யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல உணவகமொன்றில் நடந்த சம்பவம்!!
இன்று யாழ்ப்பாணத்தில் ஒரு பிரபல உணவகமொன்றில் இரவு உணவை உண்பதற்காகச் சென்றிருந்தேன்.
இளைஞனொருவன் மிகவும் கரிசனையாக மேசைகளைத் துடைத்துக் கொண்டிருந்தான்.
“தம்பி!” என்றவனை அழைக்க அவன் “ மே” என்றருகில் நின்ற ஒருவனை அழைத்தபோதுதான் தெரிந்து கொண்டேன், அவனொரு பெரும்பான்மை இனத்தவனென்று!
உடனே சிங்களத்தில் எனது உரையாடல் தொடங்கியது. நின்று நிதானமாக என் கேள்விகளுக்குப் பதிலளித்தவனிடம், இறுதியாக “நீங்கள் இங்க வேலைக்காக வந்துள்ளீர்களா?” என்றேன்.
“இல்லையில்லை யாழ் பல்கலையில்பயிலும் நான் இன்று என் நண்பனுக்காக இங்கே வேலை செய்கின்றேன்.” என்றான்.
“புரியவில்லை!” என்றேன்.
“ தினமும் மாலை ஆறு மணியிலிருந்து பதினொரு மணி வரை என் கண்டித நண்பன் வேலை செய்வான். இரவு உணவுடன் அறுநூறு ரூபா ஊதியம். இன்று நண்பன் ஊருக்குப் போய்விட்டான். அவனுக்காக நான் பணி செய்கின்றேன்.” என்றவனிடம்…
நான் “ உங்கள் வேலை எனக்குப் பிடித்திருக்கிறது. பகுதி நேரம் வேலை செய்துகொண்டே படிப்பது வெளிநாடுகளில் சாதாரணமானது. ஆனால் இங்கு அப்படிச் செய்வதை வெட்கமாகச் சிலர் கருதுகின்றனர். நீங்கள் இந்த வேலையினைச் செய்வது சிறப்பு! ஐந்து மணித்தியால வேலைக்கு (6-11)அறுநூறு ரூபாய் சம்பளம் போதாது
அதைவிட தினமும் இத்தகைய அதீத எண்ணெய் உணவுகளும் ஆரோக்கியக் கேடு” என்று நான் கூற
“என்ன செய்வது? எங்கள் நிலைமை அப்படி !” என்று கூறியவாறு இன்முகத்தோடு அடுத்த மேசையைத் துடைக்கச் சென்றவனிடம் கேட்டேன். ”நீங்கள் எந்த இடம்?” என்று…
“ தங்கொட்டுவ” என்றான். சிரித்தபடி,
படிக்குங் கால வறுமையை வெல்ல, இச்செயலொன்று நல்ல முன்னுதாரணம். வாழ்த்தி விடைபெற்றேன்.
அன்புடன்… N.K. Kajarooban
