புதினங்களின் சங்கமம்

விரைவில் மூடு விழாக் காணும் வடக்கின் வைத்தியசாலைகள்!

நாட்டின் முக்கியமான இரு துறைகளில் சுகாதாரமும் கல்வியும் பிரதானமானவை. அதிலும் சுகாதாரத்துறை மனித நேயத்துடன் உயிர்காக்குப் பெரும் பணியை ஆற்றுகின்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு துறையாகும்.
வடக்கு மாகாணத்தில் மாகாணத்துக்குக் கீழ் இயங்குகின்ற வைத்தியசாலைகளில் கதிரியக்கவியலாளர்கள், அவர்களுக்குரிய மேலதிக கொடுப்பனவுகள் சரியானமுறையில் வழங்கப்படாதமையால் தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெறுகின்றது. இதற்குப் பின்னணியில் பல அரசியல் காய்நகர்வுகள் இடம்பெறுகின்றனவோ என்றும் சந்தேகம் கொள்ள வைக்கின்றது.
இதன் காரணமாக யாழ்.மாவட்டத்தில் வலிகாமத்தில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலும் வடமராட்சியில் மந்திகை ஆதார வைத்தியசாலையிலும், சாவகச்சேரியில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும் தீவகத்தில் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையிலும் இலகுவாக சிகிச்சைகளைப் பெற்ற நோயாளிகள், ஒரு கதிரியக்கப் பிரதியைப் பெறுவதற்காக பணம், நேரம் என்பவற்றை விரயமாக்கி யாழ். போதனா வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை காணப்படுகின்றது.
ஏன், யாழ்.மாவட்டத்தைவிட, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மாவட்டப் பொது வைத்தியசாலைகளிலும்கூட இதே நிலைமையால் அங்குள்ள நோயாளர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையை நோக்கி பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அதிக பணம் செலவுசெய்து வரவேண்டிய நிலைமை காணப்படுகின்றது.
உண்மை நிலைமையை அப்பட்டமாகச் சொல்லப்போனால் வடக்கு மாகாணத்தின் சுகாதாரத்துறையை ஒட்டுமொத்தமாகவே இழுத்துமூடுகின்ற நிலைமை காணப்படுகின்றது என்றே சொல்லலாம். கதிரியக்கம் என்பது சுகாதாரத்துறையில் மிகவும் முக்கியமான ஒன்று. ஒருவர் விபத்தில் காயமடைந்தாலோ அல்லது ஏதாவது நாட்பட்ட நோவினால் வைத்தியசாலைக்கு வந்தாலோ நிமோனியா போன்ற உயிர் அச்சுறுத்தும் நோய்கள் ஏற்பட்டாலோ கதிரியக்கப் பிரதியை வைத்தே எவ்வாறான சிகிச்சையை வழங்குவது அல்லது சத்திரசிகிச்சையை அளிப்பதா என்பதை வைத்திய நிபுணர்கள் தீர்மானிப்பார்கள். இந்தக் கதிரியக்கம் இயங்காததால் தற்போது வடக்கு மாகாண முழு மக்களுக்கும் சேவையாற்றுகின்ற ஒரு நிலையமாக மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள யாழ்.போதனா வைத்தியசாலையே காணப்படுகின்றது என்றால், வடக்கு ஆளுநர், பிரதம செயலாளர் மற்றும் சுகாதாரத்துறைசார் நிர்வாக அதிகாரிகளின் அசண்டையீனத்தால் வடக்கின் சுகாதாரத்துறைக்கு மூடுவிழா விரைவில் நடத்தப்பட இருக்கின்றது என்றே கூறவேண்டும்.
