முல்லைத்தீவில் சிங்களவர்களால் கட்டி வைத்து தாக்கப்பட்ட கந்தசாமி.!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாயில் தமிழ் கால்நடை வளர்ப்பாளரை கட்டிவைத்து தாக்கிய பெரும்பான்மையின திருடர்கள்; பாதிக்கப்பட்டவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் 20.02.23 அன்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், சிவந்தாமுறிப்பு பகுதியில், பெரும்பான்மை இனத்தவர்கள் குறித்த தமிழ் கால்நடைவளர்ப்பாளருக்குச் சொந்தமான கால்நடைகளைத் திருடமுற்பட்டதாகவும், குறித்த திருட்டமுயற்சியைத் தடுக்கும்போதே தாம் பெரும்பான்மை இனத்தவர்களால் கட்டிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கால்நடை வளர்ப்பாளர் தெரிவித்தார்.
கொக்குத்தொடுவாய் பகுதியில் வசித்துவரும் சிவக்கொழுந்து கந்தசாமி என்ற கால்நடை வளர்ப்பாளரே இவ்வாறு பெரும்பான்மை இனத்தவர்களால் தாக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றார்.
இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபரை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.
அதேவேளை கொக்குத்தொடுவாய் பகுதி தமிழ் மக்களின் கால்நடைகளை வெலிஓயா பகுதியைச்சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் தொடர்ச்சியாக திருடிவருவதாக அப்பகுதி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அவ்வாறு திருடப்படும்போது தடுக்கின்ற தமிழ் மக்களை, பெரும்பான்மை இனத்தவர்கள் தாக்குகின்ற சம்பவங்களும் தொடர்சியாக இடம்பெற்று வருவதாகவும் அப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் இனங்களுக்கிடையில் முறுகலைத் தோற்றுவிக்கும் அபாயம் எழுந்துள்ளதாகவும் கொக்குத்தொடுவாய் பகுதி தமிழ்மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந் நிலையில் இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலிரிடம் கொக்குத்தொடுவாய் மக்கள் முறையிட்டுள்ளனர்.
மேலும் இப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாணவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.

