புதினங்களின் சங்கமம்

யாழில் ஒரே நேரத்தில் 5 பூசகர்களின் 10 லட்சம் ரூபா பெறுமதியான கைத் தொலைபேசிகள் திருட்டு!!

யாழ்ப்பாணத்திலுள்ள அம்மன் கோயிலொன்றின் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்த 5 பூசகர்களின் ஐந்து கையடக்கத் தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 25 வயதான பூசகர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (09) திருட்டுச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த முறைப்பாட்டின் பிரகாரம் திருடப்பட்ட கைத்தொலைபேசிகளின் பெறுமதி 1 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாகும்.

ஜூலை 8 ஆம் திகதி கோயிலில் நடைபெற்ற பூஜையின் பின்னர், பூசகர்கள் நள்ளிரவில் கோயில் மண்டபத்தில் தூங்கியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. அதிகாலை 4.15 மணியளவில் அவர்கள் கண்விழித்தபோது, அவர்களது தொலைபேசிகள் காணாமல் போனது தெரியவந்தது.

5 பூசகர்களும் கையடக்கத் தொலைபேசிகளை தரையில் வைத்துவிட்ட உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேளையில் கைத்தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.