புதினங்களின் சங்கமம்

தங்கச்சியும் தாயும் மன்றாட மன்றாட சுட்டுக் கொல்லப்பட்ட மல்லாவி டிலக்சன்!! நடந்தது என்ன?

கொலை வழக்கில் பிணையில் வந்தவர்… குடும்பத்தின் மன்றாட்டத்தை கணக்கிலெடுக்காமல் இளைஞன் சுட்டுக்கொலை; முல்லைத்தீவில் நடந்த மூர்க்கச் சம்பவத்தின் பின்னணி: வன்னியில் பரவலாகும் இடியன் கலாச்சாரம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவி பொலிஸ் பிரிவில் நேற்று முன்தினம் (9) இரவு வீட்டுக்குள் வைத்து இளைஞன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மல்லாவி, பாலி நகர் பகுதியில் நேற்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதே பகுதியை சேர்ந்த மகேந்திரம் டிலக்சன் (23) என்பவரே உயிரிழந்தார்.

குற்றக்கும்பல் உறுப்பினர்களுக்கிடையிலான முரண்பாடே இந்த கொலையில் முடிந்துள்ளது. கொல்லப்பட்டவர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மல்லாவியில் கடந்த வருடம் நடந்த கொலை சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்டு, ஒரு வருடம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு மாதங்களின் முன்னரே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

பிறந்தநாள் விருந்தில் கலந்து கொண்டு விட்டு போதையில் வந்த கும்பல், ஒருவரை வீதியில் வெட்டிக் கொன்றனர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றச்சாட்டில் 4 பேர் கைதாகி, ஒரு வருடம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் டிலக்சனும் ஒருவர்.

பாலையடி பிரதேசத்தில் வன்முறை, திருட்டில் ஈடுபடும் குற்றக்கும்பல் ஒன்றிற்கிடையில் ஏற்பட்ட முரண்பாடே இந்த கொலையில் முடிந்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்கு முன்னதாக, கடந்த 7ஆம் திகதி பாலையடி சந்திக்கு அண்மையாக டிலக்சன் தரப்பும் மற்றொரு தரப்பும் வீதியில் மோதிக் கொண்டுள்ளனர். பின்னர், இரு தரப்பும் சமரசப்பட்டு, வீடுகளிற்கு திரும்பியுள்ளனர்.

இந்த மோதலின் போது, எதிர்தரப்பிள்ள ஒருவருக்கு, டிலக்சன் இரும்புக் கம்பியினால் அடித்ததாக கூறப்படுகிறது.

9ஆம் திகதி மீளவும் வீதியில் இந்த தரப்புக்கள் மோதிக் கொண்டன. அப்போது இரண்டு தரப்பினராலும், மோதலில் ஈடுபட்டவர்கள் பிரித்து விடப்பட்டுள்ளனர்.

அன்று இரவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

இரும்புக் கம்பியினால் அடி வாங்கிய இளைஞரின் மைத்துனரே துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார். 28 வயதான அந்த நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று (10) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 9ஆம் திகதி இரவு துப்பாக்கிச்சூடு நடந்தது. தனது மைத்துனருக்கு இரும்புக் கம்பியினால் அடித்த டிலக்சனை பழிவாங்குவதற்காக, இடியன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு பாலையடி சந்திக்கு அவர் வந்தபோது, அவரது குழுவிலிருந்த சில நண்பர்கள் அவரை தடுக்க முனைந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாமென கூறி, இடியன் துப்பாக்கியை பறிக்கவும் முயன்றுள்ளனர்.

என்றாலும், துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக கருதப்படும் நபர், அதையெல்லாம் கேட்கவில்லை. மற்றொரு நண்பருடன் மோட்டார் சைக்கிளில் டிலக்சனின் வீட்டுக்கு சென்றுள்ளார்.

