மன்னார் உயிலங்குளத்தில் விபத்து ஏற்படுத்தி திட்டமிட்டு சிறிதரனை கொலை செய்தது யார்?
மன்னார் உயிலங்குளம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (4) மாலை இடம்பெற்ற விபத்தில் நபர் ஒருவர் பட்டா ரக வாகனத்தினால் மோதுண்டு இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து திட்டமிட்ட கொலை என செய்திகள் வெளியாகி உள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மன்னார் நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவரும்,உயிலங்குளம் கால்நடை வைத்திய அலுவலகத்தில் கடமையாற்றுபவருமான செபமாலை சிறிதரன் (55) என தெரிய வந்துள்ளது.
மன்னார் உயிலங்குளத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்னர் நொச்சிக்குளம் கிராமத்தில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.
இந்த கொலையை தொடர்ந்து உயிலங்குளம் மற்றும் நொச்சிக்குளத்தை சேர்ந்வர்களுக்கிடையில் தொடர்ந்து வாய்த்தர்க்கமும், மோதலும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த நபர் உயிலங்குளம் மற்றும் நொச்சிக்குளத்தை சேர்ந்வர்களுக்கிடையில் இடம் பெற்ற மோதலின் போது காயமடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது, வைத்தியசாலைக்குள் வைத்து அவரது கழுத்தை வெட்டி கொல்ல முயற்சிக்கப்பட்டது. எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
அத்துடன், கடந்த வாரம் குறித்த நபரின் சகோதரர் மீது மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர்.
இந்த நிலையில் உயிலங்குளத்தைச் சேர்ந்த இரு சகோதரர்களின் கொலை தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகள் இடம் பெற்றதோடு, கொலை செய்யப்பட்ட இருவரது சகோதரர்கள் மற்றும் உறவுகளினால் உயிலங்குளம் பொலிஸார் தாக்குதல்களுக்கும் உள்ளாகி வந்துள்ளதாக தெரிய வருகிறது.
இந்தப் பின்னணியில், கடந்த செவ்வாய்க்கிழமை (4) மாலை இடம்பெற்ற விபத்தில் பட்டா ரக வாகனத்தை ஓடி வந்ததாகவும், அதில் இருந்து தப்பியதாகவும் கூறப்படும் இருவர் சரணடைந்த நிலையில் தற்போது உயிலங்குளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது..
பலிக்குப்பலி எடுக்கும் வகையில் குறித்த விபத்து பல இலட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டு இடம் பெற்றுள்ளமை தெரிய வருகிறது.
கடந்த வருடம் நொச்சிக்குளம் கிராமத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சகோதரர்கள் இருவரின் உறவுகள் சிலர், இந்த கொலையுடன் தொடர்புடைய நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர்களை பழி வாங்கும் நோக்குடன் தொடர்ந்து பல்வேறு சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றமை தெரிய வருகிறது.
குறித்த சம்பவத்தை திட்டம் தீட்டிய சிலர் மன்னாரில் இருந்து கொண்டு மறைமுகமாக செயல்பட்டு வருகின்றனர்.
உயிலங்குளம் பொலிஸாரிடம் உள்ள சந்தேக நபர்கள் இருவரும் பல்வேறு விடயங்களை பொலிஸாருக்கு வாக்கு மூலம் ஊடாக தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.

