புதினங்களின் சங்கமம்

வடமாகாணசபை உயரதிகாரி ஊடாக மணிவண்ணனை புளொட்டில் சேர்க்க ஆயத்தம்!!!

வடக்கு மாகாணசபையின் அதி உயர் அதிகாரியாக உள்ள ஒருவர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியால் கழற்றி விடப்பட்டுள்ள மணிவண்ணனை புளொட் அமைப்பில் சேர்த்து மாகாணசபையில் போட்டியிட வைப்பதற்கான ஆயத்தங்கள் நடைபெறுவதாக இரகசியத் தகவல்கள் கசிந்துள்ளன.

குறித்த உயரதிகாரி காலம் காலமாக புளொட் அமைப்பின் தீவிர செயற்பாட்டாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. புளொட் அமைப்பினரால் இயக்கப்படும் இணையத்தளம் ஒன்றும் மணிவண்ணனை பப்பாவில் ஏற்றும் செயற்பாட்டைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுகட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த யாழ் மாநகரசபை மேயரான ஆனோல்ட் மீண்டும் மாநகரசபைக்கு வரும் போது அவரை மேயர் பதவியிலிருந்து அகற்ற சைக்கிள் கட்சி மற்றும் ஈ.பி.டி.பி கட்சிகள் சேர்ந்து திட்டம் தீட்டியிருந்தன. இருப்பினும் சைக்கிள் கட்சியில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அச் செயற்பாடு குழம்பியது. இந் நிலையில் மணிவண்ணண் மற்றும் அவரது ஆதரவாளர்களான மாநகரசபை உறுப்பினர்களை அரவணைத்துச் செல்லும் நடவடிக்கையில் யாழ் மாநகர மேயர் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

சைக்கிள் கட்சியில் இருந்து அகற்றபட்ட மணிவண்ணன் எடுப்பார் கைப் பிள்ளையாகச் செயற்படுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கொள்கை, கோட்பாடு என்றால் என்ன விலை என்று கேட்கும் அளவுக்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் சுமந்திரன், சிறிதரன் போன்றவர்கள் செய்த அலங்கோல வேலைகளை பார்த்துக் கொண்டு ’மிக்சர் சாப்பிடும் ஒருவராக’ இருந்த சித்தார்த்தனுடன் மணிவண்ணன் சேர்ந்தால் நிச்சயம் மணிவண்ணன் புளொட் தலைவராகும் வாய்ப்பு கிடைக்கும் என சிலர் கருத்துத் தெரித்துள்ளனர்.