துப்பாக்கியுடன் அந்த நபர் புறப்பட்டதும், அந்த இடத்தில் நின்றவர்கள், தகவலை டிலக்சனுக்கு வழங்க வேண்டுமென தீர்மானித்துள்ளனர். ஒருவர் தொலைபேசியில் அழைப்பேற்படுத்தி, “பிரபு இடியனுடன் வாறன். வீட்ட நிற்காமல் எங்காவது மாறு“ என தகவல் குறிப்பிட்டுள்ளார்.

டிலக்சன் வீட்டை விட்டு செல்ல விரும்பினாலும், வீட்டிலிருந்தவர்கள் நம்பிக்கையூட்டியுள்ளனர். தாயார், தங்கை, தந்தை போன்றவர்கள் இருப்பதால் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையில், டிலக்சனை வீட்டுக்குள் விட்டு பூட்டி விட்டு, அவர்கள் வெளியில் காத்திருந்தார்கள். துப்பாக்கியுடன் வருவதாக குறிப்பிடப்பட்ட பிரபுவும், டிலக்சன் குடும்பத்துக்கு நன்கு அறிமுகமானவர். அதனால் பிரபுவை தடுத்து நிறுத்தலாமென டிலக்சனின் குடும்பத்தினர் நம்பியிருந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வீட்டு வளவுக்குள் நுழைந்த பிரபுவும் மற்றொருவரும், டிலக்சனை கேட்டுள்ளனர். குடும்பத்தினர் பிரபுவை சமரசப்படுத்த முயன்றுள்ளனர். எனினும், பிரபுவின் பழிவாங்கும் வெறி முன் அவை எடுபடவில்லை.

“பிரபு அண்ணா… ஒன்றும் செய்யாமல் போங்கோ… அண்ணா இனி உங்கட விசயங்களுக்கு குறுக்காக வர மாட்டார்“ என டிலக்சனின் தங்கை உள்ளிட்டவர்கள் மன்றாட்டமாக அழுதுமுள்ளனர்.

சிறிதுநேரம் இந்த பேச்சுவார்த்தைகள் நடந்தன.

பொறுமையிழந்த பிரபு, அவர்களையெல்லாம் தள்ளிவிட்டு வீட்டுக்கு வந்தார். யன்னலின் மேல் பக்கத்தில் உள்ள கிறில் அமைப்பில் இருந்த ஒரு பலகையை உடைத்து விட்டு, அதன் ஊடாக இடியன் துப்பாக்கியை வீட்டுக்குள் நுழைத்து, டிலக்சன் மீது சுட்டுள்ளார் என குடும்பத்தினர் குறிப்பிடுகிறார்கள்.

தலையில் காயமடைந்து அந்த இடத்திலேயே டிலக்சன் உயிரிழந்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் பிரபு அந்த இடத்திலிருந்து தப்பியோடி விட்டார். அவர் தலைமறைவாகினார். நேற்று கைது செய்யப்பட்டார்.

இடியன் துப்பாக்கியால் டிலக்சன் சுட்டுக்கொல்லப்பட்ட சிறிது நேரத்தில், அடையாளம் தெரியாத சிலர், பிரபுவின் மைத்துனரிற்கு- இரும்பு கம்பியினால் அடி வாங்கியவர்- வாளால் வெட்டியது. இதில் இருவர் காயமடைந்தனர். இரும்பு கம்பியினால் அடி வாங்கிய மைத்துனர், வாள்வெட்டால் படுகாயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். சிறிய காயமடைந்த மற்றொருவர் மல்லாவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் வீடு திரும்பினார்.

வன்னியில் தீவிரமடையும் இடியன் வெடி கலாச்சாரம்!

அண்மைக்காலமாக வடக்கில்- குறிப்பாக வன்னிப் பகுதிகளில் இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் ஆபத்தான கலாச்சாரம் வேகம் பெற்று வருவதை இந்த சம்பவமும் புலப்படுத்துகிறது. கடந்த இரண்டு வருடங்களில் வன்னிப் பிராந்தியத்தில் கொலை முயற்சிக்காக 11 வரையான இடியன் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் நடந்துள்ளன. இவற்றில் சுமார் 6 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

ஆரம்பத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த இடியன் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், தற்போது அடிக்கடி நடக்கும் சம்பவமாக மாறிவிட்டது.

