பிரான்ஸ் காவாலிகளின் காசில் ஆவா குழு நடாத்திய விளையாட்டு சாமான் குண்டு!! யாழ் கஜமுகன் கராஜில் நடந்தது என்ன? (Photos)
யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் , யாழ்.இந்து ஆரம்ப பாடசாலைக்கு அருகில் உள்ள வாகன திருத்தகம் ஒன்றின் மீது இனம் தெரியாத நபர்கள் நேற்றிரவு (18) வெடி குண்டு வீசியுள்ளனர்.
வாகன திருத்தகத்தில் நின்ற கார் ஒன்றின் மீது விழுந்து வெடிகுண்டு வெடித்துள்ளது. இதனால் காரில் சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்த அதேநேரத்தில் வெடிக்காத நிலையிலும் குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட, அதிக சேதம் விளைவிக்காத- பட்டாசு பாணி வெடிபொருளே வீசப்பட்டுள்ளது. அதற்குள் கற்களும், போல்ஸ்சும் வைக்கப்பட்டுள்ளது.

டைனமற் வகை வெடிபொருள் மூலம் அந்த குண்டுகள் தயாரிக்கப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.பணக்கொடுக்கல் வாங்கல் விவகாரத்தின் எதிரொலியாகவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.
தற்போது தாக்குதலுக்குள்ளாகியுள்ள வாகன திருத்தகத்திற்கு கடந்த வாரம் கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. ஆவா குழுவின் பெயரில் அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
பிரான்சில் நடந்த பணக்கொடுக்கல் வாங்கலொன்றின் எதிரொலியாக அந்த மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இந்த வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாமென கருதப்படுகிறது.




