புதினங்களின் சங்கமம்

பதில் ஜனாதிபதி தன்னுடைய பாணியில் பந்தை உருட்டி விட்டிருக்கிறார் – பந்து இப்போ உங்கள் பக்கம்!

தில் ஜனாதிபதி தன்னுடைய பாணியில் பந்தை உருட்டி விட்டிருக்கிறார் – பந்து இப்போ உங்கள் பக்கம்!
எதிர்கட்சிகளின் பிரமுகர்களே, காலம் உங்களுக்காக காத்திருக்கப் போவவதில்லை என்பதை நினைவில் வைத்திருங்கள்!
பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னுடைய வழமையான பாணியில் இப்போது பந்தை – சபாநாயகர், எதிர்கட்சிகள், நாடாளுமன்றிடம் உருட்டிவிட்டிருக்கிறார்.
எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பிரதமரையும் சர்வகட்சி அரசாங்கத்தையும் அமைக்குமாறு கோரியுள்ளார்.
நாளை நாடாளுமன்றம் கூடுவதிலும் சட்டச்சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. 19ஆம் திகதிக்கு முன் நாளை 15ஆம் திகதி நாடாளுமன்றை விசேடமாக கூட்டுவதாயின் 24 மணித்தியாலத்திற்கு முன் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிட வேண்டும். அதனால் நாளை கட்சித் தலைவர்கள் கூட்டத்தையே நடத்த தீர்மானித்திருக்கிறார்கள்.
சர்வதேச அழுத்தங்கள், உள்நாட்டில் மகாநாயக்கர்கள், சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களை அடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகார மையங்கள் அதிகாரிகளிடம் மிள ஒப்படைக்கப்படவுள்ளன.
நாடு திவாலாகிய நிலையில் புரட்சியாளர்கள், இடதுசாரிகளில் இருந்து வலதுசாரிகள் வரை அனைவரும் சர்வதேசத்தை அனுசரித்து போகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
சர்வதேசம் தான் விரும்பிய மொழிகளில் ஏனைய தரப்புகளுடன் பேசும். ஆனால் தன்னுடன் பேசும் ஏனைய தரப்பினர் தான் விரும் மொழியிலேயே பேசவேண்டும் என எதிர்பார்க்கும்.
ஜனாதிபதி கோட்டாபயவை அவரின் அதிகார மையத்தை வீழ்த்தும் வரை நிலவிய போராட்டங்களை ரசித்துக்கொண்டிருந்த சர்வதேசம், தனது நண்பர் ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக வந்தவுடன் வெளியிடுகின்ற அறிக்கைகளை விளங்கிக்கொண்டால் நமது விருப்பங்களுக்கும், சர்வதேசத்தின் விருப்பங்களுக்கும், அரசியல் அமைப்பின் விதிகளுக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும் இடையிலான யதார்த்தத்தை விளங்கிக்கொள்ள முடியும்.
ஆக சமூக வலைத்தளங்களில் வீரவசனங்கள் பேசுவதிலும், அறிக்கைகளை விடுவதிலும் உசுப்பேத்துவதிலும், தங்களை நாயகர்களாக வெளிப்படுத்தவதிலும் காலத்தை வீணடிக்காமல் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்ப்பவர்கள் தங்களுக்குள் ஒருமித்த ஏகோபித்த உடன்பாட்டிற்கு வரவேண்டும்.
அப்படி ஒரு உடன்பாட்டிற்கு நீங்கள் வரமாட்டீர்கள் குடுமிச் சண்டையில் காலத்தை வீணடிப்பீர்கள் என பதில் ஜனாதிபதி நம்புகிறார். அதனால் தான் பந்தை உங்கள் பக்கம் இப்போ உருட்டி விட்டு இருக்கிறார்.
நாடாளுமன்றம் கூடும்போது கூடட்டும். முதலில் நாடாளுமன்றிற்கு வெளியில் ஒரு மேசையில் ஒன்றாய் நீங்கள் கூடுங்கள்.
நாடாளுமன்றில் அங்கத்தவம் வகிக்கும் சர்வகட்சிகளிலும் இருந்து ஒப்பீட்டளவில் நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் இருக்கும் துறைசார்ந்தவர்களை சர்வகட்சி அரசாங்கத்திற்கு தேர்வுசெய்யுங்கள்.
அவர்களில் இருந்து அனைவரும் ஏகோபித்த குரலில், ஒருவரை பிரதமராக பெயரிடுங்கள். அதனை சபாநாயகருக்கும், பதில் ஜனாதிபதிக்கும் உடனடியாக அனுப்புங்கள்.
நாடாளுமன்றம் கூடும் போது உங்கள் பெரும்பான்மையை நிரூபித்து இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குங்கள். அதன் மூலம் பதில் ஜனாதிபதிக்கு கடிவாளத்தைப் போடுங்கள்.
இலங்கையின் இன்றைய சூழலில் சர்வதேசம் சட்டத்தின் ஆட்சியையும், அரசியல் ஸ்திரத்தன்மையையும், அமைதியையுமே எதிர்பார்க்கிறது.
ஏற்கனவே ஒருமுறை கிடைத்த சந்தர்ப்பத்தை தவறவிட்டது போன்று மீண்டும் தற்போதைய வாய்ப்பை தவற விட்டால், பதில் ஜனாதிபதி தன்னை ஆதரிக்கும் பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர்களையும், ஏனைய கட்சிகளில் தன்னை ஆதரிக்கும் உதிரிகளையும் இணைத்து இடைக்கால அரசாங்கத்தையும், பிரதமரையும் நியமிப்பார் என்பதனை உணர்ந்து நடைமுறைக்கு சாத்தியமான விடயங்கள் பற்றி சிந்தியுங்கள்.
எதிர்கட்சிகளின் பிரமுகர்களே, காலம் உங்களுக்காக காத்திருக்கப் போவவதில்லை என்பதை நினைவில் வைத்திருங்கள்!