புதினங்களின் சங்கமம்புலம்பெயர் தமிழர்

யாழில் கனடாவிலிருந்து வந்த அண்ணியின் 22 பவுண் நகைகளைத் திருடிய பல்கலைக்கழக மாணவி!! அண்ணன் தற்கொலை முயற்சி!!

யாழ் பல்கலைக்கழக மாணவி ஒருவா் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ் வலிகாமம் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி கனடாவிலிருந்து வந்த தனது அண்ணாவின் மனைவியின் நகைகளைத் திருடிய குற்றச்சாட்டிலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தனது சகோதரியின் மகளின் பிறந்ததின நிகழ்வுக்காக கனடாவிலிருந்து கணவன் மற்றும் குழந்தையுடன் இளம் குடும்பப் பெண் யாழ் சுன்னாகம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்துள்ளார். பிறந்தநாள் கொண்டாட்டம் முடிவடைந்த பின் வலிகாமம் பகுதியில் உள்ள தனது கணவனின் வீட்டில் இரு நாட்கள் குறித்த இளம் குடும்பப் பெண் தனது பிள்ளையுடன் தங்கியுள்ளார். இந் நிலையில் அப் பெண்ணின் 22 பவுண் நகைகள் ஒரே இரவில் காணாமல் போனதாகத் தெரியவருகின்றது. காலையில் எழுந்து பார்த்த போது அறை மேசையில் வைக்கப்பட்டி நகைகள் அடங்கிய கைப் பை காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த குறித்த பெண் இது தொடர்பாக தனது கணவன் மற்றும் கணவன் குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதே நேரம் குறித்த வீட்டின் பின் கதவு திறந்து அதிகாலை வேளை காணப்பட்டதுடன் அலவாங்கு ஒன்றும் கதவின் அருகில் இருந்துள்ளது. அத்துடன் வீட்டின் பின் கதவுப் பகுதியில் யாரோ இரவு நின்றதாக கணவனின் தங்கையும் கூறியுள்ளார். இதனால் திருடர்கள் புகுந்து களவு எடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டது. அங்கு வந்த பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மோப்ப நாய்களையும் வைத்து தேடுதல் நடாத்தியுள்ளனர். அவர்களின் விசாரணையில் வெளியில் இருந்து யாரும் வீட்டுக்குள் நுழையவில்லை என பொலிசார் முடிவெடுத்துள்ளனர். இதன் பின்னர் அவர்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தனித்தனியே விசாரணைகளை மேற்கொண்டனர். அதன் போதே வீட்டில் இருந்த பல்கலைக்கழக மாணவியான அண்ணனின் இளைய சகோதரி முன்னுக்குப் பின் முரனான வகையில் தகவல்களைக் கொடுத்ததாகத் தெரிகின்றது. இதன் பின்னர் மாணவியிடம் வீட்டில் வைத்து கடுமையான முறையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ளத் தொடங்கிய போது வீட்டில் வெளியே உள்ள மலசல கூடத்துக்கு அருகில் நிலத்தில் புதைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த நகைகள் மீட்கப்பட்டுள்ளது. மாணவியை பொலிசார் உடனடியாக பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளனர். இதே நேரத்தில் அவமானம் தாங்காது அண்ணன் வீட்டின் அறையை மூடி துாக்கில் தொங்க முற்பட்டதாகவும் மனைவி மற்றும் வீட்டில் இருந்த ஏனைய உறவுகளும் அயலவர்களும் கதவை உடைத்து அண்ணனை கழுத்தில் கயிறு இறுக்கியதால் ஏற்பட்ட சிறு காயத்துடன் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரியவருகின்றது.

இதே நேரத்தில் குறித்த மாணவியை வழக்கு விசாரணைகளில் இருந்து விடுவிக்க பொலிஸ் நிலையத்துக்கு கனடாவில் இருந்து வந்த அண்ணி சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. தாயை இழந்து தனது தந்தை மற்றும் இன்னொரு சகோதரனுடன் வாழும் நகைகளை எடுத்த குறித்த மாணவி வாகனச் சாரதி ஒருவரை காதலித்து வருவதாகவும் அதற்கு தந்தை மற்றும் இரு அண்ணன்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது. தனது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறுவதற்காகவே அண்ணியின் நகைகளை எடுத்ததாக மாணவி பொலிசாரிடம் தெரிவித்துள்ளாராம்.