கிளிநொச்சி நீதிமன்றத்துக்கு அருகில் தீப்பற்றி எரிந்த குடியிருப்பு பகுதிகள்!!(Photos)
கிளிநொச்சி நகரில் நீதி மன்றுக்கு பின்புறமாக மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் ஏற்பட்ட தீ கரைச்சி பிரதேச சபையினரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று (09) மதியம் 12 மணியளவில் நீதி மன்றுக்கு பின்புறமாக சிறைச்சாலைக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணியில் சிறை கைதிகளை கொண்டு துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்து.
இதன் போது ஏற்கனவே வீழ்த்தப்பட்டு காய்ந்திருந்த ஆலமரத்திற்கு தீ வைக்கப்பட்ட போதே அது பெரியளவில் சுவாலை எரிந்தது.
அத்தோடு மக்களின் குடியிருப்புகளில் உள்ள வான் பயிர்களுக்கும் பரவியது.
இதனையடுத்து கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயை கட்டுப்படுத்தியிருந்தனர்.
இருப்பினும் கரைச்சி பிரதேச சபையின் தீ அணைக்கும் செயற்பாடு அங்கிருந்த மக்களிடம் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
ஆரம்பத்தில் தீ அணைக்கும் இயந்திரம் மட்டுமே குறித்த இடத்திற்கு வருகை தந்து தீ அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது நீர் தீர்ந்து விட்டது.
இதனால் தீ அணைக்கும் பணி இடைநடுவில் முப்பது நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்பட்டிருந்தது.
அதன் பின்னர் அறிவிக்கப்பட்டு நீர்த்தாங்கிகள் மூலம் நீர் கொண்டுவரப்பட்டு ஒரு மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இச் செயற்பாடு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. ஒரு தீ அணைக்கும் நடவடிக்கைக்கு முற்றிலும் மாறான செயற்பாடு என மக்கள் விசனம் தெரிவித்தனர்.
அத்தோடு தீ அணைக்கும் இயந்திரத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஏறி நின்றுகொண்டு பயிற்றப்பட்ட தீ அணைக்கும் வீரர்களுக்கு இடையூறாக செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.
இதனால் விரக்கத்தியடைந்த தீ அணைப்பு வீரர்களின் மேற்பார்வை உத்தியோத்தர் ஒருவருக்கும் தனது கடகைளை மேற்கொள்ள முடியாத சூழல் காணப்பட்டிருந்தது.
கூடியிருந்த மக்கள் மத்தியில் தாங்கள் மக்கள் பணியாற்றுவதாக காட்டும் பொருட்டு தீ அணைப்பு வீரர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் செயற்பாடுகள் மக்களிடத்தே விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
எனவே இனியொரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு நடந்துகொள்ளாது பயிற்றப்பட்டமைக்கு அமைவாக அவசர காலத்தில் தீ அணைக்கும் முறைகளுக்கு ஏற்ற வகையில் செயற்பட வேண்டும் எனவும் பொது மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.