புலிகளின் முன்னாள் உறுப்பினர் தங்கவேலு நிமலனுக்கு கடூழிய ஆயுள் தண்டனை!!
கொழும்பு பிரதேசத்தில் தற்காலை குண்டு தாக்குதலை நடத்துவதற்காக வெடிப் பொருட்கள் மற்றும் இரண்டு மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடூழிய ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
தங்கவேலு நிமலன் என்ற நபருக்கே இந்த ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு இரத்மலானை பிரதேசத்தில் இரண்டு மைக்ரோ ரக கைத்துப்பாக்கிகள், 1.5 கிலோ கிராம் அதிசக்தி வாய்ந்த சீ 4 ரக வெடி மருந்து மற்றும் தோட்டக்களை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் சட்டமா அதிபர், தங்கவேலு நிமலனுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
நீண்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி தமித் கொட்டவத்த, குற்றவாளிக்கு எதிராக முறைப்பாட்டாளர் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், குற்றவாளிக்கு கடூழிய ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிப்பதாகவும் நீதிபதி கூறியுள்ளார்.

