யாழில் பஸ்சை மறித்து காவாலிக்குழு நடாத்திய தாக்குதல்!! தடுக்க வந்த ஆமிக்காரர் மீது அடி!! நடந்தது என்ன!! (Photos)
பருத்தித்துறையில் இருந்து கொழும்பு நோக்கி நேற்று முன்தினம் (13.02.2022)ஆம் திகதி மாலை ஏழு முப்பது மணி அளவில் சென்று கொண்டிருந்த பேருந்து மீது கோப்பாய் சமிக்கை விளக்கு பகுதியில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. கோப்பாய் சமிக்கை விளக்கு பகுதியில் பேருந்து தரித்து நின்றபோது அவ்விடத்துக்கு வந்த இருவர் அடங்கிய குழு ஒன்று முதலில் தாக்குதலை மேற்கொண்டது.
எனினும் குறித்த பேருந்தின் சாரதி திருப்பித் தாக்கத் தொடங்கிய போது அந்த கும்பலில் வந்தவர்கள் இறங்கி பேருந்தை முந்திச் செல்ல முடியாதவாறு மெதுவாக மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றதுடன் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதன் பின்னர் அந்த பகுதிக்கு மேலும் 6 பேர் அடங்கிய கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளில் வந்துள்ளது. வந்த கும்பல் அந்த பேருந்தை தாக்க தொடங்கியபோது கோப்பாய் சமைக்கை விளக்குப் பகுதியில் இருந்த ராணுவத்தினர் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அவர்களை தடுக்க முற்பட்டபோது ராணுவத்தினர் மீதும் குறித்த கும்பல் தாக்குதல் நடத்தியதாக தெரியவருகின்றது. எனினும் ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தத் தொடங்கியபோது குறித்த கும்பல் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளது.
எனினும் தப்பிச் சென்ற குழுவில் இருந்த ஒருவர் அப்பகுதியில் இருந்த இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்திய போதும் ஒன்றரை மணித்தியாலதுக்கு மேல் குறித்த சம்பவ இடத்துக்கு கோப்பாய் பொலிசார் வரவில்லை எனவும் பின்னர் அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டபோதே கோப்பாய் பொலிசார் அந்த இடத்திற்கு வந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த பேரூந்து சாரதி ஆசனத்திற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 2 லட்சம் அளவிலான பண தொகையும் இதன்போது கொள்ளையிடப்பட்டள்ளது என பேருந்து உரிமையாளரால் தெரிவிக்கப்பட்டது. குறித்த பேருந்து பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமானது. அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் இவ்வாறு வீதிகளில் பயணிப்போர் மற்றும் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தும் குழு ஒன்று அவர்கள் கொண்டுவரும் பொருட்களை, பணத்தை கொள்ளை இடுவதாக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த புதன்கிழமை இவ்வாறு சுன்னாகம் பகுதியில் இருந்து புத்தூர் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளானார். அவர் பயணித்த முச்சக்கர வண்டியை நிறுத்தியபோது அவர் அந்த இடத்தில் நிறுத்தாமல் தப்பிச் சென்ற போது அந்த கும்பல் அவரை தலைக்கவசத்தினால் தாக்கியதால் அவர் கையில் காயம் அடைந்துள்ளார்.
அவ்வாறு யாழ்ப்பாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற சட்டத்தரணி ஒருவருடைய திருமண நிகழ்வுக்கு சென்று வந்தவர்கள் மீதும் இணுவில் வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பகுதியில் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. எனினும் குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைக்கப் பெற்றதன் பின்னர் இளைஞர் குழு ஒன்று பச்சை மட்டை களுடன் குறித்த இடத்துக்குச் சென்ற போதும் அவர்களை கண்டவுடன் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. குறித்த தாக்குதலில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் உட்பட மேலும் பலர் காயமடைந்தனர்.




