கள்ளக்காதல்!! மனைவியையும் மகளையும் கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற சுரேஸ்!!
தகாத உறவு பிரச்னையில், மனைவி மற்றும் 3 வயது குழந்தையை கொலை செய்துவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாமக்கல் மாவட்டம், மாணிக்கவேலூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநரான சுரேஷூக்கு, கௌரி என்ற மனைவியும், 3 வயதில் புகழ்வி என்ற பெண் குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரது வயலில், மூவரும் கழுத்து அறுபட்ட நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.
இதனைக் கண்டதும் அப்பகுதி மக்கள் மூவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், கௌரியும், 3 வயது குழந்தை புகழ்வியும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர்.
இதுகுறித்து விசாரணையை தொடங்கிய போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுரேஷிடம் விசாரித்தபோது, அவர் ஒரு தாளில் வீரக்குமார் என எழுதிக் கொடுத்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் சுரேஷின் வீட்டுக்கு அருகில் வசிக்கும் வீரக்குமாரை விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின.
சுரேஷின் வீட்டுக்கு அருகில் குடியிருக்கும் வீரக்குமாரும் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். சுரேஷ் தமது குடிசை வீட்டை அகற்றிவிட்டு புது வீடு கட்டத் தொடங்கியதால், பக்கத்து வீட்டில் தமது குடும்பத்தினரை தற்காலிகமாக இடம் மாற்றியிருக்கிறார். வேலை தொடர்பாக சுரேஷ் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, வீரக்குமாருக்கும் சுரேஷின் மனைவி கெளரிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இதையறிந்த சுரேஷ், இருவரையும் கண்டித்த நிலையிலும் தகாத உறவு தொடர்ந்துள்ளது. இதனால், இருவரையும் கொலை செய்ய திட்டமிட்ட சுரேஷ், மாலையில் மது அருந்துவதற்காக வயல்வெளிக்கு வரும்படி வீராக்குமாரை அழைத்துள்ளார். ஆனால் சந்தேகமடைந்த வீரக்குமார், வெளியில் இருப்பதாக கூறி அவரது அழைப்பை ஏற்க மறுக்கவே, தனது மனைவி குழந்தையுடன் வயலுக்கு சென்று மது அருந்தியுள்ளார் சுரேஷ்.
இரவு 7 மணியளவில், கெளரி மற்றும் குழந்தையைக் கழுத்தறுத்துக் கொலை செய்த சுரேஷ், தனது கழுத்தை தானே அறுத்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதேசமயம், வீடு கட்டுவது தொடர்பாக மற்றொரு பக்கத்து வீட்டாருக்கும் சுரேஷூக்கும் தகராறு இருந்ததாகவும், அதனால்தான் கொலை நடந்திருக்கலாம் என்றும் கௌரி குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
தகாத உறவு விவகாரத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையைக் கொன்று விட்டு கணவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் மாணிக்கவேலுாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.