புதினங்களின் சங்கமம்

வீடுகளிலும், வைத்தியசாலைகளிலும் சடலங்கள் நிரம்பிக் கிடக்கக்கூடும் என எச்சரிக்கை

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலர்ச்சாலை உரிமையாளர்களும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
இறுதிக்கிரியைகள், அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படாமையால், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மரண சடங்குகளுக்கான பணிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்தாபகர் கவிந்து பனாகொட தெரிவித்தார்.

இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை தீர்வு கிட்டவில்லை என அவர் குற்றஞ்சுமத்தினார்.

வரிசைகளில் காத்திருந்தாலும், போதுமான அளவு எரிபொருள் கிடைப்பதில்லை என கவிந்து பனாகொட கூறினார்.

இந்நிலை தொடருமானால், எதிர்வரும் நாட்களில் வீடுகளிலும் வைத்தியசாலைகளிலும் சடலங்கள் நிரம்பிக் கிடக்கக்கூடும் என கவிந்து பனாகொட சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, எரிபொருள் பற்றாக்குறையினால் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்வதிலும் பின்னர் வீடுகளுக்கு கொண்டு செல்வதிலும் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்தார்.

தூர பிரதேசங்களில் வசிப்போரின் உறவினர்கள் நகர் பகுதிகளில் உயிரிழக்கும் பட்சத்தில், அவர்களுடைய இறுதிக்கிரியைகளை நகரிலேயே செய்ய வேண்டிய நிலையும், இதனால் குடும்ப அங்கத்தவர்களுக்கு இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக திடீர் மரண விசாரணை அதிகாரி சுட்டிக்காட்டினார்.