தநாள் விழாவின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலின் பின்னர் வீட்டுக்குள் நுழைந்த சந்தேகநபர்கள் பெற்றோல், டின்னர், கழிவு ஓயிலை ஊற்றி வீட்டுக்கு தீ வைத்தனர். வீட்டிலிருந்தவர்கள் எரிகாயமடைந்தனர். அறையில் தங்கியிருந்த தம்பதியினர் தீயில் எரிந்தனர். பாத்திமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுகந்தன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்.
சந்தேகநபர்கள் பயன்படுத்திய மூன்று மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியுள்ள வவுனியா பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வவுனியா, தவுசிக்குளம், நெளுக்குளம், சிவபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த 27 வயதுக்கும் 33 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதாக அடையாளம் காணப்பட்ட 3 பேர் வெளிநாடு தப்பிச்செல்ல முடியாதவாறு அவர்களின் கடவுச்சீட்டுக்கள் முடக்கப்பட்டுள்ளன.

