வவுனியா நெடுங்கேணியில் இரு முன்னாள் புலிப் போராளிகளுக்கிடையில் நடந்த சண்டையில் ஒருவரை சுட்டுக் கொன்றது ஏன்? நடந்தது என்ன?
வவுனியா – நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று (22) காலை கைது செய்யப்பட்டதாக நெடுங்கேணி பொலிசார் தெரிவித்தனர்.வவுனியா வடக்கு – பட்டிக்குடியிருப்பு பகுதியில் நேற்று (21) மாலை அழகையா மகேஸ்வரன் (58) என்பவர் இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
விவசாயியான அவர் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது பக்கத்து தோட்டத்தில் நின்ற ஒருவருடன் ஏற்பட்ட தகராறையடுத்து இந்த கொலை நடந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.உயிரிழந்தவருக்கும் கொலையாளிக்குமிடையில் தோட்ட எல்லை தொடர்பாக நீண்டகாலமாக முறுகல் காணப்படுகிறது.நேற்றும் முறுகல் ஏற்பட்டுள்ளது.அப்போது மகேஸ்வரன் மீது கொலையாளி கல் வீசி தாக்கியுள்ளார்.
இதனால் கோபமடைந்த மகேஸ்வரன் மண்வெட்டியை எடுத்துக் கொண்டு விரட்டிச் சென்றுள்ளார்.தப்பியோடியவர் பக்கத்திலுள்ள தனது வீட்டுக்கு சென்று அங்கிருந்த இடியன் துப்பாக்கியை எடுத்து வந்து சுட்டதில் மகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.குறித்த இருவரும் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள்.
மகேஸ்வரன் யுத்தத்தின் பின் புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்னர் விடுவிக்கப்பட்டார்.39 வயதான கொலையாளி ஒன்றரை வருடமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர் யுத்தம் முடிவதற்கு முன்னரே அந்த அமைப்பை விட்டு விலகி விட்டார்.
அவர் மீது சுமார் 5 வகையான வழக்குகள் உள்ளது.கடந்த வாரம் சட்டவிரோதமாக இடியன் துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.20ஆம் திகதி வவுனியா நீதிமன்றத்தால் அவருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தது.
அன்றைய தினமே தண்டப்பணத்தை செலுத்தி விட்டு வந்து மற்றொரு இடியன் துப்பாக்கியை பெற்று அதன் மூலமே சூடு நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவில் பட்டிக்குடியிருப்பு கிராமத்தில் ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர் இன்று (22) காலையில் கைது செய்யப்பட்டார். தன்னை இடியன் துப்பாக்கியினால் சுட முயன்றபோது, அதை பறித்து திருப்பிச் சுட்டதாக அவர் வாக்குமூலமளித்துள்ளார்.
நேற்று (21) இடியன் துப்பாக்கியால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.
அழகையா மகேஸ்வரன் (58) என்பவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.
உயிரிழந்தவருக்கும், கொலையாளிக்குமிடையில் தோட்ட எல்லை தொடர்பாக நீண்டகாலமாக முறுகல் காணப்படுகிறது.
கைதானவர் 42 வயதானவர்.
தோட்ட எல்லை தொடர்பாக இரு தரப்புக்கும் முறுகல் நிலவுவதாக கைதானவர் தெரிவித்துள்ளார். கொல்லப்பட்டவரும், உறவினர்களும் தனது வாய்க்காலை சேதப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
நேற்று தான் நெடுங்கேணி சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, கொல்லப்பட்டவரும், அவரது இரண்டு மகன்களும், கொல்லப்பட்டவரின் சகோதரரின் இரண்டு மகன்களும் தோட்டத்தில் நின்றதாக தெரிவித்துள்ளார்.
தனது தோட்ட வாய்க்காலில் கண்ணாடி துண்டுகள், சில கழிவுப்பொருட்களை அவர்கள் வீசியிருந்ததை அவதானித்து, அது தொடர்பில் கேட்டபோது சர்ச்சையேற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, மண்வெட்டி பிடியினால் அவர்கள் தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். தலையில் அடி விழுந்து, மண்டையோடு உடைந்து காயமேற்பட்டதாகவும், அடுத்த அடிகளை தடுத்த போது கையில் காயமேற்பட்டதாகவும் தெரிவித்தார்.
அவரது தலையில் காயமேற்பட்டுள்ளது. கை எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படும் விதமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல்கள், தற்போது கைதானவரின் தோட்டத்திற்குள்ளேயே நடந்துள்ளது. உயிரிழந்தவரும் மற்றவர்களும், தற்போது கைதானவரின் தோட்டத்தக்குள் நுழைந்தே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சமயத்தில் உயிரிழந்தவரின் மகன்களில் ஒருவர் இடியன் துப்பாக்கியை எடுத்து வந்ததாகவும், சம்பவ இடத்துக்கு வந்து, தன்னை நோக்கி சுட தயாரான போது, பாய்ந்து சென்று அவரை தள்ளிவிழுத்தியதாகவும், விழுந்தவரிடமிருந்து இடியன் துப்பாக்கியை பறித்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தன்னை பாதுகாத்துக் கொள்ள இடியனால் திருப்பிச் சுட்டதாகவும், ஒரு வெடி வைத்து விட்டு, இடியனுடன் அருகிலுள்ள காட்டுக்குள் தப்பியோடி விட்டதாகவும், அந்த துப்பாக்கி தன்னுடையதல்ல என்றும் தெரிவித்தார்.
காயத்துடன் காட்டுக்குள் தப்பியோடி சென்று, வலியுடன் படுத்திருந்ததாகவும், சற்று நேரத்தில் உறங்கி விட்டதாகவும், 6 மணிக்கு விழித்ததாகவும் தெரிவித்தார்.
பின்னர் தான் சரணடைய விரும்பும் தகவலை, காய்கறி வாங்க வரும்போது அறிமுகமான பாதுகாப்பு தரப்பிடம் தொலைபேசியில் தெரிவித்ததாகவும், அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு சென்ற நெடுங்கேணி பொலிசார், தன்னை கைது செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தான் விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கத்தவராக இருக்கவில்லையென்றும், புலிகளின் சமையல்கூடத்தில் சம்பளம் வாங்கும் பணியாளராக செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
-வவுனியா நிருபர் ரூபன்-
;