இடியன் துப்பாக்கியை கொலை முயற்சிக்காக பயன்படுத்துபவர்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால், இடியன் துப்பாக்கியை வேட்டைக்காக, விவசாய நில பாதுகாப்புக்காக பயன்படுத்துபவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படலாம்.

உள்ளூர் உற்பத்தியான நாட்டு துப்பாக்கிகள் விவகாரத்தில் பொலிசாரும் மிக அதிக கறார் காட்டுவதில்லை. பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக இடியன் துப்பாக்கியே உள்ளது. வேட்டையாடுதல், வயல் காவல் போன்றவற்றிற்காக இடியன் துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இடியன் துப்பாக்கி மீது பாதுகாப்பு தரப்பு கறார் நடவடிக்கையெடுத்தால் இந்த பிரிவுள்ள மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். நாட்டு துப்பாக்கிகளால் மற்றவர்களை சுட்டுக்கொல்ல நினைக்கும் ரௌடிகளின் நடவடிக்கையாலேயே, நாட்டுத் துப்பாக்கி பயன்பாட்டுக்கு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளது.

முன்னார் சுமார் ரூ.4,500 இற்கே வாங்கக்கூடியதாக இருந்த இடியன் துப்பாக்கிகள் இப்பொழுது ரூ.25,000- 40,000 வரை அவற்றின் விலைகள் உயர்ந்துள்ளது.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நடந்த பிரதேசத்தில் பலர் இடியன் துப்பாக்கிகள் வைத்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் சொந்தமாக இடியன் துப்பாக்கி வைத்துள்ளார்.

இடியன் துப்பாக்கியும் ஒரு பகுதி மக்களின் வாழ்வாதார கருவியாக இருந்ததால், சட்டமும் இதில் கறார் காட்டவில்லை. சட்டவிரோதமாக உள்ளூரில் உற்பத்தியாகும் இந்தவகையான துப்பாக்கி வைத்திருந்து கைதாகும் ஒருவர், உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டு விடுவார். சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறு தொகை பணமே அபாராமாக விதிக்கப்படுகிறது.

சில துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

மன்னார்- மதவாச்சி பிரதான வீதியில் சிறுநீலாசேனை பகுதியில் மாரி தர்மராசா (41) சுட்டுக்கொலை.

2020 பெப்ரவரி 6– மாந்தை கிழக்கு, பாலைப்பாணியில் பால்ராஜ் ஜெகதீஸ்வரன் (48) சுட்டுக் கொலை.

நெடுங்கேணி – சேனைப்பிலவு பாலசுந்தரம் சத்தியகலா (34) மோட்டார் சைக்கிளில் வீதியில் சென்று கொண்டிருந்தபோது சுட்டுக்கொலை.
ஒக்ரோபர் 18- குறித்த சம்பவத்தில் நெடுங்கேணி, சிவா நகர் பகுதியைச் சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா (21) தனது வீட்டில் வைத்து சுட்டுக்கொலை.

&nbs வவுனியா நீலியா மோட்டையில் நியூட்டன் தர்சினி (26) என்ற இளம் குடும்பப் பெண்ணை சுட்டுக் கொன்றுவிட்டு, ஒரு தலைக்காதலனான சிவபாலன் சுஜாந்தன் (24) தன்னைத்தானே சுட்டு தற்கொலை.

இவை தவிர, மேலும் பல இடியன் துப்பாக்கி சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அண்மையில் கிளிநாச்சியில் காரின் மீது இடியன் துப்பாக்கியால் சுட்டது, ஓமந்தியில் மதுபோதையில் நண்பர் மீது இடியனால் சுட்டது உள்ளிட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளது.