இது சீரியஸான பதிவு அல்ல. மனதிற்குள் சிரிப்பை வரவழைத்த நிகழ்வு என்பதால் இதை எழுதுகிறேன்.!!
இது சீரியஸான பதிவு அல்ல. மனதிற்குள் சிரிப்பை வரவழைத்த நிகழ்வு என்பதால் இதை எழுதுகிறேன்.
• இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச. மகிந்தவிற்கு பிறகு நாமலை ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ கொண்டுவரவேண்டும் என மகிந்த குடும்பம் நினைத்தது.
அதை மனதில் வைத்து திட்டங்கள் வகுக்கப்பட்டன. 2010 பாராளுமன்ற தேர்தலில் நாமல் MP யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.அவர் முதல் முறையாக MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவரின் வயது வெறும் 24 தான்.
இந்த முறை MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டபோது நாமலை விளையாட்டுத்துறை அமைச்சராக (Minister of Youth and Sports) நியமித்தார்கள்.
அதாவது படிப்படியாக மக்களின் மனதில் உள்நுழைப்பதற்கான முயற்சிகளில் ஒன்று இது.
• #மகிந்தவின் வரலாறு மிக சுருக்கமாக.
மகிந்த ராஜபக்ச எனும் அரசியல்வாதி இலங்கை அரசியலில் பிரபல்யமான நபராக முன்னர் இருந்தவர் அல்ல. 2004 இற்கு முன்பு, சந்திரிகா குமாரதுங்க அரசில் மகிந்த பத்தோடு பதினொன்றாக இருந்த ஒரு அமைச்சர்தான்.
ஆனால் 2005 இல் மகிந்த ஜனாதிபதியாக வந்தவுடன், மகிந்தவின் சகல சகோதரர்களும் , குடும்ப உறுப்பினர்களும் ஒற்றுமையாக செயல்பட்டு அதிகாரத்தை வலுவாக பிடித்து கொண்டனர்.
2009 இல் யுத்தத்தை வென்ற பின்னர் மகிந்த ராஜபக்சவின் பிம்பம் பல மடங்காக பெரிதானது.
யாராலும் வீழ்த்தமுடியாத விடுதலை புலிகளை வீழ்த்திவிட்டார் என்ற பிரமிப்பில் சிங்கள மக்கள் அவரை ‘நவீன துட்டகமுனுவாக’ பார்த்தார்கள்.
இலங்கை அரசியலில் முன்னர் இருந்த பெரும் அரசியல் தலைவர்களை விட மகிந்தவின் செல்வாக்கு என்பது சக்திவாய்ந்ததாக மாறியது.
இந்த புள்ளியில் இருந்துதான் தனது குடும்பமே இலங்கை அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதற்கான காய்களை நகர்த்த தொடங்குகிறார்.
அதற்கான தொடக்கமாகத்தான் நாமலை 2010 இல் MP ஆக்குகிறார்.அதன் பிறகு விளையாட்டுத்துறை அமைச்சர்.
• #மகிந்த சகோதரர்களின் வழக்கம்
மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதர்கள், சகோதரிகள் எல்லோரும் ஒற்றுமையாக செயல்பட்டு அதிகாரத்தை வலுவாக பிடித்திருந்தார்கள் என மேலே குறிப்பிட்டிருந்தேன்.
அவர்களுக்குள் எத்தனை கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மாதத்திற்கு ஒருமுறை சகல குடும்ப உறுப்பினர்களும் ஒன்றுகூடல் செய்வது வழக்கம்.
இந்த ஒன்றுகூடலை நடத்துவதில் பெரும்பாலும் மகிந்தவின் சகோதரியே பெரும் பங்குவகிப்பதாக உள்வட்டார தகவல்கள் கூறுகின்றன.
அனைத்து குடும்ப உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு அடுத்த 25 ஆண்டுகளுக்கும் ராஜபக்ச சகோதரர்களே இலங்கை அரசியலில் செல்வாக்காக இருப்பதை தக்கவைப்பதே இந்த ஒன்றுகூடலின் பிரதான இலக்காக இருந்தது.
இந்த முறை கோத்தபாயவை ஜனாதிபதியாக ஆக்கியதில் கூட மகிந்தவிற்கும் மற்றைய சகோதர்களுக்கும் இடையே எழுதப்படாத ஒப்பந்தங்கள் இருந்தன.
இந்த முறை கோத்தபாயவை ஜனாதிபதியாக ஆக்கினால், நாமல் 40 வயதை கடந்த பின்னர் அவரை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு மற்றவர்கள் வழிவிட வேண்டும் என்பதே அந்த எழுதப்படாத ஒப்பந்தம். காரணம் அந்த நேரத்தில் தனது உடல்நிலை மோசமாகியிருக்கும் என மகிந்த கருதியிருந்தார்.
நாமலை அடுத்த ஜனாதிபதியாக்குவதில் மகிந்தவின் மனைவி கடும் உறுதியாக இருப்பதாகவும், இதனால் மகிந்தவின் சகோதரர்களுடன் கூட அவர் முரண்பட்டிருந்தார் என்பதும் உள்வட்டார தகவல்.
ஆக இவ்வளவு துல்லியமாக இலக்குகளை நிர்ணயித்துத்தான், 2009 இற்கு பிறகு மகிந்தவின் குடும்பம் அரசியலில் காய்களை நகர்த்தி கொண்டிருந்தது.
ஆனால் இலங்கையை தாக்கிய பொருளாதார நெருக்கடி மகிந்த குடும்பத்தின் அத்தனை எதிர்கால திட்டங்களையும் சல்லி சல்லியாக நொறுக்கிவிட்டது. இன்று மகிந்த குடும்ப உறுப்பினர்கள் உயிருக்கு அஞ்சி வெளிநாட்டிற்கு போக முயற்சிப்பதாக தகவல்கள் வருகின்றன.
இந்த மேலேயுள்ள பதிவை வாசித்து வந்தால் இதைப்போன்ற ஒரு குடும்பம் தமிழ்நாட்டிலும் இருக்கிறதே என உங்களுக்கு தோன்றலாம்.
ஆம் கருணாநிதியின் குடும்பம்தான்.
• #தமிழ்நாட்டின் நாமல்
இங்கே நாமலுக்கு பதில் உதயநிதி ஸ்டாலின்.
கவனமாக 2021 சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு.
‘நீ நடித்த படம் கெத்து. நீதான் தமிழ்நாட்டின் சொத்து’ என்று கட்சியின் மூத்த தலைவர்கள் புகழ் மாலை பாட, இப்பொழுது அதே விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை கொடுப்பதற்கான காயை நகர்த்துகிறார்கள்.
சரியாக ஸ்டாலினின் உடல்நிலை மோசமாகும்போது, உதயநிதியை முதலமைச்சராக கொண்டு வருவதற்கான சகல திட்டங்களும் வெகு வேகமாக அரங்கேறுகின்றன.
அதனது முதல் பகுதிதான் தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் தினமும் உதயநிதிக்கு பாடப்படும் புகழ்மாலைகள்.
அங்கு நாமலின் அம்மா. இங்கு உதயநிதியின் அம்மா துர்கா ஸ்டாலின்.
அங்கு நாமலின் அம்மா தனது மகனின் ஜனாதிபதி பதவிக்காக மகிந்தவின் மற்ற சகோதரர்களுடன்
முரண்பட்டார்.
இங்கு துர்கா ஸ்டாலின் தனது மகன் உதயநிதி அடுத்த முதலமைச்சராக வரவேண்டும் என்பதற்காக கனிமொழியை தட்டி வைக்கிறார்.
அங்கே மகிந்தவின் குடும்பம் இலங்கை அரசியலை தமது ஆதிக்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக , மாதம் ஒருமுறை ஒன்றுகூடலை நடத்தி ஒற்றுமையாக செயல்பட்டார்கள்.
இங்கே தமிழ்நாட்டில் கருணாநிதியின் குடும்பம் தமிழ்நாட்டு அரசியலை தமது ஆதிக்கத்திற்குள் வைத்திருக்கவேண்டும் என பல சமயம் தமது முரண்பாடுகளை மறந்து ஒற்றுமையுடன் செயல்படுகிறது.
மகிந்த குடும்பத்திற்கு இன்று நடப்பதை மெதுவாக மனதில் அசை போட்டு கொண்டிருந்தபோது இயல்பாகவே கருணாநிதியின் குடும்பம்தான் ஞாபகத்திற்கு வந்தது. சிரிப்பும் வந்தது. அதனால்தான் இந்த பதிவு.
க.ஜெயகாந்த்