வன்னி மாவட்டத்தில் சில வைத்தியசாலைகளில் ஒரு கதிரியக்கவியலாளரே கடமையாற்றுகின்றார். கதிரியக்க அச்சுறுத்தல் கொண்ட தொழிலாக இது காணப்படுவதால் அவர்களின் கடமைநாள்கள் ஏனைய அரச தொழில் போன்றல்லாது 4 நாள்கள் மட்டுமே காணப்படுகின்றது. ஏனைய மூன்று நாள்கள் அதைவிட அரச விடுமுறை நாள்களில் அவர்களுக்கு மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்பட்டாக வேண்டும். ஒரு கதிரியக்கவியலாளர் கடமையாற்றுகின்ற ஒரு வைத்தியசாலையில் அவர் 4 நாள்கள் மட்டுமே கடமையாற்றினால் மேலதிகக் கொடுப்பனவு வழங்கப்படாததால் அச்சுறுத்தல் மிக்க இந்தத் தொழிலை அவரால் ஏனைய மூன்று நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் ஆற்ற முடியாத நிலைமை. இந்தத் தினங்களில் நோயாளர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு செல்லவேண்டிய நிலைமையே வடக்கு மாகாணம் முழுவதிலும் உள்ளது. நிமோனியா போன்ற உயிர் அச்சுறுத்தல் உள்ள நோயாளர் ஒருவர் மாகாண வைத்தியசாலைக்கு வந்தாலோ அல்லது விபத்துமூலம் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்தாலோ மாகாண சுகாதார வைத்தியசாலைகளால் சரியான சேவைகளை வழங்கமுடியாத நிலைமை.இதைவிட, வவுனியா மாவட்டப்பொது வைத்தியசாலை, தெல்லிப்பழை ஆதாரவைத்தியசாலை போன்றவற்றில் நோயாளியின் உடலில் எந்த பாதிப்பு உள்ளது என்பதைக் கண்டறியும் சி.ரி.ஸ்கான் இயந்திரம் உள்ளது. இதனால் இந்த வைத்தியசாலையை நம்பிவருகின்ற நடுத்தர வர்க்க நோயாளி தனது உயிரைக்கூட இழக்க நேரிடும். பணபலம் படைத்த செல்வந்தர்கள் பெருமளவு பணத்தைச் செலுத்தி தனியார் வைத்தியசாலையில் சி.ரி.ஸ்கான், கதிரியக்கப் பிரதி போன்றவற்றைப் பெற்று தமக்குரிய வைத்தியத்தை மேற்கொள்வார்கள். ஆனால், பாதிக்கப்படப்போபவர்கள் சாதாரண மக்களும் நடுத்தர மக்களுமே ஆவர். இதனை நிர்வாகம் சார் அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் நோக்கவேண்டும்.
வடக்கு மாகாணத்திலே இரண்டாவது பெரிய வைத்தியசாலையாகிய தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் இரு கதிரியக்கவியலாளர்கள் மட்டுமே உள்ளார்கள். இங்கு பொது மருத்துவப் பகுதியில் கதிரியக்கமும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு பகுதியில் சி.ரி.ஸ்கானும் உள்ளன. அந்த இயந்திரம் புற்றுநோயாளர்களின் சிகிச்சைக்காக வழங்கப்பட்டதென்றாலும், அதிலே சி.ரி.ஸ்கான் மேற்கொள்ளலாம் என்பதால் இயந்திரம் ஓய்வாக இருக்கின்ற நேரத்தில் 300 மீற்றர் தூரத்துக்கு மேல் உள்ள புற்றுநோய் சிகிச்சைப்பிரிவுக்கு நடந்துசென்று சி.ரி. ஸ்கான் வைத்தியசாலைக் கதிரியக்கவியலாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. இந்த வருடம் இதுவரை 600 இற்கு மேற்பட்ட சி.ரி. ஸ்கான்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெல்லிப்பழையில் இந்த சேவை வழங்கப்படாவிட்டால் யாழ்.போதனா வைத்தியசாலைக்கே இந்த நோயாளர்கள் முன்பதிவு செய்து சென்றிருக்கவேண்டும். வவுனியா பொது வைத்தியசாலையிலும் சி.ரி.ஸ்கான் மேற்கொள்வதிலும் இதே நிலைமைதான்.
நாட்டின் 8 மாகாணங்களிலும் ஒழுங்காக சுகாதாரத்துறை இயங்குகின்ற நிலைமையில் வடக்கு மாகாணத்தில் மட்டும் பூதாகரமாக, அச்சுறுத்தல் மிகுந்த தொழிலாகிய இந்தக் கதிரியக்கவியலாளர்களின் சேவையை அவர்கள் சங்கடமின்றி வழங்குவதற்கு – அதன் பூரண பயனை சிரமங்களின்றி மக்கள் பெறுவதற்கு வடக்கின் நிர்வாகிகளாகிய ஆளுநரும் பிரதம செயலாளரும் சிந்தித்துச் செயற்படவேண்டும். சுகாதாரம் தொடர்பில் தமக்கு பூரண அறிவின்மை இருப்பின் – கதிரியக்கவியல் தொழில் பற்றிய அறிவின்மையாயின் – வைத்தியத்துறைசார்ந்த அனுபவம் மிக்க நிர்வாகிகளிடமோ அல்லது வைத்திய சாலைகளின் பணிப்பாளர்கள், அத்தியட்சகர்களிடமோ அல்லது வைத்திய நிபுணர்களிடமோ ஆலோசனை பெற்று வடக்கின் சுகாதாரத்துறையை மிளிரச் செய்வார்களாக!
தெல்லியூர் சி.ஹரிகரன்