புதினங்களின் சங்கமம்

யாழில் கள்ளக்கரண்ட் பாவித்த பெண்ணுக்கு நீதிமன்றில் அதிகூடிய அபராதம்!!

இலங்கை மின்சார சபையின் மின் வழங்கலை மோசடியாகப் பயன்படுத்தி உல்லாசமாக வாழ்ந்து
சபைக்கு 11 லட்சத்து 37 ஆயிரம் ரூபா இழப்பை ஏற்படுத்திய பெண்ணை கடுமையாக எச்சரித்த
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ். பீற்றர் போல், 50 ஆயிரம் ரூபா தண்டம் விதித்து
விடுவித்தார்.

அத்துடன், மின்சார சபைக்கு ஏற்பட்ட 11 லட்சம் ரூபா 37 ஆயிரம் ரூபா இழப்பை ஒரு
வாரத்துக்குள் செலுத்தி முடிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

“பொது மக்களின் பாவனைக்குச் செல்லும் மின்சாரத்தை சூறையாடிய குற்றத்துக்கு மன்னிப்பளிக்க
முடியாது. இதே தவறை மீண்டும் செய்தால் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள்” என்று
யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ். பீற்றர் போல், குற்றவாளியை எச்சரித்தார்.

யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் உள்ள குடியிருப்பாளர் ஒருவருக்கு இலங்கை மின்சார சபையின்
மின் வழங்கல் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் குடியிருப்பை பொலிஸாரின் உதவியுடன் சோதனை
செய்த போது, மின் கட்டண மானியில் மோசடி செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

அதனடிப்படையில் வாடிக்கையாளரின் வீடு சோதனையிடப்பட்டது. அங்கு காணப்பட்ட மின்
சாதனங்களின் அடிப்படையில் கணக்கிடப்பட்டு மின்சார சபைக்கு 11 லட்சத்து 35 ஆயிரம் ரூபா
இழப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

அதனடிப்படையில் கடந்த மாதம் வாடிக்கையாளரான பெண், யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது
செய்யப்பட்டார். அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு பிணையில்
விடுவிக்கப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு வழக்கு இன்று யாழ்ப்பாணம் நீதிமன்றில் நீதிவான் ஏ.எஸ். பீற்றர் போல்
முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மின்சாரத்தை மோசடியாகப் பயன்படுத்தி மின்சார சபைக்கு 11 லட்சத்து 37 ஆயிரம் ரூபா
இழப்பை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டுப் பத்திரத்தைப் பொலிஸார் தாக்கல் செய்தனர்.
சந்தேகநபரான பெண் குற்றத்தை ஏற்றுக்கொள்வதாக மன்றுரைத்தார்.

“குற்றவாளியின் குடியிருப்பு உல்லாச மாளிகை. அங்கு 4 குடும்பங்கள் வசிக்கின்றனர்.
நான்கு அறைகளுக்கு வளிச்சீராக்கிகள் (AC) பொருத்தப்பட்டிருந்தன. வீட்டின் நடுவே சினிமா
தியேட்டர் அமைக்கப்பட்டிருந்தது” என்று பொலிஸார் மன்றுரைத்தனர்.

“பொது மக்களின் பாவனைக்குச் செல்லும் மின்சாரத்தை சூறையாடிய குற்றத்துக்கு மன்னிப்பளிக்க
முடியாது. இதே தவறை மீண்டும் செய்தால் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவீர்கள். இந்தக்
குற்றத்துக்கு சாதாரணமாக 10 ஆயிரம் தண்டப் பணம் அறவிடப்படும். ஆனால் இது பாரதூரமானது
என்பதால் 50 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படுகிறது.

தண்டப்பணம் இன்று உடனடியாக மன்றில் செலுத்தப்படவேண்டும். மின்சார சபைக்கு ஏற்பட்ட 11
லட்சத்து 37 ஆயிரம் ரூபா இழப்பை ஒரு வாரத்துக்கள் செலுத்தப்படவேண்டும் வழக்கு வரும் 6ஆம்
திகதி கூப்பிடப்படும். அன்றைய தினம் மின்சார சபைக்குச் செலுத்திய இழப்பீட்டுக்கான
பற்றுச்சீட்டை மன்றில் சமர்க்கப்படவேண்டும்” யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ். பீற்றர் போல்
கட்டளையிட்டார்.