முல்லைத்தீவு குடும்பஸ்தரின் திருவிளையாடல்!! லண்டன் செல்ல முற்பட்ட போது கட்டுநாயக்காவில் பிடிபட்டது எப்படி?
பிரித்தானிய பிரஜையொருவரின் தொலைந்து போன கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரித்தானியாவிற்கு தப்பிச் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த புதுக்குடியிருப்பை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மே 11ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பை சேர்ந்த 38 வயதுடையவரே கைதாகியுள்ளார்.
அவர் இலங்கை கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஏப்ரல் மாதம் இந்தியாவுக்குச் சென்று அங்கு வசிக்கும் தனது மாமாவிடம் பிரித்தானிய கடவுச்சீட்டை போலியாகத் தயாரிக்கச் சொன்னார்.
இந்தியாவில் உள்ள தரகர் ஒருவர், பிரித்தானிய பிரஜை ஒருவரின் தொலைந்து போன கடவுச்சீட்டின் பயோ டேட்டா பக்கத்தை மிக நுணுக்கமாக அகற்றி, இந்த இலங்கையரின் தகவலுடன் மாற்றியுள்ளார்.
பின்னர் மே 11 ஆம் திகதி நண்பகல் 12 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 122 விமானத்தில் இந்தியாவின் சென்னையில் இருந்து போலியான பிரித்தானிய கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
இந்தக் கடவுச்சீட்டு தொடர்பான வீசா வழங்குவதற்காக குடிவரவு அதிகாரிகள் கணினியில் தகவல்களை உள்வாங்கிய போது, சர்வதேச பொலிஸார் குறிப்பிட்டுள்ளபடி காணாமல் போன பிரித்தானிய பிரஜை ஒருவரின் கடவுச்சீட்டு என தெரியவந்துள்ளது.
பின்னர், குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் அவரது பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, அதில் அந்த நபரின் உண்மையான இலங்கை கடவுச்சீட்டு காணப்பட்டது. சந்தேகநபரும், அவர் மோசடியாக தயாரித்த பிரித்தானிய கடவுச்சீட்டும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
