புதினங்களின் சங்கமம்

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டவர்களுக்கு கொழும்பில் அஞ்சலி: சிங்கள இனவாதிகள் புகுந்து குழப்பம்!

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 14 வருட நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை கொழும்பு பொரளைப் பகுதியில் நடைபெற்றபோது, இனவாத சிங்கள அமைப்பு இடையூறு செய்தது.

இன்று காலை 10.30 மணிக்கு அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

நினைவு நிகழ்வு அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், இராவண பலய அமைப்பு பதாதைகளை ஏந்தியவாறு நினைவேந்தலில் ஈடுபட்டவர்களை குழப்பும் முகமாக செயற்பட்டனர்.

இதன் போது ‘புலிகளின் நினைவேந்தல் வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது.

இதையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை அதிகரித்த நிலையில், பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

வடக்குகிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இடம்பெற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குழப்ப நிலை காரணமாக பொரளை சுற்றுவட்டத்திற்கு அருகில் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டனர்

அமைதியான முறையில் அஞ்சலி செய்தவர்களை அங்கிருந்து நகர்ந்து செல்லமாறு பொலிசார் கேட்டுக் கொண்டது, அஞ்சலி செலுத்தியவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.