புதினங்களின் சங்கமம்

சஹ்ரானின் மடிக்கணிணி, பெருந்தொகைப் பணம் மீட்பு

தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட பிரதான சூத்திரதாரியும் தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவருமான சஹ்ரானின் மடிக் கணிணி பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இன்று பொலிஸரால் மேற்கொள்ள்பட்ட சுற்றிவளைப்பின் போது அக்கரைப்பற்று, பாலமுனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து குறித்த மடிக்கணினியும் 35 இலட்சம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்ட ஒருவரின் பணம் சந்தேகத்திற்கிடமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலையடுத்து அம்பாறை மாவட்டம் பாலமுனை ஹுசைனியா நகரப் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சோதனையிட்டபோது அங்கிருந்து பெருந் தொகை பணமும் நகைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சுமார் 35 இலட்சம் ரூபா பணமும் ஒரு தொகை நகைகளும் கைப்பற்றப்பட்டதுடன், அட்டாளைச்சேனை பிரதேச ஆற்றங்கரைப் பகுதியில் வீசப்பட்டிருந்த மடிக் கணிணியொன்றும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலையடுத்து, அம்பாறை அரச புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்களும் அம்பாறை பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைந்து இன்று மேற்கொண்ட சுற்றி வளைப்புத் தேடுதலைத் தொடர்ந்து இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

தேசிய தௌஹீத் ஜமாஅத்துடன் தொடர்புபட்ட அம்பாறை மாவட்ட பிரதான செயற்பாட்டாளர் என சந்தேகத்தின் பேரில் கடந்த வாரம் கல்முனை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட ஒருவரது உறவினரின் வீட்டிலிருந்தே இப்பணத் தொகையும் நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. வீட்டின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் சந்தேத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட தேசிய தௌஹீத் ஜமாத்துடன் தொடர்பு பட்டவர் எனக் கூறப்படும் சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பாலமுனை ஹுசைனியா நகரப் பிரதேசத்தில் வசித்து வரும் தமது உறவினரிடம் வைத்திருக்குமாறு குறித்த பணத்தினையும் நகைகளையும் கையளித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் தமது உறவினரிடம் மடிக் கணிணியொன்றையும் வைத்திருக்குமாறு வழங்கியபோதிலும் அதனை ஏற்க அவரது உறவினர் மறுப்புத் தெரிவித்ததையடுத்து அதனை அவர் எடுத்துச் சென்று அட்டாளைச்சேனை பிரதேச ஆற்றங்கரையினை அண்டிய பகுதியில் வீசியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு வீசப்பட்ட மடிக் கணிணி நீரில் மூழ்கியிருந்த நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் அரச புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Image may contain: 2 people, outdoorNo photo description available.Image may contain: outdoorImage may contain: one or more people and outdoorNo photo description available.